“இந்தியா இன்று உலகளாவிய வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறிவரும் நிலையில், நாட்டின் கடல் வலிமையை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்”
“துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன”
"உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் திறனையும் நிலையையும் உலகம் அங்கீகரிக்கிறது"
"கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்குத் திட்டம், வளர்ச்சியடைந்த பாரதத்தின் கடல்சார் வலிமையை வலுப்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குகிறது"
"கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உலர் துறைமுகம் இந்தியாவின் தேசிய பெருமை"
"நாட்டின் நகரங்களில் நவீன மற்றும் பசுமையான நீர்வழிப் போக்குவரத்து இணைப்பில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியப் பங்கு வகிக்கிறது"

கேரள மாநிலம் கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான 3 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் (சி.எஸ்.எல்) புதிய உலர் துறைமுகம் (என்.டி.டி), கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் சர்வதேசக் கப்பல் பழுதுபார்க்கும் வசதி (ஐ.எஸ்.ஆர்.எஃப்), கொச்சி புதுவைபீனில் உள்ள இந்தியன் எண்ணெய்க் கழகத்தின் எல்பிஜி இறக்குமதி முனையம் ஆகியவை இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் ஆகும். இந்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தன்னிறைவை உருவாக்குவதற்கும் பங்கு வகிக்கும்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று காலை கோவிலில் குருவாயூரப்பனை வழிபட்டது குறித்து எடுத்துரைத்தார். சமீபத்தில் அயோத்தி தாமில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்தபோது, ராமாயணத்துடன் தொடர்புடைய கேரளாவின் புனிதக் கோயில்கள் பற்றி தாம் பேசியதையும் அவர் நினைவுகூர்ந்தார். அயோத்தி தாமில் பிராணப் பிரதிஷ்டைக்கு சில நாட்களுக்கு முன் ராமசாமி ஆலயத்தில் தரிசனம் செய்ய முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

அமிர்த காலத்தின் போது இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான  பயணத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் முக்கியமானது என்று அவர் கூறினார். முந்தைய காலங்களில் இந்தியாவின் செழிப்பில் துறைமுகங்களின் பங்கை நினைவுகூர்ந்த பிரதமர், இப்போது இந்தியா புதிய முன்னேற்றங்களை அடைந்து உலகளாவிய வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறிவருவதாகக் கூறினார். இந்நிலையில் துறைமுகங்களும் அதில் முக்கிய பங்கு வகிக்க்கின்றன என்று  அவர் தெரிவித்தார்.  இத்தகைய சூழ்நிலையில், கொச்சி போன்ற துறைமுக நகரங்களின் வலிமையை அதிகரிக்க அரசு செயல்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகத் திறன் அதிகரிப்பு, துறைமுக உள்கட்டமைப்பில் முதலீடு மற்றும் துறைமுகங்களுக்கு மேம்பட்டப்  போக்குவரத்து இணைப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.  

 

கொச்சிக்குக் கிடைத்துள்ள நாட்டின் மிகப்பெரிய உலர் துறைமுகம் பற்றி அவர் குறிப்பிட்டார். கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்த்தல், எல்பிஜி இறக்குமதி முனையம் போன்ற பிற திட்டங்களும் கேரளா மற்றும் நாட்டின் தென்பகுதியின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். புதிய வசதிகள் கப்பல் கட்டும் தளத்தின் திறன்களைப் பல மடங்கு அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

 

கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்த பிரதமர், இது இந்தியாவின் துறைமுகங்களில் புதிய முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாகவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். கடல்சார் விதிகளின் சீர்திருத்தங்கள், முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன என்று அவர் தெரிவித்தார். உள்நாட்டு நீர்வழித்தடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் கூறினார்.

 

அனைவரின் முயற்சி சிறந்த முடிவுகளைத் தருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியத் துறைமுகங்கள் இரட்டை இலக்க வருடாந்திர வளர்ச்சியை அடைந்துள்ளன என்று குறிப்பிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, துறைமுகங்களில் கப்பல்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதையும், சரக்குகளை இறக்குவதற்கு மிக நீண்ட நேரம் ஆனது என்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது என்று கூறிய திரு நரேந்திர மோடி, கப்பலின் முழு செயல்பாட்டு நேரம் என்று வரும்போது இந்தியா பல வளர்ந்த நாடுகளை விஞ்சியுள்ளது என்று தெரிவித்தார்.

 

உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் திறனையும் நிலையையும் உலகம் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடர்பாக இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை  அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும் இதனால்  வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை விரைந்து எட்ட வழி ஏற்படும் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதத்தில் கடல்சார் வலிமையை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் பெரிய துறைமுகங்கள், கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிகளை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

 

கொச்சியில்  அமைக்கப்பட்டுள்ள புதிய உலர் துறைமுகம் இந்தியாவின் தேசியப் பெருமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இது பெரிய கப்பல்களை நிறுத்த உதவுவதோடு, கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் பணிகளையும் சாத்தியமாக்கும் என்று அவர் தெரிவித்தார்.  இந்தப் பணிகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதுடன், அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.  

