ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். உயர்நிலைக் குழு குறித்த அறிவிப்பு டிசம்பர் 20, 2021 அன்று வெளியிடப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 53 பேர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நினைவேந்தல் கொண்டாட்டத்திற்கான செயல்திட்டம் குறித்து கலாச்சாரத்துறைச் செயலாளர் , திரு கோவிந்த் மோகன் விளக்கமளித்ததோடு, ஸ்ரீ அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவை உரிய முறையில் கொண்டாடுவதற்கு மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் ஆலோசனைகளை வரவேற்பதாகக் கூறினார். .
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ அரவிந்தரின் நினைவேந்தல் குறித்த மதிப்புமிக்க எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். ஸ்ரீ அரவிந்தரின் தத்துவமான ‘புரட்சி’ மற்றும் ‘பரிணாம வளர்ச்சி’ ஆகிய இரண்டு அம்சங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், நினைவேந்தலின் ஒரு பகுதியாக அவை வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். ஸ்ரீ அரவிந்தரால் முன்வைக்கப்பட்ட மாமனிதர்களை (மஹா மாணவ்) உருவாக்க, மனிதனில் இருந்து கடவுள் வரை (நர் டூ நாராயண்) என்ற தத்துவத்தில் பொதிந்துள்ள மகத்துவமிக்க கருத்தை உணருமாறு இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், என்றார் அவர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஆன்மீகத்தின் வாயிலாக பங்களிப்பது உலகின் ஆன்மீகத் தலைமையகமாக இந்தியாவின் பொறுப்பு என்று பிரதமர் மேலும் கூறினார். இந்த தருணத்தில் நாடு முழுவதும் உள்ள 150 பல்கலைக்கழகங்கள் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை மற்றும் தத்துவத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய 150 கட்டுரைகளை எழுதி வெளியிடுவதில் ஈடுபட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
தேசிய இளைஞர் தின கொண்டாட்டத்தை ஒட்டி, புதுச்சேரியில் இருந்து ஸ்ரீ அரவிந்தரின் நினைவுக் கொண்டாட்டங்களைத் தொடங்க வேண்டும் எனப் பிரதமர் முன்மொழிந்தார். இதனால், 1910 முதல் 1950 வரை ஸ்ரீ அரவிந்தர் தமது வாழ்நாளைக் கழித்த புதுச்சேரிக்குச் சென்று அவரது வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஊக்குவிக்கபடுவார்கள் என்றார். குஜராத் முதல்வராக தாம் இருந்த போது ஶ்ரீ அரவிந்தரின் சீடரான ஶ்ரீ கிரீத் ஜோஷியுடன் தாம் நடத்திய உரையாடல்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். அந்த உரையாடல்கள் மூலம் ஸ்ரீ அரவிந்தரின் சிந்தனைகள் தம்மை செழுமைப்படுத்தியது என்றும், தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் அவர் ஈடுபட்ட போது ஆழமாக பிரதிபலித்தது என்றும் அவர் கூறினார். ஸ்ரீ அரவிந்தர் பற்றிய ஸ்ரீ கிரீத் ஜோஷியின் இலக்கியங்கள் உலகம் முழுவதும் பெரியளவில் பரவ வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
பங்கேற்பாளர்களின் மதிப்புமிக்க ஆலோசனைகள் மற்றும் அவர்கள் செலவிட்ட நேரத்திற்கு நன்றி தெரிவித்து கூட்டத்தை உள்துறை அமைச்சர்திரு அமித் ஷா நிறைவு செய்தார்.
உயர்நிலைக் குழுவின் இன்றைய கூட்டம் கலப்பு முறையில் நடைபெற்றது. 16 மதிப்புமிக்க உறுப்பினர்கள் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டனர், 22 உறுப்பினர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களை உள்துறை அமைச்சர் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். ஸ்ரீ அரவிந்தரின் ஒருங்கிணைந்த கல்வி என்ற கருத்து புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் பாடத்திட்டத்தில் இக்கருத்து சேர்க்கப்பட வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் கருத்துத் தெரிவித்தனர்.