ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்னும் மாநாட்டு மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். உலகெங்கிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். "ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன" என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.
இன்று, சாய் ஹிரா குளோபல் மாநாட்டு மையத்தை அர்ப்பணித்ததுடன், ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சிலின் தலைவர்கள் மாநாட்டையும் தொடங்கி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிகழ்வின் கருப்பொருள் - ‘பயிற்சி மற்றும் ஊக்கம்’ என்று கூறிய பிரதமர், மேலும் இது பயனுள்ளது மற்றும் பொருத்தமானது என்று தெரிவித்தார். எந்தவொரு யோசனையும் செயல் வடிவில் முன்னோக்கிச் செல்லும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். சமுதாயம் அவர்களைப் பின்பற்றுவதால், சமுதாயத் தலைவர்களின் நன்னடத்தையின் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். ஸ்ரீ சத்ய சாயியின் வாழ்க்கை இதற்கு நேரடி உதாரணம் என்றார் அவர் . “இன்று இந்தியாவும் தனது கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நகர்கிறது. சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கி நகரும் நாம் அமிர்த காலத்துக்கு கடமைக் காலம் என்று பெயரிட்டுள்ளோம். இந்த உறுதிமொழிகளில் நமது ஆன்மீக விழுமியங்களின் வழிகாட்டுதல் மற்றும் எதிர்காலத்திற்கான தீர்மானங்களும் அடங்கும். இது விகாஸ் (வளர்ச்சி) மற்றும் விராசத் (பரம்பரை) இரண்டையும் கொண்டுள்ளது’’ என்று அவர் கூறினார்.
இந்தியா, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு புத்துயிர் அளித்து வரும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்திலும் முன்னணியில் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பை ஆதரிக்கும் உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இப்போது மாறியுள்ளது என்று பிரதமர் விளக்கினார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி போன்ற துறைகளில் உலகின் முன்னணி நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் நடக்கும் நிகழ்நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாக தெரிவித்த பிரதமர், புட்டபர்த்தி மாவட்டம் முழுவதையும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி மாற்ற பக்தர்களை வலியுறுத்தினார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்தால், ஸ்ரீசத்ய சாய்பாபாவின் அடுத்த பிறந்தநாளில் மாவட்டம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.
"நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றம் அனைத்து சமூகத்தினரின் பங்களிப்புகளின் விளைவாகும்", என்று கூறிய பிரதமர், இந்தியாவைப் பற்றி மேலும் அறியவும் உலகத்துடன் இணைக்கவும் குளோபல் கவுன்சில் போன்ற அமைப்புகள் ஒரு சிறந்த ஊடகம் என்பதை விளக்கினார். புராதன நூல்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், துறவிகள் தங்கள் எண்ணங்களை நிறுத்தாமல், தங்கள் செயல்பாட்டில் சோர்வடையாததால், அவர்கள் ஓடும் தண்ணீரைப் போலக் கருதப்படுவார்கள் என்று கூறினார். "துறவிகளின் வாழ்க்கை அவர்களின் தொடர்ச்சியான ஓட்டம் மற்றும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது" என்று திரு மோடி குறிப்பிட்டார். ஒரு துறவியின் பிறந்த இடம் அவரைப் பின்பற்றுபவர்களைத் தீர்மானிக்காது என்று அவர் குறிப்பிட்டார். பக்தர்களைப் பொறுத்தவரை, எந்தவொரு உண்மையான துறவியும் அவர்களில் ஒருவராக மாறுகிறார், மேலும் அவர், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களின் பிரதிநிதியாக மாறுகிறார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை அனைத்து துறவிகளும் வளர்த்துள்ளனர் என்று அவர் கூறினார். ஸ்ரீ சத்ய சாய் பாபா புட்டபர்த்தியில் பிறந்தாலும், அவரைப் பின்பற்றுபவர்கள் உலகெங்கிலும் காணப்படுவதோடு, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருடைய நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்களை அணுகலாம். மொழி, கலாசாரம் பாராமல் அனைத்து பக்தர்களும் பிரசாந்தி நிலையத்துடன் இணைந்திருப்பதாகவும், இந்த உறுதிதான் இந்தியாவை அழியாத ஒரே நூலால் கட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சேவை ஆற்றலைப் பற்றி சத்ய சாயியை பிரதமர் மேற்கோள் காட்டிய பிரதமர், அவருடன் பழகவும், சத்ய சாயியின் ஆசீர்வாதத்தில் வாழவும் கிடைத்த வாய்ப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். ஸ்ரீ சத்ய சாயி ஆழமான செய்திகளை எளிதாக எடுத்துச் செல்வதை ஸ்ரீ மோடி நினைவு கூர்ந்தார். ‘அனைவரையும் நேசி அனைவருக்கும் சேவை செய்’ போன்ற காலத்தால் அழியாத போதனைகளை அவர் நினைவு கூர்ந்தார்; ‘எப்போதும் உதவு, எவரையும் நிந்திக்காதே’; ‘குறைவான பேச்சு அதிக வேலை’; 'ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்-ஒவ்வொரு இழப்பும் ஒரு ஆதாயம்'. “இந்தப் போதனைகள் அனைத்தும் உணர்திறன் மற்றும் ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டுள்ளன” என்று பிரதமர் கூறினார். குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது அவரது வழிகாட்டுதலையும் உதவியையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஸ்ரீ சத்ய சாயியின் ஆழ்ந்த இரக்கமுள்ள ஆசீர்வாதங்களை நினைவுகூர்ந்த திரு மோடி, அவரைப் பொறுத்தவரை, மனிதகுலத்திற்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று கூறினார்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் மத மற்றும் ஆன்மிக நிறுவனங்கள் சமூக நலனில் எப்போதும் மையமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இன்று நாம் அமிர்த காலத்தின் தீர்மானங்களினால் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்திற்கு வேகம் கொடுக்கும்போது, அதில் சத்யசாய் அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரதமர் கூறினார்.
