நவி மும்பையில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புகைப்படத் தொகுப்பு மற்றும் அடல் பாலத்தின் மாதிரி வடிவத்தைத் திரு மோடி பார்வையிட்டார்.
மும்பை துறைமுக இணைப்புக்கான அடல் பாலம் ரூ.17,840 கோடிக்கும் கூடுதலான செலவில் கட்டப்பட்டுள்ளது. இது கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்ட 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அடல் பாலத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது நமது மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்கி' மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க செயலாகும். இந்தப் பாலம் பயண நேரத்தைக் குறைப்பதாகவும், இணைப்பை அதிகரிப்பதாகவும் உள்ளது. இது தினசரிப் பயணங்களை எளிதாக்குகிறது.”
Delighted to inaugurate Atal Setu, a significant step forward in enhancing the ‘Ease of Living’ for our citizens. This bridge promises to reduce travel time and boost connectivity, making daily commutes smoother. pic.twitter.com/B77PSiGhMK
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னவிஸ், திரு அஜித் பவார் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அடல் பிகாரி வாஜ்பாய் சேவ்ரி - நவ சேவா அடல் பாலம்
நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் குடிமக்களின் 'போக்குவரத்தை எளிதாக்கி' மேம்படுத்துவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையாகும். இதற்கேற்ப, இப்போது 'அடல் பிகாரி வாஜ்பாய் சேவ்ரி - நவ சேவா அடல் சேது' என்று பெயரிடப்பட்ட மும்பை துறைமுக இணைப்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பாலத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் சேது கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு மேல் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்ட 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும். இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இடையே விரைவான இணைப்பை வழங்கும். மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.