நாட்டில் கொவிட்-19 தொற்றின் பாதிப்பு நிலவரம், உள்கட்டமைப்பின் தயார்நிலை, தடுப்பூசி திட்டத்தின் நிலவரம், அதிகரித்து வரும் தொற்றின் புதிய வகை மற்றும் அதன் தாக்கங்கள் முதலியவை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. உலகம் முழுவதும் ஒரு சில நாடுகளில் கொவிட்- 19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொவிட் தொற்றால் இந்தியாவில் தினசரி பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 153 ஆக குறைந்து வருவதாக அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர். எனினும் கடந்த ஆறு வாரங்களில் சர்வதேச அளவில் தினமும் சராசரியாக 5.9 லட்சம் பாதிப்புகள் பதிவாகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பிரதமர் எச்சரித்தார். கொவிட் தொற்று முற்றிலும் நீங்கவில்லை என்பதால் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அனைத்து நிலைகளிலும் தேவையான உள்கட்டமைப்புகள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். பிராணவாயு சிலிண்டர்கள், செயற்கை சுவாச கருவிகள், மனித வளம் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளின் இருப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பரிசோதனை மற்றும் மரபணு சோதனைகளை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். அனைத்து வேளைகளிலும், குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலங்களில், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற கொவிட் சரியான நடத்தைமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். மூத்த குடிமக்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ்களை போட்டுக்கொள்வது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார், நிதி ஆயோக் உறுப்பினர்கள், செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.