தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (19-01-2024) கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான தகவல் ஒலிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் இரண்டு விளையாட்டு வீரர்கள் வழங்கிய விளையாட்டு ஜோதியை அவர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கு அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருப்பவர்கள் இளைய இந்தியா மற்றும் புதிய இந்தியாவின் பிரதிநிதிகள் என்றும், விளையாட்டு உலகில் நாட்டை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு தமது நல்வாழ்த்துக்களைப் பிரதமர் தெரிவித்தார். ”ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற உண்மையான உணர்வை நீங்கள் ஒன்றாக வெளிப்படுத்துகிறீர்கள் என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் அன்பான மக்கள், அழகான தமிழ் மொழி, அதன் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் விளையாட்டு வீரர்களை இல்லத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் விருந்தோம்பல் அனைத்து இதயங்களையும் வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வீரர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இங்கு கிடைக்கும் புதிய நட்புகளும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இன்று தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 1975-ம் ஆண்டு ஒளிபரப்பைத் தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் நிலையம் இன்று புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது என்றார். 8 மாநிலங்களில் 12 ஆகாஷ்வாணி பண்பலைத் திட்டங்கள் 1.5 கோடி மக்களைச் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், இது வெற்றி வீரர்களை உருவாக்கும் பூமி என்று கூறினார். டென்னிஸ் சாம்பியன் அமிர்தராஜ் சகோதரர்கள், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கப் பதக்கம் வெல்ல வழிநடத்திய இந்தியாவின் ஹாக்கி கேப்டன் பாஸ்கரன், சதுரங்க வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் ஆகியோரைக் குறிப்பிட்ட பிரதமர், மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து உத்வேகம் பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், அதற்காக நாட்டில் பெரிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். கேலோ இந்தியா இயக்கம், போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் திறமைகளை கண்டறியும் என்று அவர் கூறினார். 12 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் மற்றும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை விளையாடுவதற்கும் திறமைகளைக் கண்டறிவதற்கும் சிறந்த வாய்ப்புகள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். தற்போது, தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு பெரிய நகரங்கள் விளையாட்டு வீரர்களை வரவேற்க தயாராக உள்ளன என்று அவர் கூறினார். பங்கேற்பாளராக இருந்தாலும் சரி, பார்வையாளராக இருந்தாலும் சரி, சென்னையின் கண்கவர் கடற்கரைகள் அனைவரையும் ஈர்க்கும் என்று பிரதமர் தெரிவித்தார். மதுரையின் பிரமாண்டமான கோயில்கள், திருச்சியின் கோயில்கள் மற்றும் அதன் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், உழைப்பு நிறைந்த கோயம்புத்தூர் நகரம் ஆகியவற்றின் சிறப்புகளும், தமிழ்நாட்டின் நகரங்களில் கிடைக்கும் அனுபவங்களும் மறக்க முடியாதவை என்றும் அவர் கூறினார்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதாகக் கூறிய பிரதமர், வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன் மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்றார். தமிழ்நாட்டில் தோன்றிய தற்காப்புக் கலையான சிலம்பம் போன்ற பிற விளையாட்டுக்களையும் அவர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து விளையாட்டு வீரர்களின் உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் என்று அவர் கூறினார். இந்த தேசம் அவர்களின் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, ஒருபோதும் தளராத உணர்வு மற்றும் அசாதாரண செயல்திறனை ஊக்குவிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
தெய்வப் புலவர் திருவள்ளுவரை நினைவு கூர்ந்த பிரதமர், தமது எழுத்துக்கள் மூலம் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களுக்கு வழிகாட்டினார் என்று கூறினார். அந்த மாபெரும் புலவரை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர், துன்பங்களின் போது துவண்டு விடாமல் வலுவாக இருக்க வேண்டும் என்ற அவரது போதனையைக் குறிப்பிட்டார். கேலோ இந்தியா இலச்சினையும் அவரது உருவத்தைக் கொண்டுள்ளதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். வீரமங்கை வேலு நாச்சியார் இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், நிஜ ஆளுமையைச் சின்னமாகத் தேர்வு செய்வது சிறந்த விஷயம் என்றார். வீர மங்கை வேலு நாச்சியார் பெண் சக்தியின் அடையாளம் என்றும் இன்று அவரது ஆளுமை அரசின் பல முடிவுகளில் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அவரது உத்வேகத்துடன், விளையாட்டு வீராங்கனைகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். பெண் விளையாட்டு வீரர்களின் விளையாட்டு வலிமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளை அவர் பட்டியலிட்டார்.