மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மஹாகல் லோக்கில் மஹாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மஹாகல் கோயிலின் பாரம்பரிய உடையில் பிரதமர் வந்தார். அவர் நந்தி துவாரிலிருந்து மஹாகால் லோக்கிற்கு சென்றார். அவர் உள் கருவறையில் பூஜை மற்றும் ஆரத்தி செய்தார். மந்திரங்கள் முழங்கியபடி பிரதமர் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தார். இந்த முக்கியமான நிகழ்வின் ஆன்மீக விழாவைத் தொடர்ந்து, புனித நந்தியின் சிலைக்கு அருகில் அமர்ந்து, திரு மோடியும் பிரார்த்தனை செய்தார்.
ஸ்ரீ மஹாகல் லோக்கின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் அதற்கான பலகையை பிரதமர் திறந்து வைத்தார். கோவில் துறவிகளை சந்தித்த பிரதமர், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் மஹாகல் லோக் கோயில் வளாகத்திற்குச் சென்ற பிரதமர், நடைபயணம் மேற்கொண்டு சப்திரிஷி மண்டல், மண்டபம், திரிபுராசுர வத் மற்றும் நவ்கர் ஆகியவற்றைப் பார்வையிட்டார். சிவபுராணத்தில் உள்ள சிருஷ்டிச் செயல், விநாயகரின் பிறப்பு, சதி மற்றும் தக்ஷனின் கதை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சுவரோவியங்களையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார். பின்னர் திரு மோடி கலாச்சார நிகழ்ச்சி ஒன்றை கண்டுகளித்தார், மானசரோவரில் மல்காம்ப் நிகழ்ச்சியைக் கண்டார். இதைத் தொடர்ந்து பாரத மாதா கோயிலில் தரிசனம் செய்யப்பட்டது.
பிரதமருடன் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.