உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர் திருத்தங்கள் குறித்து பிரதமர் ஆலோசித்தார். பெட்ரோலிய பொருட்களின் ஆய்வு மற்றும் உரிமம் கொள்கை, எரிவாயு விற்பனை நிலக்கரி மற்றும் மீத்தேன் கொள்கை நிலக்கரி சுரங்கம் மறு சீரமைப்பு இந்திய எரிவாயு பரிமாற்றத்தில் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியா தற்சார்பு நிலையை அடைய இது போன்ற சீர்திருத்தங்கள் தொடரும். எண்ணெய்த்துறை பற்றிப் பேசிய பிரதமர் தற்போது வருவாயிலிருந்து உற்பத்தி அதிகரிப்பை நோக்கி கவனம் செலுத்தப்படுவதாக கூறினார். கச்சா எண்ணெய்க்கான சேமிப்பு வசதிகளை அதிகரிப்பதன் தேவை குறித்தும் அவர் பேசினார். நாட்டில் இயற்கை எரிவாயுக்கானத் தேவை வேகமாக அதிகரிப்பதை பற்றியும் அவர் பேசினார். எரிவாயு குழாய்கள் அமைப்பது, எரிவாயு விநியோகம், திரவ இயற்கை எரிவாயு மையங்கள் மூலம் மறுசீரமைப்பு ஆகியவை உட்பட தற்போதுள்ள எரிவாயு கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் அவர் பேசினார்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தக் கூட்டங்களில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் எண்ணெய் மற்றம் எரிவாயுத் துறை சந்திக்கும் சவால்களைப் புரிந்து கொள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியா வெளிப்படைத் தன்மை நம்பிக்கை மற்றும் வாய்ப்புகள் உள்ள நாடு எனவும் இங்கு புதியக் கருத்துக்கள், முன்னோக்குகள் மற்றும் புதுமைக் கண்டுபிடுப்புகள் நிறைந்துள்ளன எனவும் பிரதமர் கூறினார். இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இணைய வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் ராஸ்நெப்ட் நிறுவனத் தலைவர் டாக்டர் இகார் செச்சின், சவுதி ஹராம்கோ நிறுவனத் தலைவர் திரு அமீன் நசீர் பிரிட்டஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பெர்நாட் லூனே, ஐ.எச்.எஸ் மார்கெட் நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் டேனியல் எர்ஜின், ஸ்லம்பர்ஜர் நிறுவன சி.இ.ஓ திரு ஆலிவர் லீபெக் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் திரு முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் திரு அனில் அகர்வால் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மலிவான விலையில் எரிசக்திக் கிடைப்பது மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசின் சமீபத்தியச் சாதனைகளைத் தொழில்துறைத் தலைவர்கள் பாராட்டினர். தொலைநோக்கு மற்றும் லட்சிய இலக்குகள் மூலம் இந்தியாவில் சுத்தமான எரிசக்தி மாற்றத்தை நோக்கிய பிரதமரின் தலைமையை அவர்கள் பாராட்டினர். சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பத்திற்கான புதிய முறைகளை இந்தியா வேகமாக பின்பற்றுவதாகவும், உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலியை உருவாக்குவதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும் எனவும் அவர்கள் கூறினர். நிலையான மற்றும் சமமான எரிசக்தி மாற்றத்தை உறுதி செய்வது பற்றியும் அவர்கள் பேசினர். சுத்தமான எரிசக்தி மற்றும் நிலைத்தன்மை மேலும் மேம்படுத்துவது பற்றி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அவர்கள் வழங்கினர்.