மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும். குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.
வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடியின சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அரசுத் திட்டப் பலன்களைப் பெற முடியவில்லை. இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆஹார் அனுதன் திட்டத்தின் கீழ் மாதாந்திர தவணைத் தொகையை சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு சத்தான உணவுக்காக மாதத்திற்கு ரூ.1500 வழங்கப்படுகிறது.
ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவைப் பிரதமர் வழங்கினார். இது மக்கள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைக்கான ஆவண ஆதாரங்களை வழங்கும்.
மேலும், பிரதமரின் முன்மாதிரி கிராமத் (ஆதர்ஷ் கிராம திட்டம்) திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியைப் பிரதமர் வழங்கியுள்ளார். அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடைகள், சுகாதார மையங்கள், பள்ளிகளில் கூடுதல் அறைகள் மற்றும் உட்புற சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும்.
ஜபுவாவில் 'முதல்வரின் வளர்ச்சிப் பள்ளி' என்ற பள்ளிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மாணவர்களுக்கு நவீன வகுப்புகள், மின் நூலகம் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த பள்ளி திகழும்.
மத்தியப் பிரதேசத்தில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தார் மற்றும் ரத்லமின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான 'தலவாடா திட்டம்' அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் அடங்கும். புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கத்தின் (அம்ருத்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 14 நகர்ப்புற நீர் வழங்கல் திட்டங்கள், மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற வீடுகளுக்கு பயனளிக்கும். ஜபுவாவின் 50 கிராமப் பஞ்சாயத்துகளுக்கான 'நல் ஜல்' திட்டத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர், பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரத்லம் ரயில் நிலையம் மற்றும் மேக்நகர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டியதும் இதில் அடங்கும். இந்த நிலையங்கள் அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்படும். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரயில் திட்டங்களில் இந்தூர்-தேவாஸ்-உஜ்ஜைன் சி கேபின் ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக்குதல், பர்கேரா-புத்னி-இடார்சியை இணைக்கும் மூன்றாவது பாதை உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும். இந்தத் திட்டங்கள் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களுக்கான பயண நேரத்தைக் குறைக்கவும் உதவும்.
தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் ஹர்தா-பெதுல்-லில் (தொகுப்பு-1) 30 கிலோ மீட்டர் (ஹர்தா-தேமாகான்) வரை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் உட்பட மத்தியப் பிரதேசத்தில் ரூ. 3,275 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை-752டி-யின் உஜ்ஜைன் தேவாஸ் பிரிவு, இந்தூர்-குஜராத் மத்தியப் பிரதேசத்தின் நான்கு வழி (16 கிலோமீட்டர்) தேசிய நெடுஞ்சாலை 47-ன் எல்லைப் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை-47-ல் சிச்சோலி-பெதுல் (தொகுப்பு-III) ஹர்தா-பெதுல் நான்கு வழிச்சாலை, மற்றும் தேசிய நெடுஞ்சாலை-552ஜி-யின் உஜ்ஜைன் ஜலாவார் பிரிவு ஆகியவற்றையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சாலை இணைப்பை மேம்படுத்துவதோடு, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
மேலும், கழிவுகள் கொட்டும் பகுதியைச் சீரமைத்தல் மற்றும் மின்சார துணை மின் நிலையம் போன்ற பிற மேம்பாட்டுத் திட்டப் பணிகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திரு மங்குபாய் சி படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.