Quoteநவ்கார் மகாமந்திரம் வெறும் மந்திரம் மட்டுமல்ல - அது நமது நம்பிக்கையின் மையம்: பிரதமர்
Quoteநவ்கார் மகாமந்திரம் பணிவு, அமைதி, உலகளாவிய நல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது: பிரதமர்
Quoteபஞ்ச பரமேஷ்டி வழிபாட்டுடன் கூடிய நவ்கர் மகாமந்திரம் அறிவு, புலனுணர்வு, நன்னடத்தை, மோட்சம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் பாதையைக் குறிக்கிறது: பிரதமர்
Quoteஇந்தியாவின் அறிவுசார் பெருமையின் முதுகெலும்பாக சமண இலக்கியம் உள்ளது: பிரதமர்
Quoteபருவநிலை மாற்றம் இன்றைய மிகப்பெரிய நெருக்கடி ; அதற்கான தீர்வு நிலையான வாழ்க்கை முறையாகும்- இதை சமண சமூகம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருவதுடன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்திற்கு ஏற்பவும் செயல்படுகிறது: பிரதமர்
Quoteநவ்கார் மகாமந்திர தினம் குறித்து 9 தீர்மானங்களை பிரதமர் முன்மொழிந்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நவ்கார் மகாமந்திர தினத்தைத் தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நவ்கார் மந்திரத்தின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை எடுத்துரைத்து, மனதில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் அதன் திறனை எடுத்துரைத்தார். வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கடந்து, ஆழ்மனதிலும் பிரக்ஞையிலும் ஆழமாக எதிரொலிக்கும் அசாதாரண அமைதி உணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார். நவ்கார் மந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, அதன் புனித ஸ்லோகங்களைக் கூறியதுடன், இந்த மந்திரம் ஒன்றுபட்ட ஆற்றல், நிலைத்தன்மை, சமநிலை, சிறந்த உணர்வு, உள் ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது என்று விவரித்தார். தமது சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நவ்கார் மந்திரத்தின் ஆன்மீக சக்தியை அவர் எவ்வாறு தொடர்ந்து உணர்கிறார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இதேபோன்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் தான் பங்கேற்று இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். அது அவர் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கான நல்லொழுக்கமுள்ள ஆத்மாக்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஒன்றிணைந்த இணையற்ற அனுபவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கூட்டு ஆற்றல், ஒருங்கிணைந்த சொற்கள் ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். இது உண்மையிலேயே அசாதாரணமானது எனவும் ஈடு இணையில்லாதது என்றும் அவர் விவரித்தார்.

ஒவ்வொரு தெருவிலும் சமண மதத்தின் தாக்கம் தெரிகின்ற  குஜராத் மாநிலத்தில் தமது சிறு வயது அனுபவங்களை எடுத்துக் கூறிய பிரதமர், இளம் வயதிலிருந்தே சமண சமயப் பெரியவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புத் தமக்கு எப்படிக் கிடைத்தது என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். நவ்கார் மந்திரம் ஒரு மந்திரம் மட்டுமல்ல, நம்பிக்கையின் மையம், வாழ்க்கையின் சாரம் என்று அவர் கூறினார். ஆன்மீகத்தைத் தாண்டி, தனிநபர்களையும் சமூகத்தையும் வழிநடத்தும் அதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். நவ்கார் மந்திரத்தின் ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு ஆழமான பொருளைக் கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது பஞ்ச பரமேஷ்டியை வணங்கி அதை விரிவாகக் கூற வேண்டும் என அவர் கூறினார். ஞானம் அடைந்து வழிநடத்தும் அரிஹந்த்கள் 12 தெய்வீகக் குணங்களை உள்ளடக்கியுள்ளனர் எனவும் அதே நேரத்தில் எட்டு கர்மாக்களை அழித்து, மோட்சம் அடைந்து எட்டு தூய குணங்களைக் கொண்ட சித்தர்கள் உள்ளனர் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். ஆச்சார்யர்கள் மகாவிரதத்தைப் பின்பற்றி, 36 நல்லொழுக்கங்களை உள்ளடக்கிய பாதையைக் கண்டுபிடிப்பவர்களாகச் செயல்படுகிறார்கள் என்றும், உபாத்யாயர்கள் 25 குணங்களுடன்  மோட்ச பாதையின் அறிவை வழங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். சாதுக்கள் தவத்தின் மூலம் தங்களை செம்மைப்படுத்திக் கொண்டு, 27 அரும்பெரும் குணங்களைக் கைக்கொண்டு மோட்சத்தை நோக்கி முன்னேறுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். இந்த வணக்கத்திற்குரிய மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள ஆழமான ஆன்மீகத்தையும்  நல்லொழுக்கங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

