தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ. 11,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் பிபிநகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல், ஹைதராபாத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், செகந்திராபாத் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகள் ஆகியவை முக்கியமானவையாகும். ரயில்வே சார்ந்த மற்ற வளர்ச்சித்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சி வேகமெடுக்க வாய்ப்பளித்ததற்காக அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்திருப்பதன் மூலம், ஐடி நகரமான ஹைதராபாத்தும், சுவாமி ஏழுமலையானின் வசிப்பிடமான திருப்பதியும் இணைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த ரயில் சேவை ஆன்மீக நம்பிக்கை, நவீனத்துவம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாவை வெற்றிகரமாக இணைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தப் பிரதமர், இன்றைய ரூ.11,300 கோடி மதிப்பிலான ரயில்வே, சாலை இணைப்பு மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்காக தெலங்கானா மக்களை வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
தெலங்கானா மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அம்மாநிலத்தில் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவது மத்திய அரசின் கடமை என்று கூறிய அவர், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற வரிகளின் உத்வேகத்தையும் எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாதிரியாக தெலங்கானா மாநிலத்தை மாற்றுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினார். உதாரணமாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் 70 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் சேவைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதுடன், ஹைதராபாத்தின் வளர்ச்சிக்காக பன்முனைய போக்குவரத்து சேவை (எம்எம்டிஎஸ்) உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இன்றைக்கு 13 எம்எம்டிஎஸ் சேவைக்காக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், தெலங்கானாவின் வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பலனடைவதுடன், செகந்திராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் புதிய தொழில் மையங்களும், முதலீட்டுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்த வேளையிலும், இரு நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வரும் இந்த வேளையிலும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சாதனை அளவில் முதலீடு செய்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பெருமிதம் தெரிவித்தார். இந்தாண்டு பட்ஜெட்டில் நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதையும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெலங்கானா மாநில ரயில்வே பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 17 மடங்கு அதிகரித்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய ரயில் பாதைகள், இரட்டை ரயில்பாதைகள், ரயில்வே மின்மயமாக்கல் ஆகிய பணிகள் குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். இதற்கு, செகந்திராபாத் - மெகபூபாநகர் மின்மயமாக்கல் திட்டம் பிரதான உதாரணம் என்றார். இதன் மூலம் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு இடையேயான சாலை இணைப்பு மேம்படும் என்றும் கூறினார். மேலும் நாட்டில் முதன்மை ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் முயற்சிகளின் ஒருபகுதியாக, செகந்திராபாத் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தெலங்கானாவின் நெடுஞ்சாலை இணைப்புத் திட்டங்கள் வேகமெடுத்திருப்பதையும், இன்றைக்கு நான்கு ரயில்வே நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருப்பதையும் நினைவு கூர்ந்தார். அக்கல்காட்-கர்னூல் நெடுஞ்சாலை திட்டம் ரூ.2,300 கோடி செலவில் கட்டப்பட்டு வருவதாகவும், மெகப்பூபா நகர் - சின்சோலி நெடுஞ்சாலை பணிகள் ரூ. 1,300 கோடியிலும், கல்வாகுர்த்தி- கோலாப்பூர் நெடுஞ்சாலைப் பணிகள் ரூ. 900 கோடியிலும், கம்மம் -தேவரப்பல்லி சாலை இணைப்புப் பணிகள் ரூ.2,700 கோடியிலும் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். தெலங்கானாவில் நவீன நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2024-ம் ஆண்டு 2,500 கிலோ மீட்டராக இருந்த தெலங்கானா தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம், இன்றைக்கு 5000 கிலோ மீட்டர் அளவுக்கு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹைதராபாத் ரிங் சாலை உள்ளிட்ட ரூ. 60,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
