புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு ஏரியல் குவார்கோ பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள், ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024- ல் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.
இந்த வரவேற்பு தன்னிடமிருந்து மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ள 10 கோடி பெண்கள் மற்றும் கூட்டுறவுகளுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடமிருந்தும் வந்திருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் விரிவடைந்த பிறகு சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார். இந்தியாவின் எதிர்கால கூட்டுறவுப் பயணத்திற்கு உலகளாவிய கூட்டுறவு மாநாட்டிலிருந்து தேவையான நுண்ணறிவுகள் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதற்குப் பதிலாக, இந்தியாவின் வளமான கூட்டுறவு அனுபவங்களிலிருந்து உலகளாவிய கூட்டுறவு இயக்கம் புதிய உணர்வையும், 21-ம் நூற்றாண்டின் சமீபத்திய சாதனங்களையும் பெறும் என்றும் அவர் கூறினார். 2025-ம் ஆண்டை சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரத்தை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, "உலகிற்கு, கூட்டுறவு ஒரு முன்மாதிரி, ஆனால் இந்தியாவுக்கு இது கலாச்சாரத்தின் அடிப்படை, வாழ்க்கை முறை" என்று கூறினார். இந்தியாவின் புனித நூல்களிலிருந்து சுலோகங்களை வாசித்த திரு மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ஒற்றுமையாக பேச வேண்டும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் நமது உபநிடதங்கள் நாம் அமைதியாக வாழ வேண்டும் என்றும், சகவாழ்வின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கின்றன என்றும், இந்த மதிப்பு கூட்டுறவுகளின் தோற்றத்தைப் போலவே இந்தியக் குடும்பங்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பு என்றும் கூறினார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் கூட கூட்டுறவுகளால் உத்வேகம் பெற்றது என்று குறிப்பிட்ட திரு மோடி, அது பொருளாதார அதிகாரமளித்தது மட்டுமின்றி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு சமூக தளத்தையும் வழங்கியது என்றார். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய இயக்கம், சமுதாய பங்களிப்புக்கு புதிய உத்வேகத்தை அளித்து, காதி மற்றும் கிராமத் தொழில் கூட்டுறவுகளின் உதவியுடன், புதிய புரட்சியைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இன்று காதி மற்றும் கிராமத் தொழில்கள், போட்டியில் உள்ள, பெரிய பிராண்டுகளை விட முன்னேற, கூட்டுறவு அமைப்புகள் உதவியிருப்பது குறித்து திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். பால் கூட்டுறவுச் சங்கங்களைப் பயன்படுத்தி சர்தார் படேல் விவசாயிகளை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டியதாக பிரதமர் குறிப்பிட்டார். "இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவான அமுல், உலகின் முன்னணி உணவு பிராண்டுகளில் ஒன்றாகும்" என்று திரு மோடி வியப்புடன் கூறினார். இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் சிந்தனையிலிருந்து இயக்கத்திற்கும், இயக்கத்திலிருந்து புரட்சிக்கும், புரட்சியிலிருந்து அதிகாரமளித்தலுக்கும் பயணித்துள்ளன என்றும் அவர் கூறினார்.
