பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் பெகுசாராயில் ரூ. 13,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடு முழுவதும் சுமார் ரூ. 1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கில் பீகாரை மேம்படுத்தும் தீர்மானத்துடன் தாம் இன்று பீகார் மாநிலம் பெகுசராய்க்கு வந்திருப்பதாகக் கூறினார். மக்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்காக அவர் நன்றி தெரிவித்தார்.
பெகுசராய் பகுதி திறமையான இளைஞர்களைக் கொண்ட பூமி என்றும், இது எப்போதும் நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை பலப்படுத்தி வந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். இன்று சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டப்படுகின்றன என்பதால் பெகுசராயின் பழைய பெருமை மீண்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். முன்னதாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் தில்லி விக்யான் பவனில் நடைபெற்றன என்றும் ஆனால் இப்போது மோடி தில்லியை பெகுசராய்க்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இன்றைய திட்டங்களில் ரூ.30,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பீகாருடன் மட்டுமே தொடர்புடையவை என்றும் அவர் கூறினார். இந்த திட்டங்கள் இந்தியாவின் திறன்களைக் காட்டுகிறது என்றும் இவை பீகார் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் பீகாரின் செழிப்புக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். பீகாருக்கான புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து விரைவான வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதை பிரதமர் மீண்டும் சுட்டிக்காட்டினார். பீகார் மற்றும் கிழக்கு இந்தியா வளமாக இருந்தபோது இந்தியா அதிகாரம் பெற்று திகழ்ந்தது என்பதற்கு வரலாறு சான்று என்று கூறிய பிரதமர், பீகாரின் மோசமடைந்த நிலைமைகள் நாட்டின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார். இன்றைய திட்டங்கள் முக்கியமாக பெட்ரோலியம், உரங்கள் மற்றும் ரயில்வே தொடர்பான திட்டங்கள் ஒரு பெரிய நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார். எரிசக்தி, உரங்கள் மற்றும் போக்குவரத்து இணைப்பு ஆகியவை வளர்ச்சிக்கு அடிப்படை என்று அவர் தெரிவித்தார்.
இன்று நிறைவேற்றப்பட்ட வாக்குறுதியான பரவுனி உரத் தொழிற்சாலை குறித்து பிரதமர் பேசினார். பீகார் விவசாயிகள் உட்பட நாட்டின் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று அவர் கூறினார். மோடியின் உத்தரவாதம் என்பது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்று தேசம் கூறுகிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.
பல மாதங்களாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிய பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பணிகள் விரிவுபடுத்தப்படுவது குறித்து பிரதமர் பேசினார். பரவுனி சுத்திகரிப்பு ஆலை பீகாரின் தொழில் வளர்ச்சிக்கு புதிய சக்தியை அளிக்கும் என்றும், இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார். பீகாரில் ரூ. 65,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். எரிவாயு குழாய் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் பீகாரில் பெண்களுக்கு குறைந்த விலை எரிவாயுவை வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்துரைத்தார்.
தேச நலனுக்காக அரசு தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்று கூறிய பிரதமர், சுயநல அரசியலை விமர்சித்தார். முந்தைய ஆட்சிகளைப் போல் அல்லாமல், தற்போது இந்தியாவின் ரயில்வே நவீனமயமாக்கல் சிறப்பாக உள்ளது என்றும் இது குறித்து உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். மின்மயமாக்கல் மற்றும் ரயில் நிலைய மேம்பாடு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
வாரிசு அரசியலுக்கும் சமூக நீதிக்கும் இடையே உள்ள முரண்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். குறிப்பாக வாரிசு அரசியல் திறமைக்கும், இளைஞர்களின் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றார்.
உண்மையான சமூக நீதி அரசுத் திட்டப் பலன்கள் அனைவருக்கும் கிடைப்பதன் மூலம் அடையப்படுகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியை அத்தகைய வடிவங்களில் மட்டுமே அங்கீகரிப்பதாக குறிப்பிட்டார். இலவச உணவு தானியம், பாதுகாப்பான வீடுகள், எரிவாயு இணைப்புகள், குழாய் நீர் விநியோகம், கழிப்பறைகள், இலவச சுகாதார சேவைகள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி ஆகியவற்றை செறிவூட்டி வழங்குவதன் மூலம் உண்மையான சமூக நீதியை அடைய முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், அரசு திட்டங்களின் மிகப்பெரிய பயனாளிகள் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகங்கள் என்று பிரதமர் கூறினார்.
