மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இன்று நடைபெற்ற "வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம்" நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மேற்கு வங்கத்தில் ரூ.4,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் துறையின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அழகான தேயிலை தோட்ட பூமியில் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இன்றைய திட்டங்கள் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கத்தை நோக்கிய மற்றொரு முன்னெடுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி வடகிழக்கின் நுழைவாயிலாக உள்ளது என்றும், அண்டை நாடுகளுடன் வர்த்தக வழிகளை வழங்குகிறது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். எனவே, மேற்கு வங்கம் மற்றும் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.
நவீனமயமாக்கப்பட்ட ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், ஏக்லாகி - பாலுர்காட், ராணிநகர், ஜல்பைகுரி - ஹல்திபாரி மற்றும் சிலிகுரி - அலுபாரி பிரிவுகளில் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இது வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பூர், கூச் பெஹார் மற்றும் ஜல்பைகுரி பகுதிகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் என்றும், சிலிகுரி - சமுக்தலா பாதை அருகிலுள்ள வனப்பகுதிகளில் மாசுபாட்டைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பர்சோய் – ராதிகாபூர் பிரிவை மின்மயமாக்குவது பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் கூறினார். ராதிகாபூர் மற்றும் சிலிகுரி இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தது குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் ரயில்வேயை வலுப்படுத்துவது வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் கூறினார்
இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே இப்பகுதியிலும் ரயில்களின் அதே வேகத்தை பராமரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், நவீன அதிவேக ரயில்கள் தொடங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார். புதிய ஜல்பைகுரியிலிருந்து டாக்கா கண்டோன்மென்ட் வரை மிதாலி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாலும், வங்கதேச அரசுடன் இணைந்து ராதிகாபூர் ரயில் நிலையம் வரை இணைப்பு நீட்டிக்கப்படுவதாலும் பங்களாதேஷுடனான ரயில் இணைப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்த பல பத்தாண்டுகளில் கிழக்கு இந்தியாவின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போதைய அரசு கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுகிறது என்றார். அதனால்தான் இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வெறும் 4,000 கோடி ரூபாயாக இருந்த ஆண்டு சராசரி ரயில்வே பட்ஜெட் தற்போது ரூ .14,000 கோடியாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
வடக்கு வங்காளத்திலிருந்து குவஹாத்தி மற்றும் ஹவுராவுக்கு பகுதியளவு அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டம் குறித்தும், 500 அமிர்த பாரத நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தில் சிலிகுரி ரயில் நிலையத்தையும் சேர்ப்பது குறித்தும் பிரதமர் பேசினார். "இந்த 10 ஆண்டுகளில், ரயில்வே வளர்ச்சியை பயணிகள் ரயில் வேகத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எங்களது மூன்றாவது பதவிக்காலத்தில் இது அதிவேகத்தில் முன்னேறும்" என்று பிரதமர் மோடி கூறினார்.
வடக்கு மேற்கு வங்கத்தில் ரூ .3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சாலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது குறித்து பிரதமர் பேசினார். தேசிய நெடுஞ்சாலை 27-ல் கோஷ்புகூர் – துப்குரி பிரிவு மற்றும் இஸ்லாம்பூர் புறவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதன் மூலம் ஜல்பைகுரி, சிலிகுரி, மைனாகுரி நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், சிலிகுரி, ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் பகுதிகளுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"துவார், டார்ஜிலிங், கேங்டாக் மற்றும் மிரிக் போன்ற சுற்றுலா தலங்களை அடைவது எளிதாகிவிடும்" என்று பிரதமர் மோடி கூறினார், இது பிராந்தியத்தின் வர்த்தகம், தொழில் மற்றும் தேயிலைத் தோட்டங்களையும் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.
உரையை நிறைவு செய்த பிரதமர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறியதுடன், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக குடிமக்களை வாழ்த்தினார்.
மேற்கு வங்க ஆளுநர் திரு சி வி ஆனந்த போஸ், மத்திய இணையமைச்சர் திரு நிசித் பிரமானிக் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜு பிஸ்தா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.