தெலங்கானா மாநிலத்தில் தொழில் மற்றும் வேளாண் துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜவுளி துறையானது விவசாயிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் ஆதாரமாக திகழ்கிறது. நாடு முழுவதிலும் 7 மிகப்பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் தெலங்கானா மாநிலமும் ஒன்றாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பிபிநகரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதை சுட்டிக்காட்டிய பிரதமர், தெலங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது. இன்றைய திட்டங்கள், பயணம் மேற்கொள்வதை எளிதாக்கி, வாழ்க்கை முறையை எளிதாக்கி, தெலங்கானாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குகிறது. மாநில அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் மத்திய அரசு திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நிறைவேறாமல் போகிறது. இதன் விளைவாக தெலங்கானா மாநில மக்களுக்குத்தான் இழப்பு ஏற்படுகிறது. வளர்ச்சித் தொடர்பான திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் காலதாமதங்களை மாநில அரசு சரிசெய்து, துரிதப்படுத்த வேண்டுமென்று திரு. மோடி வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், வளர்ச்சித் தொடர்பான நடவடிக்கைகளை கண்டு ஒரு சிலர் போராட ஆரம்பித்துவிடுகின்றனர். வாரிசு அரசியல் செய்பவர்களும், ஊழலை ஊக்குவிப்பவர்களும் நாட்டு நலனிலும், சமூக நல்வாழ்விலும் அக்கறை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் நேர்மையாக பணியாற்றுபவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திலும், முதலீட்டிலும் தங்கள் குடும்ப நலனை மட்டும் கருத்தில் கொள்பவர்கள் மீது பிரதமர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
எப்பொழுதெல்லாம் வாரிசு அரசியல் நடைபெறுகிறதோ, அப்பொழுதெல்லாம் ஊழல் அங்கு வளர ஆரம்பித்துவிடுகிறது. இதுவே ஊழலுக்கும், வாரிசு அரசியல் செய்பவர்களுக்கும் உள்ள ஒற்றுமையாகும். குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கட்டுப்பாடுகள் முக்கியத்துவமாக அமைகிறது. வாரிசு அரசியலை ஊக்குவிப்பவர்கள் அனைத்து அமைப்புகளையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புகிறார்கள். அந்த கட்டுப்பாட்டை யாராவது எதிர்த்துக் கேட்கும் பொழுது வெறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். நேரடி/ பணப் பரிமாற்றத் திட்டம் மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிப்பது போன்றவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது வாரிசு அரசியல் செய்பவர்கள் அதனை தடுத்து எந்த பயனாளிக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு விரும்புகின்றனர். அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக அந்த குறிப்பிட்ட குடும்பத்தை தொடர்ந்துப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக ஊழல் மூலம் வந்த பணம் அந்த குடும்பத்திற்கே வந்து சேர வேண்டும். மூன்றாவதாக ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் பணம் ஊழல் செய்பவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும். இதுவே ஊழலின் ஆணிவேராக இருக்கின்றது. மத்திய அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் மூலம், அவர்கள் கோபம் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக நீதிமன்றங்களை அணுகுகின்றனர். ஆனால் அங்கும் அவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. நமது அரசியல் அமைப்பின் மைய உணர்வானது அனைவரும் உயர்வோம் என்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டு இருப்பதன் மூலம் ஜனநாயக மாண்பு வலுப்பெறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் வாரிசு அரசியலுக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி மத்திய அரசு மீண்டு வந்ததை ஒட்டுமொத்த நாடே உற்றுநோக்கியது. கடந்த 9 ஆண்டுகால கட்டத்தில் நம் நாட்டின் 11 கோடி தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் கழிப்பறை வசதி பெற்றனர். அதில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 30 லட்ச குடும்பங்களும் அடங்கும். நம் நாட்டின் 9 கோடி சகோதரிகளும், மகள்களும் இலவச உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர். இதில் கடந்த 9 ஆண்டுகளில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 11 லட்ச ஏழை, எளிய குடும்பங்களும் அடங்கும்.
இன்று 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு இலவச சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 1 கோடி குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் முதன்முறையாக ஜன் தன் வங்கி கணக்கை ஆரம்பித்துள்ளனர். உத்தரவாதமின்றி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2.50 லட்சம் சிறு தொழில் முனைவோர்கள் பயனடைந்துள்ளனர். 5 லட்சம் தெருவோர வியாபாரிகள் முதல்முறையாக வங்கி கடன்களை பெற்றுள்ளனர். பிரதமரின் விவசாயி வருவாய் ஆதரவு நிதித் திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 40 லட்சம் சிறு விவசாயிகள் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளனர்.
