பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் மின்சாரம், ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தொடர்புடையவை ஆகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மேற்கு வங்கத்தை ஒரு வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான மற்றொரு முயற்சியாக இன்றைய திட்டங்கள் அமைந்துள்ளன என்றார். அரம்பாக் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே, துறைமுகம், பெட்ரோலியம் ஆகிய துறைகளில் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியதைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். இன்றும் கூட, மேற்கு வங்க மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக ரூ. 15,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு மின்சாரம், சாலை மற்றும் ரயில்வே துறைகளை உள்ளடக்கிய திட்டங்கள் தொடங்கப்படுவதாகப் பிரதமர் கூறினார். இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களை பிரதமர் பாராட்டினார்.
வளர்ச்சிப் பணிகளில் மின்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மேற்கு வங்க மாநிலத்தை மின்சாரத் தேவைகளில் தற்சார்புள்ளதாக மாற்ற அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். புருலியா மாவட்டத்தில் ரகுநாத்பூரில் அமைந்துள்ள ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டம் (2x660 மெகாவாட்), தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனின் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் திட்டம் மாநிலத்தில் ரூ. 11,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்க்கும் என்று அவர் கூறினார். இது மாநிலத்தின் எரிசக்தி தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று அவர் மேலும் கூறினார். மேலும், சுமார் 650 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மெஜியா அனல் மின் நிலையத்தின் 7 மற்றும் 8-ம் அலகின் ஃப்ளூ கேஸ் டிசல்பூரைசேஷன் (எஃப்ஜிடி) அமைப்பு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் தீவிர முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
மேற்கு வங்கம் நாட்டின் கிழக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது என்றும், இங்கிருந்து நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும் பிரதமர் கூறினார். எனவே, சாலைகள், ரயில்வேக்கள், விமானங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளை நவீன முறையில் உருவாக்க அரசு பணியாற்றி வருகிறது என்று அவர் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 12-ல் (100 கிலோமீட்டர்) ஃபராக்கா-ராய்கன்ஜ் பிரிவை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான சாலைத் திட்டத்திற்கு சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் என்றும் அவர் கூறினார். இது அருகிலுள்ள நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, இப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்து, விவசாயிகளுக்கும் உதவும் என்றார்.
உள்கட்டமைப்பு கண்ணோட்டத்தில், ரயில்வே மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். முந்தைய அரசுகள் வளர்ச்சியில் இடைவெளியை உருவாக்கியதால் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் சிறப்புகள் சரியான வழியில் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மாநிலத்தின் நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சிக்காக, இன்று நான்கு ரயில்வே திட்டங்கள் அர்ப்பணிக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
பின்னணி
புருலியா மாவட்டம் ரகுநாத்பூரில் அமைந்துள்ள ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (2x660 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் திட்டம் மிகவும் திறன் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. புதிய ஆலை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக அமையும்.
மெஜியா அனல் மின் நிலையத்தின் 7 மற்றும் 8-வது அலகுகளில் ஃப்ளூ கேஸ் டிசல்பிரைசேஷன் (FGD) அமைப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 650 கோடி செலவில் உருவாக்கப்பட்ட எஃப்.ஜி.டி அமைப்பு ஃப்ளூ வாயுக்களில் இருந்து சல்பர் டை ஆக்சைடை அகற்றி, சுத்தமான ஃப்ளூ வாயுவை உற்பத்தி செய்து ஜிப்சம் உருவாக்கும். இது சிமெண்ட் தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் 12-ல் ஃபராக்கா-ராய்கன்ஜ் பிரிவை (100 கிலோமீட்டர்) நான்கு வழிப்பாதையாக மாற்றும் சாலைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 1986 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், இது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன் வடக்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
மேற்கு வங்கத்தில் தாமோதர் - மொஹிஷிலா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம் உட்பட ரூ. 940 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நான்கு ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்; ராம்பூர்ஹாட் மற்றும் முராராய் இடையே மூன்றாவது பாதை; பஜார்சாவ் – அசிம்கஞ்ச் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்; மற்றும் அசிம்கஞ்ச் - முர்ஷிதாபாத்தை இணைக்கும் புதிய பாதை ஆகியவை இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் ரயில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கி, இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.