 

|

"நவ்கார் மந்திரத்தை உச்சரிக்கும்போது ஒருவர் 108 தெய்வீகக் குணங்களுக்கு தலைவணங்கி, மனிதகுலத்தின் நலனை நினைவில் கொள்கிறார்" என்று கூறிய திரு நரேந்திர மோடி, அறிவும் செயலும் வாழ்க்கையின் உண்மையான திசைகள் என்பதை இந்த மந்திரம் நமக்கு நினைவூட்டுகிறது என்றார். குருவை வழிகாட்டும் ஒளியாகவும், உள்ளிருந்து வெளிப்படும் பாதையாகவும் இது கொண்டுள்ளது என அவர் கூறினார். தன்னம்பிக்கைக்கும் சொந்த முயற்சிகளுக்கும்  ஊக்கமளிக்கும் நவ்கார் மந்திரத்தின் போதனைகளை அவர் எடுத்துரைத்தார். உண்மையான எதிரியாக இருப்பவை எதிர்மறை எண்ணங்கள், அவநம்பிக்கை, விரோதம், சுயநலம் ஆகியவைதான் என்றும், இவற்றை வெல்வதே உண்மையான வெற்றி என்றும் அவர் கூறினார். சமண மதம் புற உலகை விட தனிநபர்கள் தங்களைத் தாங்களே வெல்லத் தூண்டுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். சுய வெற்றி ஒருவரை அரிஹந்த் ஆக மாற வழிவகுக்கிறது என்று கூறிய அவர், நவ்கார் மந்திரம் ஒரு வழிபாட்டுக் கோரிக்கை அல்ல எனவும் அது வழிகாட்டும் பாதை என்றும் தெரிவித்தார். தனிநபர்களை உள்ளிருந்து தூய்மைப்படுத்தி, நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகியவற்றை வழிநடத்தும் பாதையாக இது உள்ளது என்று அவர் கூறினார்.

"நவ்கார் மந்திரம் உண்மையிலேயே தியானம், பயிற்சி, சுய-தூய்மையாக்கல் ஆகியவற்றின் மந்திரம்" என்று கூறிய பிரதமர், அதன் உலகளாவிய கண்ணோட்டத்தையும், அதன் காலத்தால் அழியாத தன்மையையும் எடுத்துரைத்தார். மற்ற இந்திய வாய்மொழி, வேத மரபுகளைப் போலவே, இது தலைமுறை தலைமுறையாக முதலில் வாய்மொழியாகவும், பின்னர் கல்வெட்டுகள் மூலமாகவும், இறுதியாக பிராகிருத கையெழுத்துப் பிரதிகள் மூலமாகவும் - இன்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். "நவ்கார் மந்திரம், பஞ்ச பரமேஷ்டியை வணங்குவதோடு, சரியான அறிவு, சரியான கருத்து, சரியான நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அவர் கூறினார். இது விடுதலைக்கான பாதையாகவும் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். முழுமைக்கு வழிவகுக்கும் வாழ்க்கையின் ஒன்பது அம்சங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இந்திய கலாச்சாரத்தில் ஒன்பது என்ற எண்ணின் சிறப்பு முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். நவ்கார் மந்திரத்தின் ஒன்பது அம்சங்கள், ஒன்பது நல்லொழுக்கங்களை அவர் குறிப்பிட்டார், சமண மதத்தில் ஒன்பது என்ற எண்ணின் முக்கியத்துவத்தையும், ஒன்பது புதையல்கள், ஒன்பது வாயில்கள், ஒன்பது கிரகங்கள், துர்க்கையின் ஒன்பது வடிவங்கள், நவாத பக்தி போன்ற பிற மரபுகளிலும் அதன் இருப்பையும் அவர் விரிவாகக் கூறினார். ஒன்பது முறை அல்லது 27, 54 அல்லது 108 போன்ற ஒன்பது மடங்குகளில் மந்திரங்களை மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்பது என்ற எண்ணால் குறிக்கப்படும் முழுமையைக் குறிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். ஒன்பது என்ற எண் வெறும் கணிதம் மட்டுமல்ல, அது ஒரு தத்துவம் என்றும், அது முழுமையைக் குறிக்கிறது என்றும் பிரதமர் விளக்கினார். முழுமையை அடைந்த பிறகு, மனமும் புத்தியும் நிலைபெற்று மேல் நிலைக்குச் சென்று, புதிய விஷயங்களுக்கான ஆசையிலிருந்து விடுபடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். முன்னேற்றத்திற்குப் பிறகும், அவற்றின் சாரத்தில் ஒருவர் வேரூன்றி இருக்கிறார் எனவும் இதுதான் நவ்கார் மந்திரத்தின் சாரம் என்றும் அவர் கூறினார்.

