உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்காகவும், தங்களது நெருங்கிய உறவுகளை புதுப்பிப்பதற்காகவும், அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தங்களது முதலாவது நேர்முக சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வரவேற்றார்.
அமெரிக்க-இந்திய உறவுகளை முன்னெடுத்துச் செல்வது, பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவது, ஆசியான், குவாட் போன்ற பிராந்திய குழுக்களாக இணைந்து செயலாற்றுவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நலன்களை மேம்படுத்துவது, அதற்கும் மேலாக, இரு
நாடுகளின் உழைக்கும் குடும்பங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மையை மேம்படுத்துவது, கோவிட்-19 தொற்று மற்றும் இதர சுகாதார சவால்களுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவது, பருவநிலை நடவடிக்கையை அதிகரிக்கும் உலக முயற்சிகளை அதிகரிப்பது, ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவது, நமது மக்களுக்கு ஆதரவளிப்பது, இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது போன்றவற்றில் வழிகாட்டுவதற்கான தெளிவான தொலைநோக்குடன் தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
அதிபர் பைடன், பிரதமர் மோடி ஆகியோர் கடந்த ஓராண்டாக கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அரசுகள், சிவில் சமுதாயம், தொழில்துறையினர், அவசர கால நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதில் ஈடுபட்ட வம்சாவளியினர் என தங்களது நாடுகள் அளித்து வரும் நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து ஆழமான பெருமிதத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். தொற்றுக்கு முடிவு கட்டும் வகையில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், தங்களது சொந்த குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவது பற்றிய தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் வெளியிட்டனர். கோவாக்ஸ் உள்ளிட்ட திறன் வாய்ந்த கோவிட்-19 தடுப்பூசி-களை மீண்டும் ஏற்றுமதி செய்வது என்ற இந்தியாவின் அறிவிப்பை அதிபர் பைடன் வரவேற்றார்.
தொற்றுகளை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, வருங்காலத்தில் தொற்று அபாயங்களை குறைப்பது உள்ளிட்ட உலக சுகாதார நலனுக்கான முக்கிய விஷயங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பதை இரு தலைவர்களும் பாராட்டினர்.
பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அடுத்த கட்டத்துக்கு தயாராவது, பெருந்தொற்றுக்கு எதிராக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், உலக கோவிட்-19 உச்சிமாநாட்டை அழைப்பதற்கான முன்முயற்சிக்காக அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பாரிஸ் உடன்படிக்கைக்கு திரும்புதல் உள்ளிட்ட பருவநிலை நடவடிக்கை குறித்த அமெரிக்க தலைமையின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி வரவேற்றார். 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவும் உள்நாட்டு இலக்கை அடையும் பிரதமர் மோடியின் நோக்கத்துக்கு அதிபர் பைடன் ஆதரவு
தெரிவித்தார். இந்த விஷயத்தில் கோடிக்கணக்கான இந்திய வீடுகளுக்கு தூய்மையான, நம்பிக்கையான எரிசக்திக்கு உத்தரவாதம் அளிக்கும் மின்தொகுப்பு கட்டமைப்பு முதலீடுகளுக்கான நிதியைத் திரட்டுவதன் முக்கியத்துவத்தை அவர் ஆமோதித்தார். அமெரிக்க-இந்திய பருவநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி நிகழ்வு 2030 கூட்டாண்மையின் கீழ், நீடித்த தூய்மையான எரிசக்தி கூட்டாண்மை மற்றும் பருவநிலை நடவடிக்கை, நிதி திரட்டல் பேச்சுவார்த்தையின் இரண்டு முக்கிய வழிகளின் மூலம், அமெரிக்காவும், இந்தியாவும் தூய்மையான எரிசக்தி மேம்பாட்டை, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் துரிதப்படுத்தும். தொழில்துறை மாற்றத்துக்கான ஆளுமை குழுவில் அமெரிக்கா சேருவதை இந்தியா வரவேற்றுள்ளது.
