சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வியப்பூட்டும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
மெய்நிகர் வடிவில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைக்கப்பட்டு பங்கேற்றனர். இந்தி மொழி பேசாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பேசுகையில், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, பிரதமர் அவர்களது மொழியிலேயே உரையாடினார்.
மாணவர்களின் நேர்மறையான, எதார்த்தமான அணுகுமுறையைப் பாராட்டிய பிரதமர், இது நாட்டுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்று கூறினார். மாணவர்கள் தங்களது சிரமங்களையும், சவால்களையும் வலிமையாக மாற்றிக் கொண்டிருப்பதைப் புகழ்ந்துரைத்த அவர், இதுதான் நமது நாட்டின் வலிமை என்று கூறினார். கலந்துரையாடலின் போது, மாணவர்களின் நம்பிக்கையை பிரதமர் பாராட்டினார்.
உங்களது அனுபவங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், அவை உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பயனளிக்கக்கூடியவை என்றும் பிரதமர் தெரிவித்தார். நாம் படிக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காணப்படும் குழு முயற்சி உணர்வை அவர் உதாரணமாகக் காட்டினார். கொரோனா காலத்தில், இந்தப் பிடிப்பினைகளை புதிய வழியில் நாம் கற்றுக் கொண்டதாகவும், இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாட்டின் ஒற்றுமை உணர்வைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம்தேதி, சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஏதாவது சிலவற்றை மாணவர்கள் செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அதேபோல, சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ம் தேதி, உங்கள் குடும்பத்தினருடன் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பதிவு செய்வதில் குடும்ப உறுப்பினர்களுக்கும், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உதவுமாறு மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.