‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக மத்திய அமைச்சகங்கள், அமைப்புகள், குஜராத் அரசின் அமைச்சகம் மற்றும் அமைப்புகளின் தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
புயலால் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு தேவையான உதவிகளை உறுதிசெய்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மின்சாரம், தொலைத்தொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். சேதம் ஏற்படின் உடனடியாக மறு சீரமைப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். விலங்குகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய வானிலைத்துறை அதிகாரிகள், ‘பிபர்ஜாய்’ புயல் ஜூன் 15 நண்பகலில் 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக, 145 கிலோ மீட்டர் வேகம் வரை அதிக காற்றுடன் அதிதீவிர புயலாக மாறி மாண்ட்வி (குஜராத்) கராச்சி (பாகிஸ்தான்) இடையே சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினர். இதன் காரணமாக, ஜூன் 14, 15 ஆகிய நாட்களில் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கட்ச், தேவ் பூமி, துவாரகா, ஜாம்நகர் ஆகிய பகுதிகளில் கனமழையும், போர்பந்தர், ராஜ்கோட், மார்பி, ஜூனாகர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே, புயல் குறித்த வானிலை நிலவரங்களை ஜூன் 6 முதல் அவ்வப்போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் அமைப்புகளுக்கு அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
உள்துறை அமைச்சகமும், 24 மணி நேரமும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் மத்திய அமைப்புகளோடு தொடர்புகொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. தேசிய பேரிடம் மீட்புப்படையைச் சேர்ந்த 15 குழுக்களும், படகுகள், மரவெட்டிகள், தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கப்பற்படை, நிவாரணம், தேடுதல், மீட்புப்பணிகளுக்காக கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. விமானப்படை மற்றும் ராணுவத்தின் பொறியாளர் பிரிவினர், படகுகள், மீட்பு உபகரணங்கள் ஆகியவையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், கடலோரப்பகுதிகளில் வான்வெளி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படையின் மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
புயலை எதிர்கொள்வதற்கு குஜராத் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. முதலமைச்சர் நிலையிலான, மாவட்ட நிர்வாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரங்களும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. அத்துடன், மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் குஜராத் மாநில தலைமைச் செயலாளர், மத்திய அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.