அமெரிக்கா-இந்தியாவுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அதிபர் பைடன் உறுதி அளித்துள்ளார். தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ராணுவத்துக்கு இடையிலான கலந்துரையாடல், நவீன ராணுவ தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பிராந்திய நட்பு நாடுகள் உள்பட பலமுனை தொடர்புகளை விரிவு படுத்துதல் மூலம் இந்தியாவை நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளியாக அங்கீகரிப்பதில் அவர் உறுதியான நிலையை எடுத்துள்ளார். மேம்படுத்தப்பட்ட தொழில்துறை ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சியின் கீழ், ஆளற்ற வான்வெளி வாகனங்களை இணைந்து உருவாக்கும் சமீபத்திய திட்டம் பற்றி அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுபோன்ற மேலும் கூட்டு முயற்சிகளுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அரசுகளும், தனியார் நிறுவனங்களும், தற்போது உள்ள சூழலைப் பயன்படுத்தி, பாதுகாப்பு தொழிலில் கூட்டு உருவாக்கம், கூட்டு உற்பத்தி மேற்கொண்டு பரஸ்பர பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவு படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலான,தொழில் பாதுகாப்பு உடன்படிக்கை உச்சிமாநாட்டின் தொடக்க கூட்டத்தை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
உலக பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட அமெரிக்கா, இந்தியா தலைவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். இதன்படி, யுஎன்எஸ்சிஆர் 1267 தடைக் குழுவால் அறிவிக்கப்பட்ட குழுக்கள் உள்பட,அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இரு நாடுகளும் எடுப்பதுடன், எல்லை கடந்த பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு வழி வகுக்கும் எந்த வித பயங்கரவாத குழுக்களுக்கும், ராணுவ உதவியோ, நிதி, போக்குவரத்து உதவியோ வழங்குவதில்லை என்றும், பயங்கரவாத பதிலிகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது. வரவிருக்கும், அமெரிக்க-இந்திய பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பணிக்குழு, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது, அமெரிக்க-இந்திய உள்நாட்டு பாதுகாப்பு பேச்சுவார்த்தையை புதுப்பிப்பது ஆகிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் நுண்ணறிவு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், சட்ட அமலாக்க ஒத்துழைப்பு வழங்குதல் என நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அமெரிக்க-இந்தியா போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவின் நடவடிக்கைகளை இரு தலைவர்களும் பாராட்டினர். சட்ட விரோத போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது எனவும் அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் பகுதியை பயங்கரவாதிகளின் புகலிடமாகவோ, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமாகவோ, அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவோ, அச்சுறுத்தலுக்கோ அல்லது தாக்குதலுக்கோ இனி பயன்படுத்தக்கூடாது என்ற ஐநா பாதுகாப்பு சபையின் 2593-வது (2021) தீர்மானத்தை தாலிபான்கள் மதித்து நடக்க வேண்டும் என இரு தலைவர்களும் வலியுறுத்தினர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை முறியடிக்க இருவரும் உறுதி மேற்கொண்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆப்கானியர்களும், பிற வெளிநாட்டவரும் பாதுகாப்பாக வெளியேற உதவுவது உள்ளிட்ட அனைத்து உறுதிமொழிகளையும் தாலிபான்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பெண்கள், குழந்தைகள், சிறுபான்மை சமூகத்தினர் உள்பட அனைத்து ஆப்கானியர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தினர்.
நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆப்கானிஸ்தானுக்குள் ஐநாவுக்கு தடையற்ற, பாதுகாப்பான பிரவேசத்துக்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நீண்டகால உறுதிப்பாட்டை மேற்கொள்ளவும் உறுதிபூண்டனர். அனைத்து ஆப்கானியர்களுக்கும் அமைதியான எதிர்காலத்தை முன்னெடுக்க சம்பந்தப்பட்டவர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்குவது என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
மியான்மரில் வன்முறைக்கு முடிவு கட்டுவது, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது, மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது ஆகியவற்றுக்கு இரு தலைவர்களும் குரல் கொடுத்துள்ளனர். ஆசியான் ஐந்து அம்ச கருத்தொற்றுமையை அவசரமாக அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டம், ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பது உள்ளிட்ட பல தரப்பு பிரச்சினைகளில், குவாட் அமைப்பின் கீழ் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை இரு தலைவர்களும் வரவேற்றனர். 2021 ஆகஸ்டில் ஐநா பாதுகாப்பு சபை தலைமைப் பொறுப்பின் போது, இந்தியாவின் வலுவான ஆளுமைக்கு அதிபர் பைடன் பாராட்டு தெரிவித்தார். சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அதிபர் பைடன் உறுதி அளித்தார். நிரந்தர உறுப்பு நாடாக விரும்பும் தகுதியான முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை ஆதரிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெறவும் அவர் ஆதரவு தெரிவித்தார். இந்தோ பசிபிக்-ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் நிலவும் சவால்களை சமாளிக்க முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் வரவேற்றனர்.
சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் ஆகியற்றில் நவீன ஒத்துழைப்புக்கான அமெரிக்கா-இந்தியாவின் காந்தி-கிங் மேம்பாட்டு அறக்கட்டளை தொடங்கப்படுவதை இருவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
வர்த்தக விஷயங்களைச் சமாளித்தல், வர்த்தக விரிவாக்கத்துக்கான பகுதிகளைக் கண்டறிதல், எதிர்கால வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா-அமெரிக்கா வர்த்தக கொள்கையை 2021-க்குள் மீண்டும் அமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தனியார் துறையில் திறமைகளை மேம்படுத்த, அமெரிக்கா-இந்தியா சிஇஓ அமைப்பை ஏற்படுத்தி, வர்த்தக பேச்சுவார்த்தையை 2022 துவக்கத்தில் மேற்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு வகை செய்யும், தற்போது நடைமுறையில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு உடன்படிக்கை பற்றி தலைவர்கள் குறிப்பிட்டனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிவகை பற்றிய வெளிப்படையான, நீடித்த விதிமுறைகளை வகுப்பது பற்றி அமெரிக்காவும், இந்தியாவும் விரிவாக விவாதித்தன. இந்தோ-பசிபிக் வர்த்தக அமைப்பு மற்றும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர்.
பொருளாதார தொழில்நுட்ப கூட்டாண்மைக்கு இரு நாடுகளையும் சேர்ந்த திறன்மிக்க தொழில் வல்லுநர்கள், மாணவர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான விநியோக சங்கிலி பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மருந்து தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம், செமிகண்டக்டர்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் வலுவான இணைப்பை உருவாக்குவதில் இரு நாடுகளையும் சேர்ந்த தனியார் துறையின் ஈடுபாட்டை அவர்கள் வரவேற்றனர். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், பாதுகாப்பு முன்னுரிமைகளை அடையவும் வகை செய்யும் தொழில்நுட்பங்களை இருவரும் அங்கீகரித்தனர். முக்கிய பகுதிகளில் உயர் தொழில்நுட்ப வர்த்தகத்தை ஊக்குவிக்க ,2022-ன் துவக்கத்தில் உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குழுவை மீண்டும் உயிர்ப்பிப்பது பற்றி அவர்கள் ஆவலுடன் உள்ளனர்.