 

|

நவ்கார் மந்திரத்தின் தத்துவம் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இசைவானதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், செங்கோட்டையில் இருந்து தாம் பேசிய கருத்துக்களை நினைவு கூர்ந்தார்.  வளர்ச்சியடைந்த இந்தியா என்பது முன்னேற்றம், பாரம்பரியம் ஆகிய இரண்டையும் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார். வளர்ந்த இந்தியா தனது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்ளும் என்று அவர் எடுத்துரைத்தார். தீர்த்தங்கரர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பகவான் மகாவீரரின் 2550-வது நிர்வாண மகோத்சவம் தொடர்பான நாடு தழுவிய கொண்டாட்டங்களை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, தீர்த்தங்கரர்களின் சிலைகள் உட்பட பழங்கால சிலைகள் வெளிநாடுகளிலிருந்து திரும்பக் கொண்டுவரப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். சமீபத்திய ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிலைகள் இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார். இந்தியாவின் அடையாளத்தை வடிவமைப்பதில் சமண மதத்தின் இணையற்ற பங்கை எடுத்துரைத்த அவர், இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தார். புதுதில்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று விவரித்த அவர், சமண மதத்தின் வெளிப்படையான செல்வாக்கைச் சுட்டிக்காட்டினார். ஷர்துல் வாயில் நுழைவாயிலில் உள்ள கட்டடக்கலை காட்சியகத்தில் சம்மத் ஷிகரின் சித்தரிப்பு, மக்களவை நுழைவு வாயிலில் உள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தீர்த்தங்கரர் சிலை, அரசியலமைப்பு காட்சிக்கூடத்தின் உச்சியில் உள்ள பகவான் மகாவீரரின் அற்புதமான ஓவியம், தென்பகுதி கட்டடத்தின் சுவரில் 24 தீர்த்தங்கரர்களின் ஒரே சித்தரிப்பு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்தத் தத்துவங்கள் இந்தியாவின் ஜனநாயகத்தை வழிநடத்துவதுடன், சரியான பாதையையும் வழங்குகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். "வாத்து சஹாவோ தம்மம்", "சரிதம் கலு தம்மம்", "ஜீவன ரக்கனம் தம்மம்" போன்ற பழங்கால ஆகம நூல்களில் பொதிந்துள்ள சமண மதத்தின் ஆழமான வரையறைகளையும் அவர் எடுத்துரைத்தார். இந்த விழுமியங்களால் ஈர்க்கப்பட்டு "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற மந்திரத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது என்பதை அவர் விளக்கினார்.

"சமண இலக்கியம் இந்தியாவின் அறிவுசார் பாரம்பரியத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது எனவும் இந்த அறிவைப் பாதுகாப்பது ஒரு கடமையாகும்" என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்தை வழங்குவதற்கான அரசின் முடிவை எடுத்துரைத்து, சமண இலக்கியம் குறித்த அதிக ஆராய்ச்சிக்கு இது வழிவகுக்கிறது என்றார். மொழியைப் பாதுகாப்பது அறிவின் உயிர்வாழ்வை உறுதி செய்கிறது என்றும், மொழியை விரிவுபடுத்துவது ஞானத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சமண கையெழுத்துப் பிரதிகள் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், அவற்றின் ஒவ்வொரு பக்கமும் வரலாற்றின் கண்ணாடியாகவும், அறிவுக் கடலாகவும் திகழ்கிறது என்று கூறினார். ஆழமான சமண போதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். பல முக்கிய நூல்கள் படிப்படியாக மறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட "ஞான பாரதம் இயக்கம்" குறித்தும் குறிப்பிட்டார். இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்து, பழங்கால பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்கி, பழமையை நவீனத்துடன் இணைக்கும் திட்டம் என்று அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சியை 'அமிர்த சங்கல்பம்' என்று அவர் விவரித்தார். "ஆன்மிகத்துடன் உலகை வழிநடத்தும் அதே வேளையில், புதிய இந்தியா செயற்கை நுண்ணறிவு மூலமான வாய்ப்புகளை ஆராயும்" என்று பிரதமர் கூறினார்.

