இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 -ன் 8-வது பதிப்பையும் தொடங்கி வைத்தார்
இந்தியாவில் தொலைத்தொடர்பை வெறும் இணைப்புக்கான ஊடகமாக மட்டும் கருதாமல், சமபங்கு மற்றும் வாய்ப்புகளுக்கான ஊடகமாகவும் மாற்றியுள்ளோம்: பிரதமர்
டிஜிட்டல் இந்தியாவின் நான்கு தூண்களை நாங்கள் அடையாளம் கண்டு, நான்கு தூண்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றத் தொடங்கினோம், எங்களுக்கு முடிவுகள் கிடைத்தன: பிரதமர்
சிப் முதல் இணைக்கப்பட்ட தயாரிப்பு வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைபேசியை முழுமையாக உலகிற்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்: பிரதமர்
வெறும் 10 ஆண்டுகளில் இந்தியா அமைத்துள்ள கண்ணாடி இழை கேபிளின் நீளம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும்: பிரதமர் மோடி
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா ஜனநாயகப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி
உலகில் நலத்திட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லக்கூடிய டிஜிட்டல் தொகுப்பை இந்தியா இன்று பெற்றுள்ளது: பிரதமர்
தொழில்நுட்பத் துறையை உள்ளடக்கியதாக மாற்றவும், தொழில்நுட்ப தளங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இந்தியா செயல்பட்டு வருகிறது: பிரதமர
நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்
இந்தியா ஏற்கனவே 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் திரு. சந்திரசேகர்  பெம்மசானி, ஐடியு-வின்  பொதுச் செயலாளர் திருமதி. டோரீன் போக்டான்-மார்ட்டின், பல்வேறு வெளிநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள், தொழில்துறைத் தலைவர்கள், தொலைத் தொடர்பு நிபுணர்கள், புத்தொழில் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்டோரை வரவேற்றார். திரு மோடி,  உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவையின்  கூட்டத்திற்கான இடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்காக  நன்றி தெரிவித்து பாராட்டினார். தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை, இந்தியா மிகவும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகும் என்று திரு மோடி கூறினார். இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிட்ட திரு மோடி, இந்தியாவில் 120 கோடி அல்லது 1200 மில்லியன் செல்போன் பயனாளர்கள், 95 கோடி அல்லது 950 மில்லியன் பேர்  இணையதள பயனாளர்களாக உள்ளனர் என்றும், உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில்,  40 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்நேரத்தில் நடைபெறுகின்றன என்றும் கூறினார். கடைசி மைல் தூரத்தையும் டிஜிட்டல் இணைப்பு எவ்வாறு ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது என்பதை இந்தியா எடுத்துக்காட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். உலகளாவிய தொலைத்தொடர்பு தரம் குறித்து விவாதிப்பதற்கும், உலகளாவிய நன்மையாக தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலம் குறித்த விவாதத்திற்கும் இடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்த ஒவ்வொருவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

டபிள்யுடிஎஸ்ஏ மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், உலக தொழில்நுட்ப சிறப்புச் சட்டத்தின் நோக்கம் உலகத் தரத்தில் பணியாற்றுவதாகும் என்றும், இந்தியா மொபைல் காங்கிரஸின் பங்கு சேவைகளுடன் தொடர்புடையது என்றும் கூறினார். இன்றைய நிகழ்ச்சி உலகத் தரத்தையும், சேவைகளையும் ஒரே மேடையில் கொண்டு வருவதாக அவர் கூறினார். தரமான சேவை மற்றும் தரத்தின் மீது இந்தியா கவனம் செலுத்தி வருவதை வலியுறுத்திய பிரதமர், உலக தொழில்நுட்ப சிறப்புச் சட்டத்தின் அனுபவம் இந்தியாவுக்கு புதிய சக்தியை அளிக்கும் என்றார்.

