இந்தியாவில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் சர்வதேச அளவில் இந்திய பொம்மைகளுக்கு மதிப்பை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் பல்வேறு பொம்மைத் தயாரிப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார். கலாச்சாரத்துடன் தொடர்புடையது மட்டுமன்றி, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வாழ்க்கைத்திறன் மற்றும் உளவியல் திறனை ஏற்படுத்த உதவும் வகையிலான உள்நாட்டு பொம்மைகளை ஆயிரக்கணக்கான கலைஞர்கள் தயாரித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த பொம்மைத் தயாரிப்புத் தொகுப்புப் பகுதிகளைப் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் முறைகள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்திய பொம்மைச் சந்தைக்கு மிகப்பெரும் வாய்ப்பு இருப்பதாகவும், சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்பதை ஊக்குவித்து பொம்மைத் தயாரிப்புத் துறையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதுடன், சர்வதேசத் தரத்தை ஏற்படுத்தும் வகையில் தரமான பொருள்களை உற்பத்தி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
குழந்தைகளின் உளவியல் தன்மை/அறிவாற்றலில் பொம்மைகளால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நாட்டின் எதிர்கால சந்ததியினரை வடிவமைத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவியாக பொம்மைகளை எவ்வாறு மாற்ற முடியும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.