சத்யசாய் அறக்கட்டளையின் ஆன்மிகப் பிரிவு, பால் விகாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் புதிய தலைமுறையினருக்குள் கலாச்சார இந்தியாவை உருவாக்கி வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதில் சத்ய சாய் அறக்கட்டளையின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஹைடெக் மருத்துவமனை மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல ஆண்டுகளாக இலவசக் கல்விக்காக நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அர்ப்பணிப்புடன் செயல்படும் சத்ய சாயியுடன் தொடர்புடைய அமைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் நாடு ஒவ்வொரு கிராமத்தையும் சுத்தமான நீர் விநியோகத்துடன் இணைத்து வருவதால், தொலைதூர கிராமங்களுக்கு இலவச நீர் வழங்கும் மனிதாபிமானப் பணியில் சத்ய சாய் மத்திய அறக்கட்டளை ஒரு பங்காளியாக மாறியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மிஷன் லைஃப் மற்றும் ஜி-20 இன் மதிப்புமிக்க தலைமைத்துவம் போன்ற இந்தியாவின் முன்முயற்சிகளின் உலகளாவிய ஒப்புதலைப் பிரதமர் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளை அவர் முன்னிலைப்படுத்தினார். இந்தியாவில் அதிகரித்து வரும் உலகளாவிய ஆர்வத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஐ.நா.வின் தலைமையகத்தில், அதிக எண்ணிக்கையிலான தேசிய இனத்தவர்கள் யோகாவில் கலந்து கொண்ட உலக சாதனை குறித்துப் பேசினார். சமீப காலங்களில் திருடப்பட்ட கலைப்பொருட்கள் திரும்பப் பெறப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்தியாவின் இந்த முயற்சிகள் மற்றும் தலைமையின் பின்னால், நமது கலாச்சார சிந்தனையே நமது மிகப்பெரிய பலம். எனவே, இதுபோன்ற அனைத்து முயற்சிகளிலும் சத்ய சாய் அறக்கட்டளை போன்ற கலாச்சார மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன” என்று பிரதமர் மேலும் கூறினார்.
அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி மரங்களை நடுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்ட ‘பிரேம் தரு’ முயற்சியை பிரதமர் குறிப்பிட்டார். மரம் வளர்ப்பு அல்லது பிளாஸ்டிக் இல்லாத இந்தியா தீர்மானம் போன்ற முயற்சிகளை ஆதரிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று திரு மோடி கேட்டுக் கொண்டார். சூரிய மின்சக்தி மற்றும் தூய்மையான மின்சக்தி ஆகியவற்றால் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆந்திராவின் சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு ஸ்ரீ அன்ன ராகி-ஜாவாவிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவை வழங்கும் சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் முயற்சியை பிரதமர் பாராட்டினார். ஸ்ரீ அன்னாவின் ஆரோக்கிய நலன்களை பட்டியலிட்ட பிரதமர், இதுபோன்ற முயற்சிகளுடன் மற்ற மாநிலங்களும் இணைந்தால் நாடு பெரிதும் பயனடையும் என்று கூறினார். “ஸ்ரீ அன்னாவில் ஆரோக்கியம் இருக்கிறது, நமது அனைத்து முயற்சிகளும் உலக அளவில் இந்தியாவின் திறனை அதிகரிப்பதுடன், இந்தியாவின் அடையாளத்தை வலுப்படுத்தும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“சத்ய சாயியின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த சக்தியைக் கொண்டு, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவோம், முழு உலகிற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நமது உறுதியை நிறைவேற்றுவோம்” என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற புதிய மையத்தைக் கட்டியுள்ளது. பிரசாந்தி நிலையம் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் முக்கிய ஆசிரமம் ஆகும். திரு ரியுகோ ஹிராவால் வழங்கப்பட்ட மாநாட்டு மையம் கலாச்சார பரிமாற்றம், ஆன்மீகம் மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான பார்வைக்கு ஒரு சான்றாகும். ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளை பலதரப்பட்ட பின்னணியில் உள்ளவர்கள் ஒன்றிணைவதற்கும், இணைவதற்கும், ஆராய்வதற்கும் இது ஒரு உகந்த சூழலை வழங்குகிறது. அதன் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு, மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எளிதாக நடத்த வழிவகுக்கும், அனைத்து தரப்பு மக்களிடையே உரையாடல் மற்றும் புரிதலை வளர்க்கும். இந்தப் பரந்த வளாகம் தியான மண்டபங்கள், அமைதியான தோட்டங்கள் மற்றும் தங்கும் வசதிகளை ஒருங்கே பெற்றுள்ளது.
श्री हीरा ग्लोबल convention सेंटर के रूप में देश को एक प्रमुख विचार केंद्र मिल रहा है: PM pic.twitter.com/qA632dZzGd
— PMO India (@PMOIndia) July 4, 2023
आज भारत कर्तव्यों को पहली प्राथमिकता बनाकर आगे बढ़ रहा है: PM @narendramodi pic.twitter.com/pPicNj7XeJ
— PMO India (@PMOIndia) July 4, 2023
आज एक ओर देश में आध्यात्मिक केन्द्रों का पुनरोद्धार हो रहा है तो साथ ही भारत economy और technology में भी lead कर रहा है: PM @narendramodi pic.twitter.com/soW0WBdJx3
— PMO India (@PMOIndia) July 4, 2023
हमारे संतों ने हजारों वर्षों से ‘एक भारत-श्रेष्ठ भारत’ की भावना का पोषण किया है। pic.twitter.com/Z7LTfSpN21
— PMO India (@PMOIndia) July 4, 2023