நிர்வாகத்துடன் ஒத்துழைப்பையும் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இன்று நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் கூறினார். "இன்று, இந்தியாவில் 8 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதாவது உலகின் ஒவ்வொரு நான்காவது சங்கமும் இந்தியாவில் உள்ளது" என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட 98 சதவீத கூட்டுறவு அமைப்புகள் கிராமப்புற இந்தியாவை உள்ளடக்கியதாக உள்ளன என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். "சுமார் 30 கோடி (300 மில்லியன்) மக்கள், அதாவது ஒவ்வொரு ஐந்து இந்தியர்களில் ஒருவர் கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடையவர்கள்," என்று அவர் கூறினார். இந்தியாவில் நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள் பெருமளவில் விரிவடைந்துள்ளன என்பதை எடுத்துரைத்த திரு மோடி, சர்க்கரை, உரம், மீன்வளம் மற்றும் பால் உற்பத்தித் தொழில்களில் கூட்டுறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று தெரிவித்தார். நாட்டில் சுமார் 2 லட்சம் வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன என்றார். இந்தியாவின் கூட்டுறவு வங்கித் துறையை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துரைத்த திரு மோடி, தற்போது நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும், இது இந்த நிறுவனங்கள் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். "கூட்டுறவு வங்கி முறையை மேம்படுத்த தமது அரசு பல சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது. அவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கீழ் கொண்டு வருவது மற்றும் வைப்புத் தொகையையும் காப்பீட்டுத் தொகையையும் ஒரு வைப்புத் தொகையாளருக்கு ரூ.5 லட்சமாக உயர்த்துவது உள்ளிட்டவை" அடங்கும் என்று பிரதமர் கூறினார். அதிக போட்டித்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் விரிவாக்கத்தை சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்த சீர்திருத்தங்கள் இந்திய கூட்டுறவு வங்கிகளை மிகவும் பாதுகாப்பான மற்றும் திறமையான நிதி நிறுவனங்களாக நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் தெரிவித்தார்.
"நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை பெரும் பங்கு வகிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளர். கடந்த ஆண்டுகளில், கூட்டுறவுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அத்துறையின் மேம்பாட்டுக்கான சூழல் அமைப்பை மாற்றியமைக்க அவர் மேலும் கூறினார். கூட்டுறவுச் சங்கங்களை பல்நோக்கு அம்சங்களுடன் கூடிய துறையாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கூட்டுறவு துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கூட்டுறவுச் சங்கங்களை பல்நோக்கு அமைப்புகளாக உருவாக்க ஏதுவாக புதிய மாதிரி துணைச் சட்டங்கள் இயற்றப்பட்டன என்றும் அவர் கூறினார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டுறவு வங்கிகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சூழல் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டில் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலான மையங்கள் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள், நீர் மேலாண்மை பணிகள் மற்றும் சூரியசக்தி தகடுகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கழிவு பொருட்களில் இருந்து எரிசக்தி என்ற தாரக மந்திரத்துடன், இன்று கூட்டுறவு சங்கங்கள் கோபர்தன் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிராமப்புறங்களில் பொதுச் சேவை மையங்களாக செயல்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவதன் மூலம் அதன் உறுப்பினர்களின் வருவாயை அதிகரிக்கச் செய்வதில் மத்தியஅரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
தற்போது கூட்டுறவு சங்கங்கள் இல்லாத 2 லட்சம் கிராமங்களில் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு உருவாக்கி வருவதாக பிரதமர் திரு மோடி கூறினார். கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி துறை மட்டுமின்றி சேவைத் துறையிலும் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். "இன்று, கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்." கூட்டுறவு துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை சேமித்து வைப்பதற்கு கிடங்குகள் கட்டப்பட்டு வருவதாகவும், இது சிறு விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) உருவாக்குவதன் மூலம் சிறு விவசாயிகளின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், "நாட்டில் உள்ள சிறு விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதற்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்." பண்ணை முதல் சந்தை வரை வேளாண் விளை பொருட்களுக்கான விநியோக முறை மற்றும் அவற்றின் மதிப்புக் கூட்டுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். வேளாண் விளை பொருட்களுக்கான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சுமார் 9,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். "வேளாண் விளைபொருட்களுக்கு தடையற்ற சந்தை வாய்ப்பை உருவாக்குவதும், வேளாண் உற்பத்திக்கான செயல்திறனை மேம்படுத்த ஏதுவாக நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வரவும், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டுறவுச் சங்கங்கள் மக்களைச் சென்றடைவதற்கு டிஜிட்டல் தளங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய பிரதமர், வர்த்தகத்திற்கான வெளிப்படையான இணையதள வசதிகள் போன்ற பொது மின்னணு வர்த்தக தளங்கள் மூலம் கூட்டுறவு நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறைந்த விலையில் வேளாண் விளைப்பொருட்கள் நுகர்வோரை நேரடியாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் அமையும் என்று கூறினார். கூட்டுறவு சங்கங்கள் தங்களது சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான புதிய வழியை வழங்கியதற்காக மத்திய அரசின் மின்னணு சந்தையின் செயல்பாடுகளுக்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார். "இத்தகைய முயற்சிகள் காரணமாக விவசாயத்தை நவீனமயமாக்குவதிலும், போட்டிதன்மையை அதிகரிக்கவும், வளமான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேவையான தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களுடன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் மேலும் கூறினார்.
நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நாட்டின் வளர்ச்சி அமையும் என்று குறிப்பிட்டார். கூட்டுறவுத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அவர் கூறினார். பெண்கள் தலைமையிலான கூட்டுறவு அமைப்புகள் 60 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாக நடைமுறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்". இதற்கென பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டுறவு சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்களின் வாரியங்களில் பெண் இயக்குநர்களை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், கூட்டுறவுத் துறையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர், நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களில் 10 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு மத்திய அரசு ரூ. 9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்கு உதவியுள்ளதாக அவர் கூறினார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
21-ம் நூற்றாண்டில் உலக அளவில் கூட்டுறவு இயக்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், "கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நிதியுதவியை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். சிறிய மற்றும் நிதி ரீதியாக பலவீனமான நிலையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி ஆதாரங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான நிதி மற்றும் கடனுதவிகளை வழங்குவதற்கு ஏதுவான செயல்திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களின் கொள்முதல், உற்பத்தி மற்றும் விநியோக நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு அமைப்புகளுக்கு நிதியளிக்கக்கூடிய உலகளாவிய நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, இதில் ஐசிஏ-வின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார். எதிர்காலத்தில் இதைத் தாண்டி மேலும் முன்னேற வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். உலகின் தற்போதைய நிலைமை கூட்டுறவு இயக்கத்திற்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். கூட்டுறவில் புதிய கொள்கைகள் உத்திகளையும் வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். கூட்டுறவுச் சங்கங்களை காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, அவை சுழற்சிப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், கூட்டுறவுகளில் புத்தொழில்களை ஊக்குவிக்க உடனடி தேவை உள்ளது என்றும் கூறினார்.
உலகளாவிய ஒத்துழைப்புக்கு கூட்டுறவு அமைப்புகளால் புதிய சக்தியை அளிக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது என்று பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக, உலகின் தெற்குப் பகுதியில் உள்ள நாடுகள் தங்களுக்குத் தேவையான வளர்ச்சியை எட்டுவதற்கு கூட்டுறவுகள் உதவ முடியும் என்றும் அவர் கூறினார். எனவே, கூட்டுறவு அமைப்புகளிடையே சர்வதேச ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பது அவசியம் என்றும், இன்றைய உலகளாவிய மாநாடு இதற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், இந்தியா இப்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது என்றார். இந்த வளர்ச்சியின் பயன்கள் பரம ஏழைகளையும் சென்றடைவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார். இந்திய அளவிலும், உலக அளவிலும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட கண்ணோட்டத்தில் பார்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, நமது அனைத்து பணிகளிலும் மனித-மைய உணர்வுகள் மேலோங்க வேண்டும் என்றார். உலக அளவில் கோவிட் -19 நெருக்கடியின் போது இந்தியாவின் உதவிகளை அவர் குறிப்பிட்டார். அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் உலகத்துடன், குறிப்பாக உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கு இந்தியா எவ்வாறு உதவியாக நின்றது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். நெருக்கடி காலங்களில் இரக்கத்துக்கும் ஒற்றுமைக்குமான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், சிக்கலான நிலைமைகளில் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தாலும், நமது மனிதநேய உணர்வு, சேவை பாதையைத் தேர்ந்தெடுக்கவே நம்மை வழிநடத்தியது என்று அவர் கூறினார்.
