பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அழைப்பை ஏற்று சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தியா-பிரான்ஸ் இடையேயான கூட்டணியின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ராணுவ இசைக்குழுவின் தலைமையில் இந்திய முப்படைகளைச் சேர்ந்த 241 உறுப்பினர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்திய ராணுவத்தின் குழுவுக்கு ராஜ்புதானா ரைபிள்ஸ் படைப்பிரிவுடன் இணைந்து பஞ்சாப் படைப்பிரிவும் தலைமை தாங்கியது.
இந்த அணிவகுப்பின் ஒருபகுதியாக, இந்திய விமானப்படையின் ஹசிமாரா விமானப்படைப்படைத் தளத்தைச் சேர்ந்த 101 ஸ்க்வாட்ரன் படைப்பிரிவிலுள்ள ரஃபேல் ஜெட் விமானங்களும் பங்கேற்றன.
1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது பாஸ்டில் சிறைச்சாலை தகர்க்கப்பட்டதன் நினைவு தினத்தை ஜூலை 14-ம் தேதி குறிக்கிறது. இது இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற ஜனநாயக கோட்பாடுகளை அடையாளப்படுத்துகிறது.