சமண மதம் அறிவியல் பூர்வமானது என்பதுடன் உணர்வுப்பூர்வமானது என்றும், போர், பயங்கரவாதம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற உலகளாவிய சவால்களுக்கு தனது முக்கிய கொள்கைகள் மூலம் இந்தத் தீர்வுகளை வழங்குகிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். சமணப் பாரம்பரியத்தின் அடையாளமான "பரஸ்பரோபக்ரஹோ ஜீவனம்" என்பது அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை வலியுறுத்துகிறது என்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பரஸ்பர நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றின் ஆழமான செய்தியாக, மிக நுட்பமான நிலைகளில் கூட, அகிம்சைக்கான சமண மதத்தின் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். சமண மதத்தின் ஐந்து முக்கிய கொள்கைகளை எடுத்துரைத்த அவர், இன்றைய சகாப்தத்தில் அனேகாந்தவாத தத்துவத்தின் பொருத்தத்தை விளக்கினார். அனேகந்தவாதம் மீதான நம்பிக்கை போர், மோதல் சூழ்நிலைகளைத் தடுக்கிறது என்று பிரதமர் கூறினார். மற்றவர்களின் உணர்ச்சிகள், எண்ணங்களைப் பற்றிய புரிதலை இது வளர்க்கிறது என்று அவர் கூறினார். அனேகந்தவாத தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

|

இந்தியாவின் முயற்சிகளும், முடிவுகளும் உத்வேகம் அளிக்கும் ஆதாரங்களாக மாறி வருவதால், இந்தியா மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்து வருவதை அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்னேற்றம் காரணமாக உலகளாவிய நிறுவனங்கள் தற்போது இந்தியாவை நோக்கி வருகின்றன என்றும், இது மற்றவர்களுக்கு வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பரஸ்பர ஒத்துழைப்பில்தான் வாழ்க்கை செழிக்கிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், "பரஸ்பரபரோபக்ரஹோ ஜீவனம்" என்ற சமண தத்துவம் இதுதான் என்று கூறினார்.  இந்த முன்னோக்கிய பார்வையானது இந்தியாவிடமிருந்து உலகளாவிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது என்றும், நாடு தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்தின் முக்கிய பிரச்சினை குறித்துப் பேசிய அவர், நிலையான வாழ்க்கை முறையை தீர்வாக அவர் எடுத்துரைத்தார். மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளதை அவர் எடுத்துரைத்தார். சமண  சமயத்தினர் பல நூற்றாண்டுகளாக எளிமை, கட்டுப்பாடு, நிலைத்தன்மை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து இந்த இயக்கத்திற்கு ஏற்ப செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். சமணக் கொள்கைகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்களைப் பரவலாகப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஒவ்வொருவரும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும், லைஃப் இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்றைய தகவல் உலகில், அறிவு ஏராளமாக உள்ளது எனவும், ஆனால் ஞானம் இல்லாமல், அதில் ஆழம் இருக்காது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சமண சமயம் சரியான பாதையைக் கண்டறிய அறிவு, ஞானம் ஆகியவற்றின் சமநிலையைப் போதிக்கிறது என்று அவர் கூறினார். இளைஞர்களுக்கு இந்த சமநிலையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இதில் தொழில்நுட்பமும் மனித உடலும் தொடர்புடன் இருக்க வேண்டும் எனவும் திறன்கள் ஆன்மாவுடன் இணைந்து இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நவ்கார் மகாமந்திரம் புதிய தலைமுறையினருக்கு ஞானம், வழிகாட்டுதல் ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