நம்மைப் பொறுத்தவரை சமூக நீதி என்பது பெண் சக்திக்கு அதிகாரமளித்தல் என்பதாகும் என்றும் அவர் கூறினார். 1 கோடி பெண்களை லட்சாதிபதிப் பெண்கள் ஆக்கிய சாதனையையும், 3 கோடி லட்சாதிபதிப் பெண்களை உருவாக்குவதற்கான தமது தீர்மானத்தையும் அவர் மீண்டும் எடுத்துரைத்தார். அவர்களில் பலர் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக பீகார் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். இன்று அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற பெண்களுக்கு நன்றி தெரிவித்து தமது உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர வி அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் சவுத்ரி, திரு விஜய் குமார் சின்ஹா, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் பூரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
சுமார் ரூ.1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பீகார், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பீகாரில் சுமார் ரூ.14,000 கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 11,400 கோடிக்கும் அதிகமான திட்ட செலவில் பரவுனி சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பரவுனி சுத்திகரிப்பு நிலையத்தில் கிரிட் உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தல் ஆகியவை இதில் அடங்கும்;
ஹரியானாவில் உள்ள பானிபட் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தின் விரிவாக்கம் ஆகியவை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிற முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் அடங்கும்; பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 3ஜி எத்தனால் ஆலை மற்றும் வினையூக்கி ஆலை; ஆந்திராவில் விசாக் சுத்திகரிப்பு நவீனமயமாக்கல் திட்டம் (VRMP); பஞ்சாபின் பாசில்கா, கங்காநகர் மற்றும் ஹனுமன்கர் மாவட்டங்களை உள்ளடக்கிய நகர எரிவாயு விநியோக நெட்வொர்க் திட்டம்; ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பரவுனியில் இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன் லிமிடெட் (HURL) உரத் தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ. 9500 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஆலை விவசாயிகளுக்கு மலிவு விலையில் யூரியாவை வழங்குவதோடு அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். நாட்டில் புத்துயிர் பெறும் நான்காவது உரத் தொழிற்சாலை இதுவாகும்.
சுமார் ரூ. 3917 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரகோபூர் - ஃபோர்ப்ஸ்கஞ்ச் கேஜ் மாற்றத்திற்கான திட்டம் இதில் அடங்கும்; முகுரியா-கதிஹார்-குமேத்பூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்; பரானி-பச்வாரா 3-வது மற்றும் 4-வது வழித்தடம், கதிஹார்-ஜோக்பானி ரயில் பிரிவை மின்மயமாக்கும் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இந்தத் திட்டங்கள் பயணத்தை எளிதாக மாற்றுவதுடன், இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
நாட்டில் உள்ள கால்நடைகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளமான 'பாரத் பசுதன்' -ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் (என்.டி.எல்.எம்) கீழ் உருவாக்கப்பட்ட 'பாரத் பசுதான்' ஒவ்வொரு கால்நடைக்கும் தனித்துவமான 12 இலக்க அடையாளத்தைப் பயன்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், மதிப்பிடப்பட்ட 30.5 கோடி மாடுகளில், சுமார் 29.6 கோடி மாடுகள் ஏற்கனவே குறியிடப்பட்டு அவற்றின் விவரங்கள் தரவு தளத்தில் உள்ளன. 'பாரத் பசுதான்' மாடுகளைக் கண்டறியும் முறையை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும். மேலும் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கும் உதவும்.
'பாரத் பசுதான்' தரவுத்தளத்தின் கீழ் உள்ள அனைத்து தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்யும் செயலியான '1962 விவசாயிகள் செயலி' என்ற செயலியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
बिहार विकसित होगा, तो देश भी विकसित होगा। pic.twitter.com/yLzRabSpyL
— PMO India (@PMOIndia) March 2, 2024
पूरी दुनिया में भारतीय रेल के आधुनिकीकरण की चर्चा हो रही है। pic.twitter.com/WqSH8zvRtr
— PMO India (@PMOIndia) March 2, 2024
सच्चा सामाजिक न्याय सैचुरेशन से आता है। pic.twitter.com/6fjfLinRxF
— PMO India (@PMOIndia) March 2, 2024