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு விளையாட்டுத் துறையில் இந்தியா அடைந்துள்ள வெற்றிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த சாதனைகளை எடுத்துரைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் படைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்ற புதிய சாதனையையும் அவர் குறிப்பிட்டார். இது ஒரே இரவில் கிடைத்த வெற்றி அல்ல என்று பிரதமர் கூறினார். கடந்த காலங்களில் கூட விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் இருந்தனர் என்றும் ஆனால் ஊக்கம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் அரசிடமிருந்து உற்சாகமும் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் அரசு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்றும் விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். விளையாட்டு தொடர்பான அணுகுமுறைகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 50,000 உதவி வழங்கும் கேலோ இந்தியா இயக்கம் மற்றும் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் (டாப்ஸ்) ஆகியவை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி, சர்வதேச வாய்ப்புகள் மற்றும் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மீது இந்தியாவின் கவனம் இருப்பதால், டாப்ஸ் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
"இன்று, இளைஞர்கள் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுப்பதற்காக நாம் காத்திருப்பதில்லை, இளைஞர்களிடம் விளையாட்டை எடுத்துச் செல்கிறோம்" என்று பிரதமர் கூறினார். கேலோ இந்தியா போன்ற இயக்கங்கள் கிராமப்புற, ஏழை, பழங்குடி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்குகின்றன என்று அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்துவது உட்பட, உள்ளூர் திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான தமது அரசின் முயற்சிகளை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பல சர்வதேச போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். டையூவில் சமீபத்தில் நடைபெற்ற கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, 8 பாரம்பரிய இந்திய விளையாட்டுகள் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் 1600 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுகள் கடற்கரை விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு சுற்றுலாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளதால், கடலோர நகரங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் அனுபவம் அளிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். உலக விளையாட்டுச் சூழலின் முக்கிய மையமாக நாடு திகழ வேண்டும் என்றார். எனவே, 2029-ல் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளையும், 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த தீவிரமாக பணியாற்றி வருகிறோம். விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் தளம் ஆகும், இது இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான தனது உத்தரவாதத்தை மீண்டும் வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு தொடர்பான பொருளாதாரத்தின் பங்கை அதிகரிக்கவும், விளையாட்டு தொடர்பான துறைகளை மேம்படுத்தவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். விளையாட்டு நிபுணர்களை வளர்ப்பதற்காக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாகவும், நாட்டில் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் விளையாட்டு அறிவியல், கண்டுபிடிப்புகள், உற்பத்தி, விளையாட்டு பயிற்சி, விளையாட்டு உளவியல் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து தொடர்பான தொழில் வல்லுநர்களுக்கு ஒரு தளத்தை அரசு வழங்கி வருவதாக பிரதமர் கூறினார். கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் முதலாவது தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது, கேலோ இந்தியா பிரச்சாரத்தின் கீழ் நாட்டில் 300-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க அகாடமிகள், 1,000 கேலோ இந்தியா மையங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையில், குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் வகையில் விளையாட்டு முக்கிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் விளையாட்டுத் துறை வளர்ச்சி ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறித்து பேசிய பிரதமர் மோடி, விளையாட்டு குறித்த புதிய விழிப்புணர்வு மற்றும் அதன் விளைவாக ஒளிபரப்பு, விளையாட்டு பொருட்கள், விளையாட்டு சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆடை வர்த்தகம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளையாட்டு உபகரணங்களுக்கான உற்பத்தி தொகுப்புகளை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக திரு. மோடி கூறினார்.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு உள்கட்டமைப்பு வேலைவாய்ப்புக்கான மிகப்பெரிய ஆதாரமாக மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு விளையாட்டு லீக்குகளும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்று அவர் கூறினார். "இன்று, விளையாட்டு தொடர்பான துறைகளில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் நமது இளைஞர்களுக்கு, அவர்களின் சிறந்த எதிர்காலமும் மோடியின் உத்தரவாதம்" என்று பிரதமர் மேலும் கூறினார்.
"விளையாட்டில் மட்டுமின்றி, ஒவ்வொரு துறையிலும் இந்தியா புதிய அலைகளை உருவாக்கி வருகிறது" என்று கூறிய பிரதமர், புதிய இந்தியா பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது என்று வலியுறுத்தினார். இந்திய இளைஞர்களின் ஆற்றல், அவர்களின் நம்பிக்கை, உறுதிப்பாடு, மன வலிமை மற்றும் வெற்றி பெறுவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். இன்றைய இந்தியாவால் மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முடியும் என்று அவர் கூறினார். இந்த ஆண்டு புதிய சாதனைகளை இந்தியா படைக்கும் என்றும், நாட்டிற்கும் உலகிற்கும் புதிய சாதனைகளை அர்ப்பணிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். "நீங்கள் முன்னேற வேண்டும், ஏனென்றால் இந்தியா உங்களுடன் முன்னோக்கி நகரும். ஒன்றிணையுங்கள், வெற்றி பெறுங்கள், நாட்டுக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்யுங்கள். விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடங்கப்பட்டதாக நான் பிரகடனம் செய்கிறேன்" என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
அடிப்படை விளையாட்டு மேம்பாட்டை ஊக்குவிப்பதிலும், வளர்ந்து வரும் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதிலும் பிரதமரின் அசைக்க முடியாத உறுதிப்பாடு காரணமாக விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டன. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 தொடக்க விழாவில் பிரதமர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தென்னிந்தியாவில் விளையாடு இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் 2024 ஜனவரி 19 முதல் 31 வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
வீர மங்கை இந்த விளையாட்டு போட்டிகளின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வீர மங்கை என்று அன்பாக அழைக்கப்படும் ராணி வேலு நாச்சியார், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக போர் தொடுத்த ஒரு இந்திய ராணி ஆவார். இந்த சின்னம் இந்திய பெண்களின் வீரம் மற்றும் உணர்வை அடையாளப்படுத்துகிறது, இது பெண்கள் சக்தியின் வலிமையை உள்ளடக்கியது. விளையாட்டுகளுக்கான லோகோவில் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் உருவம் உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் 5600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 13 நாட்கள் நடைபெறும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 15 விளையாட்டுப் பிரிவுகள், 26 விளையாட்டுப் பிரிவுகள், 275க்கும் மேற்பட்ட போட்டிகள் மற்றும் 1 டெமோ விளையாட்டு ஆகியவை அடங்கும். 26 விளையாட்டுக்களில் கால்பந்து, கையுந்துபந்து, இறகுப்பந்து போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் களரிப்பயட்டு, கட்கா, தாங்டா, கபடி, யோகாசனம் போன்றவை இடம் பெறுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு டெமோ விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
தொடக்க விழாவின் போது, சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஒளிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார். புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்குவதும் இதில் அடங்கும்; 8 மாநிலங்களில் 12 ஆகாஷ்வாணி திட்டங்கள்; மற்றும் ஜம்மு காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் டிரான்ஸ்மிட்டர்கள். மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை ஒலிபரப்பு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
Khelo India Games – A great way to start 2024. pic.twitter.com/xv08Ds6Amy
— PMO India (@PMOIndia) January 19, 2024
Tamil Nadu has produced numerous sporting champions. pic.twitter.com/LHMKAbxOWD
— PMO India (@PMOIndia) January 19, 2024
Making India a top sporting nation. pic.twitter.com/3ymvya0xST
— PMO India (@PMOIndia) January 19, 2024
India's sports system is transforming. pic.twitter.com/lTfdg7TVFC
— PMO India (@PMOIndia) January 19, 2024
Our endeavour is to give international exposure to our young athletes. pic.twitter.com/rhg60JEpyB
— PMO India (@PMOIndia) January 19, 2024
India is setting new benchmarks in every field. pic.twitter.com/1WVlkYciE7
— PMO India (@PMOIndia) January 19, 2024