“ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது- 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா தீவிரம் காட்டும். இதுதான் 140 கோடி இந்தியர்களின் கனவு”
“2029-ம் ஆண்டு நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்தவும் இந்தியா ஆர்வமாக உள்ளது”
"இந்தியர்கள் விளையாட்டு பிரியர்கள் மட்டுமல்ல - நாங்களும் அதை வாழ்வோடு இணைந்த அம்சமாகப் பார்க்கிறோம்"
"இந்தியாவின் விளையாட்டு பாரம்பரியம் முழு உலகிற்கும் சொந்தமானது"
"விளையாட்டில் தோற்றவர்கள் இல்லை - வெற்றியாளர்கள் மற்றும் கற்றவர்கள் மட்டுமே உள்ளனர்"
"இந்தியாவில் விளையாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்"
“ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க ஐஓசி நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. விரைவில் சாதகமான செய்தி வரும் என்று நம்புகிறோம்.”

பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வை இன்று தொடங்கி வைத்தார். விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்பை இந்த அமர்வு வழங்குகிறது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி குறித்து அவர் பார்வையாளர்களிடம் தெரிவித்தார். இந்த வரலாற்று வெற்றிக்காக இந்திய அணிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

 

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக விளையாட்டு இருந்து வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் கிராமங்களுக்குச் செல்லும்போது, விளையாட்டு இல்லாமல் எந்தவொரு பண்டிகையும் முழுமையடையாது என்று பிரதமர் கூறினார். இந்தியர்கள் வெறும் விளையாட்டு பிரியர்கள் மட்டுமல்ல, என்றும் அதை வாழ்வின் ஒரு அங்கமாக கருதுவதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் விளையாட்டு கலாச்சாரம் பிரதிபலிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார். சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம் அல்லது அதற்குப் பிந்தைய சகாப்தம் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் விளையாட்டுப் பாரம்பரியம் மிகவும் செழிப்பாக இருந்தது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். குதிரையேற்றம், நீச்சல், வில்வித்தை, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் உட்பட 64 வகை விளையாட்டுகளில் இந்தியர்கள் தேர்ச்சி பெற்றிருந்த்தாகவும், அவற்றில் சிறந்து விளங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வில்வித்தை விளையாட்டைக் கற்றுக்கொள்வதற்காக 'தனுர் வேத சம்ஹிதா' வெளியிடப்பட்டது என்று அவர் கூறினார். அதில் தனுஷ்வன், சக்ரா, பாலா, வாள்வீச்சு மற்றும் மல்யுத்தம் ஆகிய 7 திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த பழங்கால விளையாட்டு பாரம்பரியத்திற்கான அறிவியல் சான்றுகளை பிரதமர் விளக்கினார். தோலாவிரா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை குறிப்பிட்ட அவர், 5000 ஆண்டுகள் பழமையான இந்த நகரத்தின் நகர்ப்புற திட்டமிடலில் விளையாட்டு உள்கட்டமைப்பு குறித்து பேசினார். அகழ்வாராய்ச்சியில், இரண்டு அரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் அவற்றில் ஒன்று அந்த நேரத்தில் உலகின் பழமையான மற்றும் பெரிய அரங்கமாக இருந்தது என்றும் பிரதமர் கூறினார். இதேபோல், ராக்கி கர்ஹியில் விளையாட்டு தொடர்பான கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த விளையாட்டுப் பாரம்பரியம் முழு உலகிற்கும் சொந்தமானது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

விளையாட்டில் தோல்வி அடைந்தவர்கள் யாரும் இல்லை எனவும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதன் மூலம் கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். விளையாட்டின் மொழியும் உணர்வும் உலகளாவியவை என்று அவர் தெரிவித்தார். விளையாட்டு என்பது வெறும் போட்டி அல்ல எனவும் விளையாட்டு மனிதகுலத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். அதனால்தான் உலக அளவில் சாதனைகள் கொண்டாடப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற 'வசுதைவ குடும்பகம்' என்ற உணர்வையும் விளையாட்டு வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவில் விளையாட்டுகளின் வளர்ச்சிக்கான அண்மைக்கால நடவடிக்கைகளையும் பிரதமர் பட்டியலிட்டார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள், நாடாளுமன்ற உறுப்பினர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அடுத்து நடைபெறவிருக்கும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் விளையாட்டில் ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் எடுத்துரைத்தார்.

