டென்மார்க் பிரதமர் மேன்மை தங்கிய திருமதி மெட்டே ஃப்ரடெரிக்சென்னுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
டென்மார்க் பிரதமராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமர் ஃப்ரடெரிக்சென்னுக்கு, பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா-டென்மார்க் இடையேயான பசுமை உத்தி பங்களிப்பின் முன்னேற்றம் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். உயர்நிலைப் பரிமாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
ஜி20-ன் தற்போதைய இந்தியத் தலைமைத்துவம் பற்றியும், அதன் முக்கிய முன்னுரிமைகள் பற்றியும் பிரதமர் ஃப்ரடெரிக்சென்னிடம் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் முன் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் ஃப்ரடெரிக்சென் அவற்றுக்கு டென்மார்க்கின் முழு ஆதரவை தெரிவித்தார்
இந்தியா- டென்மார்க் உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு 2024-ல் பொருத்தமான முறையில் கொண்டாடவும், தங்களின் உறவுகளை மேலும் அதிகரிப்பதற்கான துறைகளைக் கண்டறியவும் இவ்விரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.