ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று (25.08.2024) ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
மகாராஷ்டிராவிலிருந்து புறப்படும் போது மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதில் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்று கூறினார். பல மகத்தான ஆளுமைகளின் நீதி, நேர்மை அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் இது என்று பிரதமர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசியலமைப்பின் மீதான தேசத்தின் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்ச்சியின் மூலம் நீதித் துறையினருக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்தியாவின் ஒற்றுமையின் வரலாற்றுடன் தொடர்புடையது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, அதை ஒற்றுமை என்ற ஒரே இழையில் நெய்து இந்தியாவை உருவாக்க சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உதய்பூர், கோட்டா போன்ற பல்வேறு சமஸ்தானங்கள் அவற்றின் சொந்த உயர் நீதிமன்றங்களைக் கொண்டிருந்தன என்றார். அவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை உருவாக்க ஒருங்கிணைக்கப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார். தேசிய ஒற்றுமை என்பது இந்தியாவின் நீதி அமைப்பின் அடித்தளமாகும் எனவும் அதை வலுப்படுத்துவது தேசத்தையும் அதன் அமைப்புகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
நீதி எளிமையானது, தெளிவானது குறிப்பிட்ட பிரதமர், சில நேரங்களில் நடைமுறைகள் அதை சிக்கலாக்குகின்றன என்று குறிப்பிட்டார். நீதியை முடிந்தவரை எளிமையாகவும், தெளிவாகவும் ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நமது கூட்டுப் பொறுப்பு என்று திரு நரேந்திர மோடி கூறினார். இந்த திசையில் இந்தியா தற்போது பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பொருத்தமற்ற பல காலனித்துவ சட்டங்களை தமது அரசு ரத்து செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, காலனித்துவ மனநிலையிலிருந்து வெளிவந்த இந்தியா, இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதாவை (இந்திய நியாயச் சட்டம்) ஏற்றுக்கொண்டது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பாரதிய நியாய சன்ஹிதா தண்டனைக்கு பதிலாக நீதி என்ற லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், இது இந்திய சிந்தனையின் அடிப்படையாகவும் உள்ளது என்றும் அவர் கூறினார். பாரதிய நியாய சன்ஹிதா மனித சிந்தனையை முன்னெடுத்து, காலனி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாரதிய நியாய சன்ஹிதாவின் உணர்வை முடிந்தவரை பயனுள்ளதாக மாற்றுவது இப்போது நமது பொறுப்பாகும் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வேகமாக மாறி வந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்றார். இன்று, இந்தியாவின் கனவுகள் பெரியவை எனவும் மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தவை என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். புதிய இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அமைப்புகளை நவீனமயமாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார. அனைவருக்கும் நீதி என்பதை அடைவதற்கு சமமான அணுகல் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் நீதித்துறை அமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கை எடுத்துரைத்த பிரதமர், மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார். நாட்டில் இதுவரை 18,000-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன என்றும், 26 கோடிக்கும் அதிகமான நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தகவல்கள் தேசிய நீதித்துறை தரவு மூலம் மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் தளத்தில் கிடைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 3,000-க்கும் மேற்பட்ட நீதிமன்ற வளாகங்கள், 1200-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகள் காணொலிக் காட்சி வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். ராஜஸ்தானில் நூற்றுக்கணக்கான நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டு, காகிதமில்லா நீதிமன்றங்கள், மின்னணு தாக்கல் செய்தல், மின்னணு அழைப்பாணை சேவை, மெய்நிகர் விசாரணைக்கான வசதிகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ராஜஸ்தானில் இந்தப் பணிகளின் வேகம் குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த காலங்களில் நீதிமன்றங்களின் மெதுவான நடைமுறைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், சாமானிய மக்களின் சுமையை குறைக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள், இந்தியாவில் நீதிக்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்றார். நாட்டின் நீதித்துறை அமைப்பை தொடர்ந்து சீர்திருத்துவதன் மூலம் இந்த புதிய நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
பல நூற்றாண்டுகள் பழமையான நமது பரஸ்பர சமரச நடைமுறை குறித்து பல சந்தர்ப்பங்களில் தாம் தொடர்ந்து குறிப்பிட்டு வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். இன்று நாட்டில் செலவு குறைந்த, விரைவான முடிவுகளுக்கு "மாற்றுத் தீர்வு" செயல்முறை ஒரு முக்கியமான வழியாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். இந்த மாற்றுத் தீர்வு நடைமுறை நாட்டில் வாழ்க்கையை எளிதாக்குவதோடு நீதியையும் எளிதாக்கும் என்று அவர் மேலும் கூறினார். சட்டங்களைத் திருத்தியும், புதிய விதிகளைச் சேர்த்தும் இந்த திசையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். நீதித்துறையின் ஆதரவுடன், இந்த நடைமுறைகள் மேலும் வலுவடையும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய பிரச்சினைகளில் விழிப்புடனும் செயலுடனும் இருப்பதற்கான தார்மீகப் பொறுப்பை நீதித்துறை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தின் முடிவுகள் நீதி குறித்த அவற்றின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன என்று அவர் கூறினார். 'தேசமே முதன்மையானது' என்ற தீர்மானத்தை உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் வலுப்படுத்தியுள்ளன என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். செங்கோட்டையில் இருந்து உரையாற்றியபோது பிரதமர் குறிப்பிட்ட மதச்சார்பற்ற சிவில் சட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசு இப்போது இந்த விஷயத்தை எழுப்பியிருந்தாலும், இந்தியாவின் நீதித்துறை எப்போதும் இதற்கு ஆதரவாக இருந்துள்ளது என்று அவர் கூறினார். தேசிய ஒற்றுமை தொடர்பான விஷயங்களில் நீதிமன்றத்தின் நிலைப்பாடு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பு என்ற வார்த்தை 21-ம் நூற்றாண்டு இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்று பிரதமர் கூறினார். தனித்தனியாக செயல்படும் நாட்டின் அனைத்து தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார். காவல்துறை, தடயவியல், செயல்முறை சேவை வழிமுறைகள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை அவர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், ராஜஸ்தானின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இன்று தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புத் திட்டத்திற்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்றைய இந்தியாவில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தொழில்நுட்பத்தின் பயன்பாடு சிறந்த வழிமுறையாக மாறி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சர்வதேச முகமைகள், அமைப்புகளிடமிருந்து இந்தியா பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் முதல் யுபிஐ வரை பல்வேறு துறைகளில் இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இது உலகளாவிய முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்றார். அதே அனுபவம் நீதி அமைப்பிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். இந்த திசையில், சட்ட ஆவணங்களை ஒருவரின் சொந்த மொழியில் அணுகுவது, ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக மாறும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். திஷா என்ற புதுமையான தீர்வை அரசு ஊக்குவித்து வருவதாகக் கூறிய அவர், இந்த இயக்கத்திற்கு உதவுமாறு சட்ட மாணவர்கள், பிற சட்ட வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்தார். சட்ட ஆவணங்கள், தீர்ப்புகளை உள்ளூர் மொழிகளில் மக்களுக்கு கிடைக்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். நீதித்துறை ஆவணங்களை 18 மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய ஒரு மென்பொருளின் உதவியுடன் இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். நீதித்துறையின் தனித்துவமான முயற்சிகளை திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
எளிதான நீதிக்கு நீதிமன்றங்கள் தொடர்ந்து உயர் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பாரதத்தில் அனைவருக்கும் எளிய, எளிதில் அணுகக்கூடிய, எளிதான நீதியை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகாடே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, மத்திய சட்டம் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), திரு அர்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு சஞ்சீவ் கண்ணா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
राष्ट्रीय एकता हमारे judicial system का founding stone है। pic.twitter.com/OF6QcNrl1u
— PMO India (@PMOIndia) August 25, 2024
हमने पूरी तरह से अप्रासंगिक हो चुके सैकड़ों colonial क़ानूनों को रद्द किया है। pic.twitter.com/RNmK4V9Oc7
— PMO India (@PMOIndia) August 25, 2024
भारतीय न्याय संहिता हमारे लोकतन्त्र को colonial mindset से आज़ाद करती है। pic.twitter.com/AoZxrC9GC9
— PMO India (@PMOIndia) August 25, 2024
आज देश के सपने भी बड़े हैं, देशवासियों की आकांक्षाएँ भी बड़ी हैं। pic.twitter.com/Dqqqdtiy4n
— PMO India (@PMOIndia) August 25, 2024
हमारी न्यायपालिका ने निरंतर राष्ट्रीय विषयों पर सजगता और सक्रियता की नैतिक ज़िम्मेदारी निभाई है। pic.twitter.com/78d4DkhKdj
— PMO India (@PMOIndia) August 25, 2024