கூட்டுறவு அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, அவை கட்டமைப்பு, விதிகள், ஒழுங்குமுறைகள் பற்றியது மட்டுமல்ல என்று குறிப்பிட்டார். கூட்டுறவு உணர்வு மிகவும் முக்கியமானது என்றும், இந்த கூட்டுறவு உணர்வு இந்த இயக்கத்தின் உயிர் சக்தி என்றும் அவர் கூறினார். மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டிய திரு நரேந்திர மோடி, கூட்டுறவுகளின் வெற்றி அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல என்றும் மாறாக அவற்றின் உறுப்பினர்களின் தார்மீக வளர்ச்சியைப் பொறுத்தது என்றும் கூறினார். தார்மீகம் இருக்கும்போது, மனிதகுலத்தின் நலனுக்காக சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டில் இந்த உணர்வை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி:
உலகளாவிய கூட்டுறவு இயக்கத்தின் முதன்மை அமைப்பான சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) 130 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடும் ஐசிஏ பொதுச் சபைக் கூட்டமும் இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனமான இஃப்கோ (IFFCO), ஐசிஏ, இந்திய அரசு, இந்திய கூட்டுறவு நிறுவனங்களான அமுல், கிர்பாகோ ஆகியவற்றுடன் இணைந்து நவம்பர் 25 முதல் 30 வரை உலகளாவிய மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டின் கருப்பொருள், "கூட்டுறவு அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகிறது" என்பதாகும். இந்திய அரசின் தொலைநோக்குக் கொள்கையான கூட்டுறவின் மூலம் வளம் (சஹ்கார் சே சம்ரித்தி) என்பதற்கு ஏற்ப இது அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உலகெங்கிலும் உள்ள கூட்டுறவுகள் எதிர்கொள்ளும் சவால்களையும் வாய்ப்புகளையும் பற்றிய கலந்துரையாடல்கள், குழு அமர்வுகள் இந்த நிகழ்வில் இடம்பெறும். குறிப்பாக வறுமை ஒழிப்பு, பாலின சமத்துவம் நிலையான பொருளாதார வளர்ச்சி போன்றவை குறித்து விவாதங்கள் நடைபெறும்.
"கூட்டுறவுகளால் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குதல்" என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும் ஐநா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார். ஐநா நிலையான வளர்ச்சி இலக்குகள் கூட்டுறவுகளை நிலையான வளர்ச்சியின் முக்கிய உந்து சக்திகளாக அங்கீகரிக்கின்றன. 2025-ம் ஆண்டு உலகின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்வதில் கூட்டுறவு நிறுவனங்களின் சக்தியை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும்.
கூட்டுறவு இயக்கத்தின் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அமைதி, வலிமை, வளர்ச்சியைக் குறிக்கும் தாமரையை இந்த அஞ்சல் தலை காட்சிப்படுத்துகிறது.
Click here to read full text speech
भारत के लिए Co-Operatives संस्कृति का आधार है, जीवन शैली है। pic.twitter.com/UYTghGfgLR
— PMO India (@PMOIndia) November 25, 2024
भारत में सहकारिता ने...विचार से आंदोलन, आंदोलन से क्रांति और क्रांति से सशक्तिकरण तक का सफर किया है। pic.twitter.com/w7puajZ4q8
— PMO India (@PMOIndia) November 25, 2024
हम सहकार से समृद्धि के मंत्र पर चल रहे हैं। pic.twitter.com/axqpeyJOZD
— PMO India (@PMOIndia) November 25, 2024
भारत अपनी future growth में, Co-Operatives का बहुत बड़ा रोल देखता है: PM @narendramodi pic.twitter.com/HFgG2CSOJr
— PMO India (@PMOIndia) November 25, 2024
Co-Operative Sector में महिलाओं को बड़ी भूमिका है। pic.twitter.com/oyUstqhwZV
— PMO India (@PMOIndia) November 25, 2024
भारत का ये मानना है कि co-operative से global co-operation को नई ऊर्जा मिल सकती है: PM @narendramodi pic.twitter.com/PC6w8xtKfi
— PMO India (@PMOIndia) November 25, 2024