 

|

அனைவரும் இணைந்து நவ்கார் மந்திரத்தை உச்சரித்த பிறகு ஒன்பது தீர்மானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். முதல் தீர்மானம் 'நீர் சேமிப்பு' என்று கூறிய பிரதமர், கடைகளில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறிய புத்தி சாகர் மகராஜ் ஜி-யின் வார்த்தைகளை அவர் நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு சொட்டு நீரையும் மதிப்பிட்டு சேமிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இரண்டாவது தீர்மானம், 'அன்னையின் பெயரில் மரம் நடுவது' என்று அவர் தெரிவித்தார்.  சமீபத்திய மாதங்களில் 100 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டதை எடுத்துரைத்த அவர், ஒவ்வொருவரும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குஜராத்தில் 24 தீர்த்தங்கரர்களுடன் தொடர்புடைய 24 மரங்களை நடவு செய்ய தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு தெருவிலும், குடியிருப்பிலும், நகரத்திலும் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, இந்த இயக்கத்திற்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல்' என்பது நான்காவது தீர்மானம் என்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். அவற்றை உலகளாவியதாக மாற்றுவது, இந்திய மண்ணின் சாரம், இந்திய தொழிலாளர்களின் வியர்வையை சுமக்கும் பொருட்களை ஆதரிப்பது ஆகியவற்றை பிரதமர் ஊக்குவித்தார். ஐந்தாவது தீர்மானம் 'இந்தியாவை நன்கு தெரிந்துகொள்வது' என்பதாகும் என அவர் கூறினார். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பு இந்தியாவின் மாறுபட்ட மாநிலங்கள், கலாச்சாரங்கள், பிராந்தியங்களுக்குச் சென்று அவை குறித்து நன்கு அறிந்துகொள்ளுமாறு மக்களை வலியுறுத்தினார்.  நாட்டின் ஒவ்வொரு மூலையின் தனித்துவத்தையும் மதிப்பையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 'இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்வது' என்பது ஆறாவது தீர்மானம் என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற சமணக் கோட்பாட்டை சுட்டிக்காட்டினார். பூமித்தாயை ரசாயனங்களிலிருந்து விடுவிக்கவும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஏழாவது தீர்மானமாக 'ஆரோக்கியமான வாழ்க்கை முறையை' முன்மொழிந்த அவர், சிறுதானியங்கள் உள்ளிட்ட இந்திய உணவு மரபுகளுக்கு திரும்ப வேண்டும் எனவும் எண்ணெய் நுகர்வை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உணவுக் கட்டுப்பாடு மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் அவர் ஆலோசனை வழங்கினார். எட்டாவது தீர்மானமாக 'யோகாவையும், விளையாட்டையும் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மேற்கொள்ளுதல்' என்ற தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். உடல் ஆரோக்கியம், மன அமைதி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக  இவை இரண்டையும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சேவையின் உண்மையான சாரமாக பின்தங்கியவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஒன்பதாவது, இறுதித் தீர்மானமாக 'ஏழைகளுக்கு உதவுதல்' என்ற திட்டத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானங்கள் சமண மதத்தின் கொள்கைகளுடனும், நிலையான, இணக்கமான எதிர்காலத்தின் பார்வையுடனும் ஒத்துப்போகின்றன என்று வலியுறுத்தினார். இந்த ஒன்பது தீர்மானங்கள், தனிநபர்களுக்குப் புதிய சக்தியை வழங்குவதோடு இளைய தலைமுறையினருக்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்று அவர் கூறினார். இவற்றை நடைமுறைப்படுத்துவது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், இரக்கம் ஆகியவற்றை வளர்க்கும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