எப்பொழுது நாடு ஒரு சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, அனைவரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் செயல்படும் பொழுதுதான் உண்மையான சமூக நீதி நிலைத்திருக்கும். ஒட்டுமொத்த நாடும், தெலங்கானா மாநிலமும் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற பாதையில் பயணித்து அனைவரும் முயற்சிப்போம் என்ற நிலைபாட்டோடு வளர்ச்சி நோக்கி பயணிக்கிறது. சுதந்திர இந்தியாவின் விடுதலை பெருவிழா அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு தெலங்கானா மாநிலத்தின் வேகமான வளர்ச்சி முக்கியப் பங்காற்றும். இறுதியாக பிரதமர் தெலங்கானா மாநிலத்தில் அடுத்த 25 ஆண்டிற்கான வளர்ச்சி பயணத்தின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டினார்.
தெலங்கானா ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, மல்காஜ்கிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ. ரேவந்த் ரெட்டி மற்றும் தெலங்கானா மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
பின்னணி
செகந்திராபாத் இரயில்வே நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் ரூ.720 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளதன் விளைவாக உலகத்தரமிக்க சேவை வசதிகளும், சிறந்த வடிவமைப்புடன் கூடிய இரயில் நிலையக் கட்டிடமும் உருவாகும். மேலும் அந்த இரயில் நிலையத்தில் இரண்டு அடுக்கு இடைவெளி கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டு, பயணிகள் பல்முனை இணைப்பு வசதியை பெறும் வகையில் உருவாக்கப்படும். இதனால் இரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற போக்குவரத்து வசதிகளை எளிதாக பயன்படுத்த முடியும்.
இந்த நிகழ்வின் போது ஹைதராபாத் - செகந்திராபாத் இரட்டை நகர பகுதியில் 13 பல்முனைய போக்குவரத்து சேவை வசதியை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் விளைவாக பயணிகள் வேகமாகவும், வசதியாகவும், சௌகரியமாகவும் பயணிக்க முடியும். செகந்திராபாத் – மெகபூப் நகர் திட்டத்தின் கீழ் இரட்டை வழித்தடம் மற்றும் மின்சாரமயமாக்கல் இரயில் சேவை வசதிகளை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார். சுமார் 85 கிலோமீட்டர் நீளம் கொண்ட வழித்தட திட்டம் ரூ. 1,410 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையில்லா இணைப்பு வசதியையும், இரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிக்கவும் இந்த திட்டம் பயனளிக்கும்.
ஹைதராபாத்தின் பிபிநகரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் நாடு முழுவதிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பிரதமர் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றார் என்பதற்கு சான்றாகும். எய்ம்ஸ் பிபிநகர் சுமார் ரூ.1,350 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது. விரிவான, தரமான, முழுமையான, மருத்துவ சேவைகளை தெலங்கானா மாநில மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு இந்த எய்ம்ஸ் பிபிநகர் முக்கிய பங்காற்றும்.
தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேச மாநிலங்களை சாலை வழியாக இணைக்கும் சுமார் ரூ.7,850 கோடி மதிப்பீட்டிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் அந்தப் பகுதியில் சமூகப் பொருளாதார மேம்பாடு அடையும்.
तेलंगाना-आंध्र प्रदेश को जोड़ने वाली वंदेभारत एक्सप्रेस, आस्था, आधुनिकता, टेक्नॉलॉजी और टूरिज्म को कनेक्ट करने वाली है। pic.twitter.com/gtfH3swsnA
— PMO India (@PMOIndia) April 8, 2023
आज का नया भारत, 21वीं सदी का नया भारत, तेजी से देश के कोने-कोने में मॉडर्न इंफ्रा बना रहा है। pic.twitter.com/KAf3YEYG29
— PMO India (@PMOIndia) April 8, 2023
The projects launched today in Telangana will further 'Ease of Travel,' 'Ease of Living' as well as 'Ease of Doing Business' in the state. pic.twitter.com/wOrCyfcRQW
— PMO India (@PMOIndia) April 8, 2023
हम सबका साथ-सबका विकास-सबका विश्वास-सबका प्रयास के मंत्र को लेकर आगे बढ़ रहे हैं। pic.twitter.com/0izB7Bbcck
— PMO India (@PMOIndia) April 8, 2023