"ஒவ்வொரு குடும்பத்தின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது, இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்துடன் தொடங்குகிறது"
சத்தீஸ்கரில் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மகதாரி வந்தனா திட்டத்தை தொடங்கி வைத்து, திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை வழங்கினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான பெண் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ .1000 நிதி உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு பொருளாதார மேம்பாடு அளித்தல், நிதிப் பாதுகாப்பு அளித்தல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் குடும்பத்தில் பெண்களின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2024 ஜனவரி 1, நிலவரப்படி 21 வயதுக்கு மேற்பட்ட மாநிலத்தின் தகுதியான திருமணமான அனைத்து பெண்களுக்கும் இந்தத் திட்டம் பலன்களை வழங்கும். விதவைகள், விவாகரத்து பெற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இதன் மூலம் சுமார் 70 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாதா தந்தேஸ்வரி, மற்றும் மாதா மகாமாயா ஆகிய தெய்வங்களுக்கு தலைவணங்குவதாக கூறினார். அண்மையில் மாநிலத்திற்கு வருகை தந்தபோது ரூ .35,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை அர்ப்பணித்து அடிக்கல் நாட்டியதைப் பற்றியும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
மகதாரி வந்தனா யோஜனாவின் முதல் தவணையாக மொத்தம் ரூ .655 கோடியை வழங்குவதன் மூலம் அரசு இன்று தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள மகளிர் சக்திக்கு நன்றி தெரிவித்த பிரதமர், காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்றிரவு தாம் மேற்கொண்ட பிரார்த்தனையைப் பற்றி குறிப்பிட்டார். மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக கூறினார். "இந்த 1000 ரூபாய் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். இதுதான் மோடியின் உத்தரவாதம்.
"தாய்மார்களும், மகள்களும் வலிமையடையும் போது, குடும்பம் வலுப்பெறுகிறது. தாய்மார்கள் மற்றும் மகள்களின் நலனுக்கு நமது அரசு முன்னுரிமை அளிக்கிறது" என்று பிரதமர் கூறினார்.
பெண்கள் தங்கள் பெயரில் உறுதியான வீடுகள் மற்றும் உஜ்வாலா எரிவாயு சிலிண்டர்களைப் பெறுகிறார்கள். 50 சதவீத ஜன் தன் கணக்குகள் பெண்களின் பெயரிலும், 65 சதவீத முத்ரா கடன்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 10 கோடிக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு பெண்கள் பயனடைந்துள்ளனர். 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். 3 கோடி லட்சாபதி சகோதரிகள் திட்டம் என்ற இலக்கை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். நமோ சகோதரி திட்டம் வாழ்க்கையை மாற்றி வருவதாகவும், இது தொடர்பாக நாளை ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் பிரதமர் மோடி அவர்களிடம் கூறினார்.
குடும்ப நலனின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், ஆரோக்கியமான குடும்பம் என்பது பெண்களின் நலனில் இருந்தே உருவாகிறது என்று வலியுறுத்தினார். "ஒவ்வொரு குடும்பத்தின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது, இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கண்ணியத்துடன் தொடங்குகிறது" என்று பிரதமர் மோடி கூறினார். தாய் மற்றும் சிசு இறப்பு விகிதங்கள் உட்பட கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சவால்களுக்கு தீர்வளிக்கும் வகையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி அளிக்க கர்ப்ப "காலத்தில் ரூ .5,000 நிதி உதவி உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊளையர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு ₹ 5 லட்சம் வரை இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படுவதைப் பற்றியும் அவர் கூறினார்.
முறையான சுகாதார வசதிகள் இல்லாததால் பெண்கள் எதிர்கொண்ட கடந்த கால கஷ்டங்களை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, "நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறைகள் இல்லாததால் வலியையும் அவமானத்தையும் தாங்க வேண்டியிருந்த நாட்கள் இனிமேல் இல்லை" என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி செய்து தருவதன் மூலம் பெண்களின் கண்ணியத்தை உறுதி செய்ய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
மேலும், தேர்தல்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தனது அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் தெரிவித்தார், "அரசு அதன் வாக்குறுதிகளில் நிற்கிறது. அவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிறது" என்றார். சத்தீஸ்கர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மகதாரி வந்தனா திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்..
இதேபோல், 18 லட்சம் உறுதியான வீடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பது முழு உறுதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
வேளாண் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய பிரதமர், சத்தீஸ்கரின் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள போனஸ் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு ரூ.3,700 கோடி போனஸ் வழங்கியது உட்பட விவசாயிகள் நலனுக்காக அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
அரசின் கொள்முதல் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, "எங்கள் அரசு சத்தீஸ்கரில் குவிண்டாலுக்கு ரூ .3,100 குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும்" என்று உறுதிப்படுத்தினார். 145 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி புதிய மைல்கல்லை எட்டியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். .
நிறைவாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற என்பதை முன்னெடுத்துச் செல்வதில் சம்பந்தப்பட்ட அனைவரின், குறிப்பாக பெண்களின் கூட்டு முயற்சிகள் மீது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாஜக அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் சேவைகள் குறித்து சத்தீஸ்கர் மக்களுக்கு அவர் உறுதிபட தெரிவித்தார், வாக்குறுதிகளை நிறைவேற்றி, அனைவருக்கும் முன்னேற்றத்தை உறுதி செய்வதாக கூறினார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.