 

ஒருமித்த கருத்தின் மூலம் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை உலகிற்கு அதிகாரம் அளிப்பதாகவும், இந்தியா மொபைல் காங்கிரஸ் இணைப்பு மூலம் உலகை வலுப்படுத்துகிறது என்றும் பிரதமர் விளக்கினார். இந்த நிகழ்வில் ஒருமித்த கருத்து மற்றும் இணைப்பு ஆகியவை இணைந்துள்ளன என்று திரு மோடி கூறினார். மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் இந்த இணைப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், வசுதைவ குடும்பகம் என்ற அழியாத செய்தியின் மூலம் இந்தியா வாழ்ந்து வருவதாகக் கூறினார். இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டைக் குறிப்பிட்ட பிரதமர், "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற செய்தியை பரப்புவது குறித்தும் பேசினார். உலகை மோதலில் இருந்து வெளியே கொண்டு வருவதிலும், அதை இணைப்பதிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். "பண்டைய பட்டுப் பாதையாக இருந்தாலும் சரி, இன்றைய தொழில்நுட்பப் பாதையாக இருந்தாலும் சரி, இந்தியாவின் ஒரே நோக்கம் உலகை இணைப்பதும், முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறப்பதும் தான்" என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய சூழ்நிலையில், டபிள்யு.டி.எஸ்.ஏ மற்றும் ஐ.எம்.சி ஆகியவற்றின் இந்தக் கூட்டாண்மை உள்ளூர் மற்றும் உலக அளவில் ஒன்றிணைந்து ஒரு நாட்டிற்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் நன்மைகளைக் கொண்டு வரும் ஒரு சிறந்த செய்தியாகும் என்று பிரதமர் கூறினார்.

 

"21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பு பயணம் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு ஆய்வுப் பொருளாக உள்ளது" என்று திரு மோடி பெருமிதத்துடன்  தெரிவித்தார். உலகம் முழுவதும் கைபேசி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் தொலைத்தொடர்பு வெறும் இணைப்பு ஊடகமாக மட்டும் இல்லாமல், சமபங்கு மற்றும் வாய்ப்புகளுக்கான ஊடகமாக உள்ளது என்று அவர் கூறினார். தொலைத்தொடர்பு ஒரு ஊடகமாக கிராமங்களுக்கும் நகரங்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பத்தாண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை குறித்த விளக்கக் காட்சியை நினைவுகூர்ந்த திரு மோடி, துண்டு துண்டாக இந்தியா முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக முழுமையான அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும் என்று தாம் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.  குறைந்த விலை சாதனங்கள், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் பரந்த அளவில் டிஜிட்டல் இணைப்பு, எளிதில் அணுகக்கூடிய தரவு மற்றும் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்பட்டு, நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும் 'டிஜிட்டல் முதலில்' இலக்கு ஆகிய  டிஜிட்டல் இந்தியாவின் நான்கு தூண்களை திரு மோடி பட்டியலிட்டார்

 

இணைப்பு மற்றும் தொலைத் தொடர்பு சீர்திருத்தங்களில் இந்தியாவின் உருமாற்ற சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், தொலைதூரப் பழங்குடியினர், மலைப்பாங்கான மற்றும் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான செல்போன் கோபுரங்களின் வலுவான வலைப்பின்னலை நாடு எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்பை உறுதி செய்துள்ளது என்றார். நாடு முழுவதும் செல்போன் கோபுரங்களின் வலுவான வலைப்பின்னலை அரசு உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் வைஃபை வசதிகளை விரைவாக நிறுவுதல், அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு போன்ற தீவுகளை கடலுக்கடியில் கேபிள்கள் மூலம் இணைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா அமைத்துள்ள கண்ணாடிஇழை கேபிள்களின் தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமாகும்" என்று அவர் மேலும் கூறினார். 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியா விரைவாக ஏற்றுக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, 5 ஜி தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்றும், இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், இது இந்தியாவை உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக மாற்றியுள்ளது என்றும் கூறினார். இந்தியா ஏற்கனவே 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

தொலைத் தொடர்புத் துறை சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்த பிரதமர், தரவு  செலவுகளைக் குறைப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டார். ஒரு ஜிபி தரவு ( டேட்டா) 10 முதல் 20 மடங்கு விலை அதிகமாக உள்ள  உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இணையத் தரவின் விலை இப்போது ஒரு ஜிபிக்கு 12 சென்ட் வரை குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். இன்று, ஒவ்வொரு இந்தியரும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை அவர் தெரிவித்தார்.

