புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், "நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம்" என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாடு (ICAE-ஐசிஏஇ) குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவைச் சேர்ந்த 12 கோடி விவசாயிகள், 3 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகள், 3 கோடி மீனவர்கள் மற்றும் 8 கோடி கால்நடை விவசாயிகள் சார்பில் அனைத்து பிரமுகர்களையும் வரவேற்பதாக அவர் கூறினார். 50 கோடிக்கும் அதிகமான கால்நடைகளைக் கொண்ட நாடு இந்தியா எனவும் விவசாயத்தையும் விலங்குகளையும் நேசிக்கும் இந்திய நாட்டிற்கு பிரதிநிதிகளை வரவேற்பதாகவும் பிரதமர் கூறினார்.
வேளாண்மை, உணவு குறித்த பண்டைய இந்தியர்களின் நம்பிக்கைகள் அனுபவங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய வேளாண் பாரம்பரியத்தில் அறிவியலுக்கும், தர்க்கவியலுக்கும் அளிக்கப்படும் முன்னுரிமையை அவர் விளக்கினார். உணவின் மருத்துவ குணங்களுக்குப் பின்னால் அறிவியல் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில்தான் விவசாயம் வளர்ந்துள்ளது என்று கூறிய பிரதமர், 2000 ஆண்டுகள் பழமையான விவசாயம் குறித்த நூலான 'கிருஷி பராஷர்' என்ற நூலை மேற்கோள் காட்டினார். இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சிக்கும் வேளாண் கல்விக்குமான வலுவான அடித்தள அமைப்பு இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன என்றும் வேளாண் கல்விக்காக 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 700-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்களும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் வேளாண் திட்டமிடுதலில் ஆறு பருவகாலங்களின் தொடர்பை எடுத்துரைத்த பிரதமர், 15 வேளாண் பருவநிலை மண்டலங்களின் தனித்துவமான பண்புகளைக் குறிப்பிட்டார். நாட்டில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால் விவசாய விளைபொருட்கள் விளையும் தன்மை மாறும் என்று அவர் குறிப்பிட்டார். நிலம், இமயமலை, பாலைவனம், தண்ணீர் பற்றாக்குறை பகுதிகள் அல்லது கடலோரப் பகுதிகள் என பல வகையான வேளாண் பகுதிகள் இந்தியாவில் இருப்பதாகவும், இந்தப் பன்முகத்தன்மை உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார். இதுவே இந்தியாவை உலகின் நம்பிக்கை ஒளியாக ஆக்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற வேளாண் பொருளாதார வல்லுநர்களின் சர்வதேச மாநாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், அப்போது இந்தியா புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தது என்றும், அது இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயத்திற்கும் சவாலான நேரம் என்றும் குறிப்பிட்டார். இன்று இந்தியா உணவு மிகை நாடாகவும், பால், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை, மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகிற்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று உலகளாவிய உணவு - ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருவதை சுட்டிக் காட்டினார். எனவே, உணவு முறை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது என்று கூறிய பிரதமர், வளரும் நாடுகள் எனப்படும் உலகின் தென் பகுதியினருக்கு இது நிச்சயம் பயனளிக்கும் என்றார்.
'உலக நண்பன்' என்ற முறையில் உலகளாவிய நலனுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேய்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார். உலகளாவிய நலனுக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நினைவுகூர்ந்த பிரதமர், 'ஒரே பூமி, ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்', சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கமான லைஃப்' இயக்கம், 'ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்' உள்ளிட்ட இந்தியா முன்வைத்த பல்வேறு முன்முயற்சிகளைக் குறிப்பிட்டார். மனிதர்கள், தாவரங்கள், விலங்குகளின் ஆரோக்கியத்தை குழிதோண்டிப் புதைத்து விடக்கூடாது என்ற இந்தியாவின் அணுகுமுறையைத் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். நிலையான விவசாயம் - உணவு முறைகளுக்கு முன்னால் உள்ள சவால்களை ஒரே பூமி, ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற முழுமையான அணுகுமுறையின் கீழ் மட்டுமே சமாளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் மையமாக விவசாயம் உள்ளது என்று கூறிய பிரதமர், இந்தியாவில் 90 சதவீத சிறு விவசாயிகள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்கள் என்றார். ஆசியாவில் உள்ள பல வளரும் நாடுகளிலும் இதேபோன்ற நிலைமை நிலவுகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் முன்மாதிரியை பொருத்தமானதாக அவர் கூறினார். இயற்கை விவசாயத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை பெரிய அளவில் ஊக்குவிப்பதன் சாதகமான பலன்களை நாட்டில் காண முடியும் என்றார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிலையான மற்றும் பருவநிலை-நெகிழ்திறன் விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதையும், இந்தியாவின் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க ஒரு முழுமையான சூழல் அமைப்பை உருவாக்க நடவடிக்பை எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். பருவநிலைக்கு ஏற்ற நெகிழ்திறன் கொண்ட பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சி - மேம்பாட்டிற்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் பருவநிலைக்கு ஏற்ப தட்பவெப்ப நிலையை தாங்கும் வகையில் சுமார் 1900 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றார். இந்தியாவில் பாரம்பரிய வகைகளை விட 25 சதவீதம் குறைவான தண்ணீர் தேவைப்படும் அரிசி வகைகளும், கருப்பு அரிசியும் ஒரு முக்கிய சிறப்பு உணவாக உருவானதை அவர் எடுத்துரைத்தார். மணிப்பூர், அசாம், மேகாலயாவில் கருப்பு அரிசி அதன் மருத்துவ மதிப்பு காரணமாக விருப்பமான தேர்வாக உள்ளது என்று கூறினார். இந்தியா தமது அனுபவங்களை உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்து சவாலின் தீவிரத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். 'குறைந்தபட்ச நீர் - அதிகபட்ச உற்பத்தி' என்ற அற்புத உணவின் தரத்தைக் கருத்தில் கொண்டு ஒரு தீர்வாக சிறுதானியங்களை அவர் முன்வைத்தார். இந்தியாவின் சிறுதானிய உற்பத்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டாடப்பட்டதைக் குறிப்பிட்டார்.
விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதற்கான முன்முயற்சிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், மண் வள அட்டை, சூரிய ஒளி விவசாயம், விவசாயிகளை எரிசக்தி அளிப்பவலர்களாக மாற்றுதல், டிஜிட்டல் வேளாண் சந்தையான இ-நாம், கிசான் கடன் அட்டை, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை குறித்தும் பேசினார். பாரம்பரிய விவசாயிகள் முதல் வேளாண் புத்தொழில்கள் வரை, பண்ணை முதல் உணவு மேசை வரை வேளாண் சார்ந்த துறைகளை முறைப்படுத்துவது குறித்தும் அவர் பேசினார். கடந்த 10 ஆண்டுகளில், 90 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நுண் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதால், விவசாயம் - சுற்றுச்சூழல் இரண்டும் பயனடைகின்றன என்று அவர் கூறினார்.
இந்தியாவில் வேளாண் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விளக்கிய பிரதமர், ஒரே தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தொழில் நுட்பம் மூலம் பணம் மாற்றப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்டார். இந்த முயற்சிகளின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைகிறார்கள் என்றும் அவர்களின் பொருளாதார நிலை மேம்படுகிறது என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்திற்கு டிஜிட்டல் அடையாள எண் வழங்கப்படுவதாகவும் நிலத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கத்தையும், ட்ரோன்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் இந்திய விவசாயிகளுக்கு பயனளிப்பது மட்டுமின்றி, உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஐந்து நாட்களில் நீடித்த வேளாண்-உணவு முறைகளுடன் உலகை இணைப்பதற்கான வழிகள் காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு நாமும் அடுத்தவருக்குக் கற்பிப்போம் என்று கூறி தமது உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான், நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த், மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் மதின் கைம், இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆராய்ச்சி கவுன்சில் செயலாளர் டாக்டர் ஹிமான்ஷு பதக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
சர்வதேச வேளாண் பொருளாதார வல்லுநர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மூன்றாண்டு மாநாடு 02 ஆகஸ்ட் 2024 முதல் 07 வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு 65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், "நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம்" என்பதாகும். பருவநிலை மாற்றம், இயற்கை வளம் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் மற்றும் மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாடு உலகளாவிய வேளாண் சவால்களுக்கு இந்தியாவின் அணுகுமுறையை முன்னிலைப்படுத்தும். அத்துடன் நாட்டின் வேளாண் ஆராய்ச்சி, கொள்கை முன்னேற்றங்களை வெளிப்படுத்தும்.
ஐசிஏஇ 2024 மாநாடு, இளம் ஆராய்ச்சியாளர்கள், முன்னணி தொழில் வல்லுநர்கள் ஆகியோர் தங்கள் பணிகை உலகளாவிய சகாக்களுக்கு வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல், தேசிய, உலகளாவிய அளவில் கொள்கை வகுப்பதில் செல்வாக்கு செலுத்துதல், டிஜிட்டல் விவசாயம், நிலையான வேளாண்-உணவு அமைப்புகளில் முன்னேற்றங்கள் உள்ளிட்ட இந்தியாவின் விவசாய முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதையும் அந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
भारत जितना प्राचीन है, उतनी ही प्राचीन agriculture और food को लेकर हमारी मान्यताएं हैं, हमारे अनुभव हैं: PM @narendramodi pic.twitter.com/dWg6f40qH2
— PMO India (@PMOIndia) August 3, 2024
हमारे अन्न को औषधीय प्रभावों के साथ इस्तेमाल करने का पूरा आयुर्वेद विज्ञान है: PM @narendramodi pic.twitter.com/8HIlUZ4HLc
— PMO India (@PMOIndia) August 3, 2024
आज का समय है, जब भारत Global Food Security, Global Nutrition Security के Solutions देने में जुटा है: PM @narendramodi pic.twitter.com/f4gptn7aQM
— PMO India (@PMOIndia) August 3, 2024
भारत, Millets का दुनिया का सबसे बड़ा Producer है: PM @narendramodi pic.twitter.com/uEOjCSNYJy
— PMO India (@PMOIndia) August 3, 2024