 

|

ரத்னாத்ரயா, தசக்ஷன், சோலா கரண் உள்ளிட்ட சமண மதக் கொள்கைகளும், பர்யுஷன் போன்ற பண்டிகைகளும் நன்மைக்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, உலக நவ்கார் மந்திர தினம் உலகளவில் மகிழ்ச்சி, அமைதி, வளத்தை தொடர்ந்து மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வுக்காக நான்கு பிரிவுகளும் ஒன்றிணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இது ஒற்றுமையின் அடையாளம் என்று விவரித்ததுடன், ஒற்றுமையின் செய்தியை நாடு முழுவதும் பரப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "பாரத் மாதா கீ ஜெ" என்று முழங்கும் எவரையும் அரவணைத்து இணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்,. ஏனெனில் இந்த ஆற்றல் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் குரு பகவந்தின் ஆசீர்வாதத்திற்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த உலகளாவிய நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஒட்டுமொத்த சமண சமூகத்தினருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். ஆச்சார்ய பகவந்த்கள், முனி மகராஜ்கள், ஷ்ராவக்-ஷ்ரவிகாக்கள்,  ஆகியோர் இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்ததில் சமண சர்வதேச வர்த்தக அமைப்பான ஜிட்டோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், குஜராத் உள்துறை அமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி, ஜிட்டோ  அமைப்பின் திரு பிரித்விராஜ் கோத்தாரி, திரு விஜய் பண்டாரி, பிற ஜிட்டோ அதிகாரிகள், உலகெங்கிலும் உள்ள பிரமுகர்கள் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

பின்னணி

நவ்கார் மகாமந்திர தினம் என்பது ஆன்மீக நல்லிணக்கம், நெறிமுறை ஆகியவற்றின் ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும். இது சமண மதத்தில் மிகவும் மதிக்கப்படக் கூடிய மந்திரமாகும். உலகளாவிய மந்திரமான நவ்கார் மகாமந்திரம் கூட்டு உச்சரிப்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முற்படுகிறது. அகிம்சை, பணிவு, ஆன்மீக உயர்வு ஆகிய கொள்கைகளில் வேரூன்றிய இந்த மந்திரம் அறிவொளி பெற்ற மனிதர்களின் நன்னடத்தைகளுக்கு மரியாதை செலுத்துகிறது. அத்துடன் உள்மன மாற்றத்தை ஊக்குவிக்கிறது. சுய-தூய்மையாக்கல், சகிப்புத்தன்மை, கூட்டு நல்வாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளைப் பிரதிபலிக்க இந்த தினம் அனைத்து தனிநபர்களையும் ஊக்குவிக்கிறது.

 

|

அமைதி, ஒற்றுமைக்கான உலகளாவிய இந்த நோக்கத்தில் 108-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் இணைந்துள்ளனர். புனிதமான சமண மந்திரத்தின் மூலம் அமைதி, ஆன்மீக விழிப்புணர்வு, உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்ப்பதில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • DEVENDRA SHAH MODI KA PARIVAR July 09, 2025

    jay shree ram
  • Komal Bhatia Shrivastav July 07, 2025

    jai shree ram
  • Adarsh Kumar Agarwal July 03, 2025

    जैन धर्म विश्व को शांति का संदेश देता है । आज के समय में पूरे विश्व को जैन धर्म से प्रेरणा लेने की जरूरत है ।
  • Gaurav munday May 24, 2025

    🩷
  • Himanshu Sahu May 19, 2025

    🇮🇳🇮🇳🇮🇳
  • ram Sagar pandey May 18, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹जय माता दी 🚩🙏🙏🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹
  • Jitendra Kumar May 17, 2025

    🙏🙏🇮🇳
  • Dalbir Chopra EX Jila Vistark BJP May 13, 2025

    ओऐ
  • Yogendra Nath Pandey Lucknow Uttar vidhansabha May 11, 2025

    Jay shree Ram
  • ram Sagar pandey May 11, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीराम 🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
I-T refunds up 6x in 11 years at ₹4.8L crore

Media Coverage

I-T refunds up 6x in 11 years at ₹4.8L crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles demise of noted film personality, B. Saroja Devi Ji
July 14, 2025

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over demise of noted film personality, B. Saroja Devi Ji.

Shri Modi said that she will be remembered as an exemplary icon of Indian cinema and culture. Her diverse performances left an indelible mark across generations. Her works, spanning different languages and covering diverse themes highlighted her versatile nature, Shri Modi further added.

The Prime Minister said in a X post;

“Saddened by the passing of the noted film personality, B. Saroja Devi Ji. She will be remembered as an exemplary icon of Indian cinema and culture. Her diverse performances left an indelible mark across generations. Her works, spanning different languages and covering diverse themes highlighted her versatile nature. My condolences to her family and admirers. Om Shanti.”