 

இத்தகைய முயற்சிகள் அனைத்தும் நான்காவது தூணான 'முதலில் டிஜிட்டல் உணர்வு' மூலம் புதிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தி, டிஜிட்டல் தளங்களை  உருவாக்கியுள்ளது என்றும், இந்தத் தளங்களில் புதுமைகள் கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் அவர் கூறினார். ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பெற்ற   மாற்றத்தின் வலிமையைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, இது எண்ணற்ற கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்றார். பல நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ள ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இடைமுகம் (யுபிஐ) பற்றி குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஓஎன்டிசி பற்றியும் பேசினார். கோவிட்-19 தொற்று பரவலின் போது தேவைப்படுவோருக்கு நிதிப் பரிமாற்றங்கள், வழிகாட்டுதல்களை நிகழ்நேரத் தகவல்தொடர்பு, தடுப்பூசி இயக்கம்  மற்றும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களை வழங்குதல் போன்ற தடையற்ற செயல்முறைகளை உறுதி செய்வதில் டிஜிட்டல் தளங்களின் பங்கை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் வெற்றியின் அனுபவத்தை உலகளவில் பகிர்ந்து கொள்ள தேசம் விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் தொகுப்பு உலகளவில் நலத்திட்டங்களை உயர்த்த முடியும் என்று கூறிய பிரதமர், ஜி-20 தலைமைத்துவத்தின் போது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கு  இந்தியா முக்கியத்துவம் அளித்ததை எடுத்துக்காட்டினார். நாடு தனது டிபிஐ அறிவை அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

உலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியின் போது பெண்களின் வலைப்பின்னல் முன்முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியா தீவிரமாக உழைத்து வருவதை எடுத்துரைத்தார். ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியபோது இந்த உறுதிமொழி முன்னெடுத்துச் செல்லப்பட்டது என்றும் அவர் கூறினார். தொழில்நுட்பத் தளங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில்,  தொழில்நுட்பத் துறையை உள்ளடக்கியதாக மாற்றும் இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருவதாக பிரதமர் விளக்கினார்.  இந்தியாவின் விண்வெளிப் பயணங்களில் பெண் விஞ்ஞானிகளின் முக்கிய பங்களிப்பு, இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்களில் பெண் இணை நிறுவனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகியவற்றை அவர் எடுத்துக் காட்டினார். இந்தியாவின் ஸ்டெம் கல்வியில் பெண் மாணவர்களின் பங்கு 40 சதவீதமாக இருப்பதாகவும், தொழில்நுட்ப தலைமைத்துவத்தில் பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா உருவாக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். விவசாயத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானப் புரட்சியை ஊக்குவிப்பதற்காக அரசின் நமோ ட்ரோன் சகோதரி திட்டம் இந்தியாவின் கிராமங்களைச் சேர்ந்த பெண்களால் வழிநடத்தப்படுவதையும் திரு மோடி சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் விழிப்புணர்வுக்கு வழிவகுத்த ஒவ்வொரு வீட்டிற்கும் டிஜிட்டல் வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்டு செல்வதற்காக இந்தியா வங்கி தோழி திட்டத்தையும் தொடங்கியது என்று அவர் கூறினார். இந்தியாவின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் ஆஷா மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்த திரு மோடி, இன்று இந்தப் பணியாளர்கள் கைக்கணினிகள்  மற்றும் செயலிகள் மூலம் அனைத்து பணிகளையும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார். பெண் தொழில்முனைவோருக்கான ஆன்லைன் சந்தைப்படுத்துதல் தளமான மஹிளா இ-ஹாத் திட்டத்தையும் இந்தியா நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். இன்று இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பெண்கள் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது வியப்பூட்டும் விஷயம் என்று அவர் மேலும் கூறினார். வரவிருக்கும் காலங்களில், இந்தியாவின் ஒவ்வொரு மகளும் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் வகையில் இந்தியா தனது நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

 