 

விளையாட்டு உலகில் இந்தியாவின் பிரகாசமான செயல்திறனுக்கு அரசின் முயற்சிகள் முக்கிய காரணம் என பிரதமர் கூறினார். ஒலிம்பிக்கின் கடந்த போட்டியில் பல விளையாட்டு வீரர்களின் அற்புதமான செயல்திறனை நினைவுகூர்ந்த அவர், சமீபத்தில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில் இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்கள் செய்த புதிய சாதனைகள் என பலவற்றை எடுத்துரைத்தார். நேர்மறையான மாற்றங்கள் இந்தியாவில் வேகமாக மாறிவரும் விளையாட்டுத் திறனின் அடையாளம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான திறனை இந்தியா வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். 186 நாடுகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பைப் போட்டி, ஹாக்கி உலகக் கோப்பை, மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற உலகளாவிய போட்டிகளை அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் போட்டியை இந்தியா நடத்துகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக சங்கத்தின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

வேகமாக விரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பு காரணமாக உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று கூறினார். நாட்டின் 60 க்கும் மேற்பட்ட நகரங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்ட ஜி 20 உச்சிமாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளை உதாரணமாக அவர் கூறினார். இது ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் ஒழுங்கு மற்றும் திறனுக்கு சான்றாகும் என்று அவர் கூறினார். இந்தியாவின் 140 கோடி மக்களின் நம்பிக்கையை பிரதமர் எடுத்துரைத்தார்

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என அவர் கூறினார். 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளில் இந்தியா உள்ளது என்றும் இது 140 கோடி இந்தியர்களின் கனவு என்றும் பிரதமர் கூறினார். அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் இந்த கனவை நிறைவேற்ற தேசம் விரும்புகிறது என்று அவர் கூறினார். 2029 ஆம் ஆண்டில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக்கை நடத்தவுமே இந்தியா ஆர்வமாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.சி) இந்தியாவுக்கு தொடர்ந்து தமது ஆதரவை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கானது மட்டுமல்ல, என்றும் இதயங்களை வெல்வதற்கான ஒரு ஊடகமாகும் எனவும் பிரதமர் கூறினார். விளையாட்டு அனைவருக்கும் சொந்தமானது என்று கூறிய அவர் இது சாம்பியன்களை தயார் செய்வது மட்டுமல்லாமல், அமைதி, முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது என்று கூறினார். எனவே, விளையாட்டு உலகை ஒன்றிணைக்கும் மற்றொரு ஊடகமாகும் என அவர் குறிப்பிட்டார். பிரதிநிதிகளை மீண்டும் வரவேற்ற பிரதமர், கூட்டம் தொடங்குவதாக அறிவித்தார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் நீதா அம்பானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுப்பினர்களின் முக்கிய கூட்டமாக ஐஓசி அமர்வு அமைந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் ஐஓசி கூட்ட அமர்வுகளில் எடுக்கப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது முறையாக ஐஓசி அமர்வை நடத்தியுள்ளது. ஐஓசி-யின் 86 வது அமர்வு 1983 ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடைபெற்றது.

 

இந்தியாவில் நடைபெறும் இந்த 141 வது ஐஓசி அமர்வு, உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், விளையாட்டுகளின் சிறப்பைக் கொண்டாடுவதற்கும், ஒலிம்பிக் லட்சியங்களை அடைவதற்கும் நாட்டிற்கு உள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இது விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே தகவல் தொடர்பு மற்றும் அறிவு பகிர்வுக்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த அமர்வில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் திரு தாமஸ் பச் மற்றும் ஐஓசி-யின் பிற உறுப்பினர்கள், இந்திய விளையாட்டுத் துறையின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi