91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வானொலி இணைப்பிற்கு இந்த துவக்கம் மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பத்ம விருது பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் விழாவில் கலந்து கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, அவர்களை வரவேற்றார். அகில இந்திய பண்பலையாக மாறும் முயற்சியில், அகில இந்திய வானொலியின் பண்பலை சேவை விரிவாக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்றார் அவர். அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்கள் மற்றும் நாட்டின் 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு என்று அவர் குறிப்பிட்டார். ஒரு வகையில், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் வண்ணங்களின் கண்ணோட்டத்தை இவை முன்னிறுத்துவதாக பிரதமர் தெரிவித்தார். முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் அமைக்கப்படுவதாகக் கூறி, இத்தகைய சாதனைக்கு வித்திட்ட அகில இந்திய வானொலிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் பெருமளவில் பயனடையக் கூடிய வடகிழக்கு பகுதியின் மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
வானொலியுடனான தமது தலைமுறையின் உணர்வுபூர்வமான இணைப்பை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வரவிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயத்தைக் குறிப்பிட்டு, “வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதில் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்”, என்று தெரிவித்தார். “நாட்டு மக்களுடனான இத்தகைய உணர்வுபூர்வமான இணைப்பு வானொலியால் மட்டுமே சாத்தியமானது. வானொலி மற்றும் மனதின் குரல் வாயிலாக நாட்டின் ஆற்றலுடனும், நாட்டு மக்களிடையே கடமையின் கூட்டு சக்தியுடனும் என்னால் இணைய முடிந்தது”, என்று அவர் கூறினார். தூய்மை இந்தியா, பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் அனைத்து வீடுகளிலும் மூவர்ணக் கொடி போன்ற முன்முயற்சிகளில் இந்த நிகழ்ச்சியின் பங்களிப்பை உதாரணமாகக் கூறி தமது கருத்தை பிரதமர் வலியுறுத்தினார். “ஒரு வகையில், உங்களது அகில இந்திய வானொலி குழுவில் நானும் அங்கம் வகிக்கிறேன்”, என்றார் அவர்.
இதுவரை இந்த வசதி மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் துவக்கம் முக்கிய இடம் வகிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். “தொலைதூரத்தில் இருப்பதாக கருதப்பட்டவர்கள், பெரிய அளவில் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை தற்போது பெறுவார்கள்” என்று பிரதமர் தெரிவித்தார். பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் நன்மைகளைப் பட்டியலிட்ட பிரதமர், முக்கியமான தகவல்களை உரிய நேரத்தில் தருவது, சமூக கட்டமைப்பு முயற்சிகள், வேளாண் நடைமுறைகளுடன் தொடர்புடைய வானிலை அறிவிப்புகள், விவசாயிகளுக்கு உணவு மற்றும் காய்கறிகளின் விலை குறித்த தகவல்கள், வேளாண்மையில் ரசாயனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் இழப்பு குறித்த விவாதங்கள், விவசாயத்திற்கான மேம்பட்ட இயந்திரங்களை சேர்த்தல், புதிய சந்தை நிலவரங்கள் பற்றி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தெரிவித்தல் மற்றும் இயற்கை பேரிடரின் போது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உதவுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பண்பலையின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். “இந்தியா தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வளர வேண்டும் என்றால் வாய்ப்பு குறைவாக உள்ளது என்று இந்தியர் ஒருவரும் கருதாமல் இருப்பது அவசியம்”, என்றார் அவர். நவீன தொழில்நுட்பத்தை மலிவான விலையில், அணுகக் கூடியதாகச் செய்வது இதற்கு அவசியம். அனைத்து கிராமங்களிலும் ஒளியிழை வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது மற்றும் தகவல்களை சுலபமாகப் பெறுவதற்கு தரவு கட்டணம் குறைக்கப்பட்டிருப்பது பற்றி அவர் விளக்கினார். கிராமங்களில் டிஜிட்டல் தொழில்முனைவிற்கு இது புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல யு.பி.ஐ சேவை, சிறிய வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி சேவைகளை அளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப புரட்சி, வானொலியை, குறிப்பாக பண்பலையை புதிய வடிவத்தில் உருமாற்றியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இணையத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், பாட்காஸ்ட் மற்றும் இணைய வழி பண்பலை சேவையின் வாயிலாக வானொலி புத்துயிர் பெற்றிருக்கிறது என்று தெரிவித்தார். “டிஜிட்டல் இந்தியா, வானொலிக்கு புதிய நேயர்களை ஏற்படுத்தித் தந்திருப்பதோடு, புதிய சிந்தனையையும் புகுத்தியுள்ளது”, என்றும், அதே புரட்சியை காணொளியின் ஒவ்வொரு ஊடகத்திலும் காண முடிகிறது என்றும் திரு மோடி கூறினார். உலகம் பற்றிய நிகழ் நேர தகவல்களை கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அளிக்கும் நாட்டின் மிகப்பெரிய டிடிஹெச் தளமான தூர்தர்ஷன் இலவச டிஷ் சேவை, 4 கோடியே 30 லட்சம் வீடுகளுக்கு வழங்கப்படுவதாக அவர் கூறினார். பல தசாப்தங்களாக வசதி மறுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வியும், பொழுதுபோக்கும் தற்போது சென்றடைவதை அவர் அடிக்கோடிட்டு கூறினார். “சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் தரமான தகவல்களை வழங்க இது வழிவகை செய்துள்ளது”, என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி படிப்புகளை நேரடியாக இல்லங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக டிடிஹச் சேனல்களில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகள் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். “டிடிஹெச் அல்லது பண்பலை வானொலி ஆகட்டும், எதிர்கால இந்தியாவை நோக்கும் சாளரத்தை இந்த ஆற்றல் நமக்கு வழங்குகிறது. இத்தகைய எதிர்காலத்திற்காக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.
பன்முகத்தன்மை வாய்ந்த மொழியியலின் பரிமாணங்கள் பற்றி பேசிய பிரதமர், பண்பலை ஒலிபரப்பு அனைத்து மொழிகளிலும், குறிப்பாக 27 கிளை மொழிகள் உள்ள பிராந்தியங்களில் ஒலிபரப்பப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இயக்கம் சார்ந்த இணைப்புடன் சமூக இணைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், “இந்த இணைப்பு, தொலைத்தொடர்பு கருவிகளை மட்டுமல்லாது, மக்களையும் இணைக்கிறது. இந்த அரசின் பணி கலாச்சாரத்தை இது பிரதிபலிக்கிறது”, என்று கூறினார். “கலாச்சார இணைப்பையும், அறிவுசார் இணைப்பையும் நமது அரசு வலுப்படுத்தி வருகிறது”, என்று அவர் தெரிவித்தார். பத்ம மற்றும் இதர விருதுகளை மக்களின் விருதுகளாக மாற்றும் வகையில் உண்மையான கதாநாயகர்களை கௌரவிப்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். “முன்பு போல் இல்லாமல், சிபாரிசின் அடிப்படையில் அல்லாமல், நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பத்ம விருதுகள் தற்போது வழங்கப்படுகிறது”, என்று பிரதமர் கூறினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித மற்றும் ஆன்மீக தலங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அங்கு சுற்றுலா அதிகரிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், சுற்றுலா தலங்களுக்கு மக்களின் வரத்து அதிகரித்திருப்பது, கலாச்சார இணைப்பு மேம்பட்டிருப்பதை உணர்த்துகிறது என்றார். பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களை மையமாகக் கொண்ட அருங்காட்சியகங்கள், பாபாசாகேப் அம்பேத்கரின் பஞ்சதீர்த்தங்கள், பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் தேசிய போர் நினைவுச் சின்னம் முதலியவற்றை எடுத்துக்காட்டாக கூறிய அவர், இது போன்ற முன்முயற்சிகள் அறிவுசார் மற்றும் உணர்வுப் பூர்வமான இணைப்பிற்கு புதிய பரிமாணங்களை வழங்குகிறது என்று தெரிவித்தார்.
அகில இந்திய வானொலி போன்ற அனைத்து தகவல் தொடர்பு ஊடகங்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் நோக்கங்களை அடிக்கோடிட்டுக் கூறிய பிரதமர், 140 கோடி குடிமக்களையும், நாட்டையும் இணைப்பதுதான் எந்த வகையான இணைப்பின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று தமது உரையை நிறைவு செய்கையில் பிரதமர் குறிப்பிட்டார். தொடர் உரையாடல்களின் வாயிலாக அனைத்து பங்குதாரர்களும் இந்த தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னணி:
நாட்டில் பண்பலை வானொலித் தொடர்பை விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ள நிலையில், 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 84 மாவட்டங்களில் இந்த 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளின் தொடர்பை விரிவாக்குவதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும். பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஆந்திரப்பிரதேசம், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, லடாக், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இவற்றுள் அடங்கும். இந்த விரிவாக்கத்தின் மூலம் அகில இந்திய வானொலியின் பண்பலைச் சேவை இதுவரை கிடைக்கப்பெறாத 2 கோடி மக்கள் இப்போது பயனடைவார்கள். சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்புக்கு ஒலிபரப்பு விரிவாக்கம் பெறும்.
பொதுமக்களை சென்றடைவதில் வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ளார். இந்த ஊடகத்தின் தனித்துவ வலிமையைப் பயன்படுத்தி மிகவும் பரவலாக மக்களை அடைவதற்கு பிரதமர் தொடங்கிய மனதின் குரல் நிகழ்ச்சி இப்போது குறிப்பிடத்தக்க வகையில் 100-வது அத்தியாயத்தை நெருங்குகிறது.
जब बात रेडियो और FM की होती है, तो इससे मेरा रिश्ता एक भावुक श्रोता का भी है, और एक होस्ट का भी है: PM @narendramodi pic.twitter.com/NTrdW7S1Ty
— PMO India (@PMOIndia) April 28, 2023
हमारी सरकार, निरंतर, टेक्नोलॉजी के लोकतंत्रिकरण, Democratization के लिए काम कर रही है। pic.twitter.com/fDNnOH9ADc
— PMO India (@PMOIndia) April 28, 2023
डिजिटल इंडिया ने रेडियो को नए listeners भी दिये हैं, और नई सोच भी दी है। pic.twitter.com/JIH9cI2NNF
— PMO India (@PMOIndia) April 28, 2023