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ஜி-20 தலைமைப் பொறுப்பின் போது இந்த விஷயத்தை இந்தியா எழுப்பியதை நினைவுகூர்ந்த அவர், உலகளாவிய நிர்வாகத்தில் இதன் முக்கியத்துவத்தை உலக நிறுவனங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "உலகளாவிய நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை உலகளாவிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பிரதமர் மோடி கூறினார். உலக அளவில் தொழில்நுட்பத்தில் 'செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை' என்பதை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், டிஜிட்டல் கருவிகள் மற்றும் பயன்பாடுகளின் எல்லையற்ற தன்மையை எடுத்துரைத்தார். இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதிலும், உலகளாவிய நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையிலும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே நன்கு நிறுவப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்ட விமானத் துறையை அவர் எடுத்துக் காட்டினார். பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொலைத்தொடர்புக்கான பாதுகாப்பான சேனலை உருவாக்குவதில் டபிள்யூ.டி.எஸ்.ஏ  பங்கு வகிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். "ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், பாதுகாப்பு என்பது ஒரு பின் சிந்தனையாக இருக்க முடியாது. இந்தியாவின் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி ஆகியவை பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன" என்று அவர் குறிப்பிட்டார். நாடுகளின் பன்முகத்தன்மையை மதிக்கும் நெறிமுறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு தனியுரிமை தரநிலைகள் உள்ளிட்ட உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் எதிர்கால சவால்களுக்கு ஏற்ப தரங்களை உருவாக்குமாறு பிரதமர் பேரவை உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

 

தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட பரிமாணத்தின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பொறுப்பான மற்றும் நீடித்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு அழைப்பு விடுத்தார். இன்று அமைக்கப்பட்டுள்ள தரநிலைகள் எதிர்காலத்தின் திசையைத் தீர்மானிக்கும் என்று கூறிய அவர், பாதுகாப்பு, கண்ணியம், சமத்துவம் ஆகிய கொள்கைகள் நமது விவாதங்களின் மையத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த டிஜிட்டல் மாற்றத்தில் எந்த நாடும், எந்தப் பிராந்தியமும், எந்தச் சமூகமும் பின்தங்கிவிடக்கூடாது என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், உள்ளடக்கத்துடன் சமநிலையில் புதுமையின் அவசியத்தை வலியுறுத்தினார். எதிர்காலம் தொழில்நுட்ப ரீதியில் வலுவானதாகவும், புதுமை மற்றும் உள்ளடக்கத்துடன் நெறிமுறை ரீதியாகவும் வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  உலகத் தொலைத்தொடர்பு தரப்படுத்துதல்  இயக்கத்தின் வெற்றிக்கு தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமது ஆதரவையும் தெரிவித்து பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

 

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் திரு. சந்திரசேகர்  பெம்மசானி மற்றும் பல்வேறு தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

 

உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை ( டபிள்யூ.டி.எஸ்.ஏ)  என்பது டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் முகமையான  சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்துதல் பணிக்கான நிர்வாக அமைப்பாகும்.  இது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஐடியு-டபிள்யூடிஎஸ்ஏ மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.

இந்த ஆண்டு பேரவை,6ஜி, செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு போன்ற  முக்கியமான அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களின் தரநிலைகளைப் பற்றி விவாதிக்கவும் தீர்மானிக்கவும் நாடுகளுக்கு ஒரு தளத்தை வழங்கும். இந்த நிகழ்வை இந்தியாவில் நடத்துவது உலகளாவிய தொலைத் தொடர்பு நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதிலும், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான பாதையை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்க நாட்டிற்கு ஒரு வாய்ப்பை வழங்கும். இந்திய புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை மற்றும் நிலையான அத்தியாவசிய காப்புரிமைகளை வளர்ப்பதில் முக்கியமான நுண்ணறிவுகளைப் பெற உள்ளன.

 

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இந்தியாவின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வெளிப்படுத்தும். அங்கு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள்,  குவாண்டம் தொழில்நுட்பம், வட்டப் பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஆகியவற்றை  முன்னிலைப்படுத்துவார்கள்,

 

ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமான இந்தியா மொபைல் காங்கிரஸ், தொழில், அரசு, கல்வியாளர்கள்,  மற்றும் தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பிற முக்கிய பங்குதாரர்களுக்கான புதுமையான தீர்வுகள், சேவைகள் மற்றும் அதிநவீன பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதற்கான உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட தளமாக மாறியுள்ளது. இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இல் 400 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், சுமார் 900 புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட நாடுகள்  பங்கேற்கும். இந்த நிகழ்வு 900-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதையும், 100-க்கும் மேற்பட்ட அமர்வுகளை நடத்துவதையும், 600-க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் இந்திய பேச்சாளர்களுடன் கலந்துரையாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi