பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரகதி (PRAGATI) கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். மத்திய, மாநில அரசுகளின் ஈடுபாட்டுடன், துடிப்பான நிர்வாகம் மற்றும் உரிய கால அமலாக்கத்திற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பல முனைய தளமான பிரகதி மூலம் பிரதமரின் 33வது கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
பல வகையான திட்டங்கள், குறைகள், செயல் திட்டங்கள் குறித்து இன்றைய பிரகதி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. ரயில்வே அமைச்சகம், MORTH, DPIIT, மின்சார அமைச்சகம் ஆகியவற்றின் செயல் திட்டங்கள் இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ரூ.1.41 லட்சம் செலவிலான இத் திட்டங்கள் 10 மாநிலங்கள் தொடர்புடையவையாக உள்ளன. ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதிகளில் இத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தையும், உரிய அவகாசத்திற்கு முன்னதாகவே முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் தொடர்புடைய செயலாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கோவிட்-19, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் தொடர்பான குறைகள் ஆய்வு செய்யப்பட்டன. பிரதமரின் ஸ்வநிதி, வேளாண்மை சீர்திருத்தங்கள், மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக உருவாக்குதல் குறித்த விஷயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாநில ஏற்றுமதி அணுகுமுறையை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
குறைகளுக்குத் தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், எவ்வளவு குறைகள் தீர்க்கப்படுகின்றன என்பதுடன், அவை தரமான தீர்வாக அமைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். சீர்திருத்தங்களை அமல் செய்தால் தான் பயன் கிடைக்கும் என்று கூறிய அவர், நாட்டில் நிலைமாற்றத்தை ஏற்படுத்த இதுதான் வழிமுறையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
முந்தைய 32 கூட்டங்களிலும், ரூ.12.5 லட்சம் கோடி மதிப்பிலான மொத்தம் 285 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் 17 துறைகளைச் சேர்ந்த 47 திட்டங்கள் மற்றும் குறைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.