விண்வெளி, இணைய வெளி, சுகாதார பாதுகாப்பு, செமி கண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, 5ஜி, 6ஜி, வருங்கால தலைமுறை தொலைத் தொடர்பு தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், புதுமை நடைமுறைகளை வரையறுக்கும் பிளாக்செயின் ஆகியவற்றில் உருவாகும் தொழில்நுட்பம் போன்ற மேலும் பல புதிய துறைகளில் கூட்டாண்மையை விரிவாக்க அமெரிக்காவும், இந்தியாவும் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது என இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். இணையவெளி குற்றங்களைத் தடுக்கவும், தங்கள் எல்லைகளுக்குள் செயல்படும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்துள்ள இரு தலைவர்களும், இந்த விஷயத்தில் முக்கிய தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். இணைய வெளி அச்சுறுத்தல்களைக் களைய முன்னுரிமை எடுக்க வேண்டியதை வலியுறுத்தியுள்ள தலைவர்கள், பரஸ்பர தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், நீடித்த திறன் கட்டமைப்பை உருவாக்குதல், இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளுதல், கூட்டு கூட்டங்கள் நடத்துதல், சிறந்த நடைமுறைகளை செயல்படுத்துதல், பயிற்சி அளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளனர்.
விண்வெளி நடவடிக்கைகளில் நீண்டகால நீடித்த தன்மையை உறுதி செய்வதை நோக்கிய தரவுகள் மற்றும் சேவைகளை பகிர்ந்து கொள்ள உதவும் விண்வெளி சூழல் விழிப்புணர்வு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வதை இரு தலைவர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
உலக நட்பு நாடுகளான அமெரிக்கா, இந்தியா ஆகியவை கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மக்களுக்கிடையிலான செயல்பாடுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தீர்மானித்துள்ளன. இந்த
ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களைக் கொண்ட 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் நெருங்கிய ஆலோசனைகளை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியாவின் சிறப்பு கூட்டுறவின் அடையாளமாக ,இரு நாடுகளின் மக்கள் இடையிலான ஆழமான, உயிர்ப்புள்ள பிணைப்பை இரு தலைவர்களும் கொண்டாடியுள்ளனர். இந்த உறவுகள் 75 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பகிரப்பட்ட மாண்புகளான விடுதலை, ஜனநாயகம், பிரபஞ்ச மனித உரிமைகள், சகிப்புத்தன்மை, பன்முகத் தன்மை ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு மற்றவர்களையும் ஊக்குவிக்க அவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கவும், நீடித்த வளர்ச்சி, உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கிய முயற்சிகளை முன்னெடுக்கவும் அவர்கள் உறுதி மேற்கொண்டனர்.
இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தொன்மை வாய்ந்த பழங்கால பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பியிருப்பதையொட்டி பிரதமர் மோடி பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டார். கலாச்சார பொருட்களை திருடி, கடத்தும் சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்கும் தங்கள் முயற்சிகளை வலுப்படுத்த அவர்கள் உறுதி மேற்கொண்டனர்.
மாண்புகள், கொள்கைகளைப் பிரதிபலித்துள்ள அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்கு இடையே, அமெரிக்க-இந்திய விரிவான உலக பாதுகாப்பு கூட்டாண்மையை மேம்படுத்த உறுதி மேற்கொண்டனர். அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சாதிக்கும் இலக்குகளை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
Each of the subjects mentioned by @POTUS are crucial for the India-USA friendship. His efforts on COVID-19, mitigating climate change and the Quad are noteworthy: PM @narendramodi pic.twitter.com/aIM2Ihe8Vb
— PMO India (@PMOIndia) September 24, 2021
President @JoeBiden mentioned Gandhi Ji’s Jayanti. Gandhi Ji spoke about Trusteeship, a concept which is very important for our planet in the times to come: PM @narendramodi pic.twitter.com/m3Qv1O0XOD
— PMO India (@PMOIndia) September 24, 2021
I would like to thank @POTUS for the warm welcome. I recall our interactions in 2014 and 2016. That time you had shared your vision for ties between India and USA. I am glad to see you are working to realise this vision: PM @narendramodi begins his remarks at the White House https://t.co/V2Pj8XRap1
— PMO India (@PMOIndia) September 24, 2021
Glimpses from the meeting between PM @narendramodi and @POTUS @JoeBiden at the White House. pic.twitter.com/YjishxDVNK
— PMO India (@PMOIndia) September 24, 2021