 

சர்வதேசக் கப்பல் பழுதுபார்க்கும் வசதியைத் திறந்து வைத்த பிரதமர், இது கொச்சியை ஆசியாவின் மிகப்பெரிய கப்பல் பழுதுபார்க்கும் மையமாக மாற்றும் என்றார்.   புதிய எல்பிஜி இறக்குமதி முனையம் கொச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கோழிக்கோடு, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களின் எல்பிஜி தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் பல்வேறு தொழில்களின் மேம்பாட்டுக்கு இது பங்களிக்கும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தி இந்தப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

 

கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் பசுமைத் தொழில்நுட்பத் திறன், உள்நாட்டில் கப்பல் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவது ஆகியவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார். கொச்சி நீர் மெட்ரோவுக்காக மின்சாரக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டிருப்பதையும் பிரதமர் பாராட்டினார். அயோத்தி, வாரணாசி, மதுரா, குவஹாத்தி ஆகிய இடங்களில் பயன்படுத்த பயணிகளுக்கான மின்சாரப் படகுகள் இங்கு தயாரிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பல நகரங்களில் நவீன மற்றும் பசுமையான நீர்ப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் கொச்சி கப்பல் கட்டும் தளம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார். நார்வே நாட்டிற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் புகை உமிழா மின்சார சரக்குப் படகுகள் குறித்தும், உலகின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட ஃபீடர் கொள்கலன் கப்பல் பணிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். கொச்சி கப்பல் கட்டும் தளம் இந்தியாவை ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பணியை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். மிக விரைவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் படகும் கிடைக்கும் என்று நம்புவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

 

நீலப் பொருளாதாரம் மற்றும் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மீனவ சமூகத்தின் பங்கு குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்ததற்குப் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள நவீனப் படகுகளுக்கு மத்திய அரசின் மானியம் மற்றும் விவசாயிகளைப் போலவே மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டைகள் ஆகியவை முன்னேற்றங்களுக்குக் காரணம் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கடல் உணவு பதப்படுத்தும் துறையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க அரசு ஊக்கமளிக்கிறது என்றும் இது மீனவர்களின் வருமானத்தைப் பெருமளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும்   அவர் கூறினார். கேரளாவின்  விரைவான வளர்ச்சி பற்றி மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

கொச்சியில் உள்ள சி.எஸ்.எல் வளாகத்தில் சுமார் ரூ .1,800 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உலர் துறைமுகம், புதிய இந்தியாவின் பொறியியல் திறனைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியத் திட்டமாகும். 75/60 மீட்டர் அகலம், 13 மீட்டர் ஆழம், 9.5 மீட்டர் வரை நீளம் கொண்ட இந்த 310 மீட்டர் நீளமுள்ள உலர் துறைமுகம் இப்பகுதியின் மிகப்பெரிய கடல் உள்கட்டமைப்புகளில் ஒன்றாகும். புதிய உலர் துறைமுகத் திட்டத்தில் கனமான தரை ஏற்றுதல் அமைப்பு உள்ளது. இது எதிர்கால விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் பெரிய வணிக கப்பல்கள் போன்ற பாதுகாப்பு சார்ந்த சொத்துக்களை கையாள்வதற்கான மேம்பட்ட திறன்களை இந்தியாவுக்கு அளிக்கும். இதனால் அவசர தேசிய தேவைகளுக்கு வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை அகற்றும்.

 

சுமார் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும்  (ஐ.எஸ்.ஆர்.எஃப்) திட்டம் அதன் சொந்த தனித்துவமான வசதியாகும். இது 6000 டன் திறன் கொண்ட கப்பல் லிஃப்ட் அமைப்பு, பரிமாற்ற அமைப்பு, ஆறு பணி நிலையங்கள், சுமார் 1,400 மீட்டர் பெர்த் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஒரே நேரத்தில் 130 மீட்டர் நீளமுள்ள 7 கப்பல்களுக்கு இடமளிக்கும். ஐ.எஸ்.ஆர்.எஃப் சி.எஸ்.எல்லின் தற்போதைய கப்பல் பழுதுபார்க்கும் திறன்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்தும். மேலும்,  கொச்சியை உலகளாவிய கப்பல் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

 

கொச்சி புதுவைப்பீனில்  சுமார் 1,236 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்திய எண்ணெய்க் கழகத்தின் எல்பிஜி இறக்குமதி முனையம் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 15,400 மெட்ரிக் டன் சேமிப்புத் திறனுடன், இந்த முனையம் பிராந்தியத்தில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு எல்பிஜியின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும். அனைவரும் அணுகக்கூடிய மற்றும் மலிவு எரிசக்தியை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்தும்.

 

இந்த 3 திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், நாட்டின் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் திறன், துணைத் தொழில்கள் உள்ளிட்ட எரிசக்தி உள்கட்டமைப்பின் வளர்ச்சி அதிகரிக்கும். இந்தத் திட்டங்கள் ஏற்றுமதி, இறக்குமதி  வர்த்தகத்தை அதிகரிக்கும். தளவாடச் செலவுகளைக் குறைக்கும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். தற்சார்பையும் ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage