நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் 20 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் / துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ந்த பாரதம் @2047 என்ற தொலைநோக்கு பார்வையை அடைய அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டு உலகின் 10-வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், 2024-ம் ஆண்டில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதே அரசு மற்றும் அனைத்து குடிமக்களின் கூட்டு நோக்கம் என்று அவர் மேலும் கூறினார்.
சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் நமது நாடு ஏற்கனவே நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இறக்குமதியை பிரதானமாகக் கொண்ட நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகிற்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. பாதுகாப்பு, விண்வெளி, ஸ்டார்ட் அப், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நாடு உலக அரங்கில் தனது முத்திரையை பதித்துள்ளது. 140 கோடி குடிமக்களின் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை அவர் பாராட்டினார், இதுவே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான உந்து சக்தியாக உள்ளது என்றார் அவர்.
இந்த தசாப்தம் மாற்றத்தின் தசாப்தம் என்றும், பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்த வாய்ப்புகளை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும், கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் புதுமையான அணுகுமுறைகள் மூலம் வளர்ச்சிக்கு உகந்த நிர்வாகத் திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வை வளர்ந்த மாநிலங்கள் மூலம் நனவாகும் என்றும், வளர்ந்த பாரதம் இயக்கத்தின் லட்சியம் அடிமட்ட அளவில், அதாவது ஒவ்வொரு மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமம் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக, ஒவ்வொரு மாநிலமும் மாவட்டமும் வளர்ந்த பாரதம் @ 2047 ஐ உணர 2047 க்கான ஒரு பார்வையை உருவாக்க வேண்டும்.
நித்தி ஆயோக்கினால் உருவாக்கப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தைப் பாராட்டிய பிரதமர், அளவிடக்கூடிய அளவீடுகளை தொடர்ச்சியாகவும், இணையதளம் மூலமாகவும் கண்காணித்ததே இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிட்டார். பல்வேறு அரசுத் திட்டங்களில் மாவட்டங்களின் செயல்திறனை மேம்படுத்த மாவட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிக்கு இது வழிவகுத்தது என்றார்.
திறன் வாய்ந்த மனித வளத்திற்கான இந்தியாவை உலகம் சாதகமாக நோக்குவதால், வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதை பிரதமர் வலியுறுத்தினார்.
முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகள், திட்டங்கள், செயல்முறைகள் அடங்கிய முதலீட்டுக்கு உகந்த வழிமுறைகளை உருவாக்குமாறு நித்தி ஆயோக்கிற்கு அவர் அறிவுறுத்தினார். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக இந்த அளவீடுகளை மாநிலங்கள் எட்டியுள்ளனவா என்பதைக் கண்காணிக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஊக்கத்தொகைகள் அளிப்பதைவிட சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி, உள்கட்டமைப்பு ஆகியவையும் முக்கியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த மாநில அளவில் ஆற்றுப்படுகை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முன்னுரிமை செயல்திட்டமாக வறுமை இல்லாத நிலையை அடைவதை நாம் முக்கிய இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். வறுமையை திட்ட அடிப்படையில் ஒழிக்காமல், தனிநபர் அடிப்படையில் ஒழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வறுமையை அடிமட்டத்தில் இருந்து அகற்றுவது நமது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வேளாண்மையைப் பன்முகப்படுத்தவும், விவசாயிகளுக்கு சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்தவும் அனைத்து மாநிலங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மண் வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்யவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், இயற்கை விவசாய நடைமுறைகளை பரவலாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் முதுமையடைந்த மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மக்கள்தொகை மேலாண்மைத் திட்டங்களைத் தொடங்குமாறு மாநிலங்களைப் பிரதமர் அறிவுறுத்தினார்.
அனைத்து நிலைகளிலும் உள்ள அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாட்டில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், அதற்காக திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒத்துழைத்து செயல்படுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.
2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்களுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அவர் வழங்கினர். மேலும் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. விவசாயம், கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், குடிநீர், ஆளுகை, டிஜிட்டல்மயமாக்கல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் சில முக்கிய பரிந்துரைகளும் சிறந்த நடைமுறைகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன. 2047-ம் ஆண்டிற்கான மாநில தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்குவதற்கான தங்கள் முயற்சிகளை பல மாநிலங்களும் பகிர்ந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தின்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தெரிவித்த ஆலோசனைகளை ஆய்வு செய்யுமாறு நித்தி ஆயோக்கிற்குப் பிரதமர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அனைத்து முதலமைச்சர்களுக்கும் துணைநிலை ஆளுநர்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார். கூட்டுறவு கூட்டாட்சியின் வலிமையின் மூலம் 2047ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை எட்டும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.