Today, India is the fastest growing major economy:PM
Government is following the mantra of Reform, Perform and Transform:PM
Government is committed to carrying out structural reforms to make India developed:PM
Inclusion taking place along with growth in India:PM
India has made ‘process reforms’ a part of the government's continuous activities:PM
Today, India's focus is on critical technologies like AI and semiconductors:PM
Special package for skilling and internship of youth:PM

புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், கௌடில்யா பொருளாதார வளாகத்தின் மூன்றாவது பதிப்பில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த மாநாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல அமர்வுகள் நடைபெறும் என்றும், இதில் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த விவாதங்கள் இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவிகரமாக இருக்கும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

உலகின் இரண்டு முக்கிய பிராந்தியங்கள் போரில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், உலகப் பொருளாதாரத்திற்கு, குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தப் பிராந்தியங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இத்தகைய மிகப்பெரிய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நாம் இங்கு இந்திய சகாப்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர், இன்று இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதையும் நாட்டின் தன்னம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.

இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது என்றும் அவர் கூறினார். இன்று உலகளாவிய நிதித் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதிலும், நவீன கைப்பேசி தகவல் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இணைய பயனர்களைப் பொறுத்தவரை இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், அதே நேரத்தில் உலகின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் நடக்கிறது என்றும் அவர் கூறினார். தற்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில்  சூழல் அமைப்பின் கொண்டுள்ளது என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பொறுத்தவரை நான்காவது இடத்திலும் உள்ளது என்றும் பிரதமர்  எடுத்துரைத்தார். உற்பத்தி குறித்து பேசிய பிரதமர், உலகின் இரண்டாவது பெரிய கைப்பேசி உற்பத்தியாளராகவும், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் இந்தியா திகழ்கிறது என்று சுட்டிக்காட்டினார். இந்தியா உலகின் இளைய நாடு என்று திரு நரேந்திர மோடி கூறினார். உலகில் மூன்றாவது பெரிய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அறிவியல், தொழில்நுட்பம் அல்லது புதிய கண்டுபிடிப்பு என எதுவாக இருந்தாலும், முதன்மையான இடத்தில் இந்தியா தெளிவாக உள்ளது என்றார்.

 

சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தை அரசு பின்பற்றுகிறது என பிரதமர் கூறினார். நாட்டை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்துவதற்கு தொடர்ந்து முடிவுகளை இந்த அரசு எடுத்து வருகிறது என்று கூறிய பிரதமர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான அதன் தாக்கத்தை எடுத்துரைத்தார். மக்களின் வாழ்க்கை நன்றாக மாறும்போது, நாடு சரியான பாதையில் செல்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு கிடைக்கிறது என்று அவர் கூறினார். இந்த உணர்வு இந்திய மக்களின் தீர்ப்பில் தெரிகிறது என்றும், 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை இந்த அரசின் மிகப்பெரிய சொத்து என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டிய பிரதமர், மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் எடுத்துரைத்தார். துணிச்சலான கொள்கை மாற்றங்கள், பணிகள், திறன்களில் வலுவான உறுதிப்பாடு, நீடித்த வளர்ச்சி, புதுமைகளில் கவனம், நவீன உள்கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம், விரைவான வளர்ச்சியின் தொடர்ச்சி ஆகியவற்றை அவர் உதாரணங்களாக எடுத்துரைத்தார். இது முதல் மூன்று மாதங்களில் எங்கள் கொள்கைகளின் பிரதிபலிப்பாகும் என்று கூறிய பிரதமர், இந்த காலகட்டத்தில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். நாட்டில் 12 தொழில்துறை முனையங்களை உருவாக்குவது, 3 கோடி புதிய வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் உட்பட இந்தியாவில் பல மாபெரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் உள்ளடக்கிய உணர்வு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணி என்று திரு நரேந்திர மோடி கூறினார். வளர்ச்சியுடன் சமத்துவமின்மை முன்பு அதிகம் இருந்தது எனவும், அதற்கு நேர்மாறாக, தற்போது வளர்ச்சியுடன் அனைவரையும் இணைத்துச் செல்வது அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். இதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் விரைவான முன்னேற்றத்துடன், சமத்துவமின்மை குறைவதையும், வளர்ச்சியின் பயன்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதையும் அரசு உறுதி செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

இன்று இந்தியாவின் வளர்ச்சி தொடர்பான கணிப்புகளை எடுத்துரைத்த பிரதமர், அவர்களின் நம்பிக்கை இந்தியா எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்றும், கடந்த சில வாரங்கள், மாதங்களில் கிடைத்த புள்ளி விவரங்களும் அதற்கு துணை புரிகின்றன என்றும் கூறினார். கடந்த ஆண்டு ஒவ்வொரு கணிப்பையும் விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டது என்பதை எடுத்துக்கூறிய பிரதமர், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் அல்லது மூடிஸ் என அனைத்து நிறுவனங்களும் இந்தியா தொடர்பான தங்களது கணிப்புகளை மேம்படுத்தியுள்ளன என்றார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், இந்தியா ஏழு பிளஸ் விகிதத்தில் தொடர்ந்து வளரும் என்று இந்த நிறுவனங்கள் அனைத்தும் கூறுகின்றன என்பதை அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்தியா இதை விட சிறப்பாக செயல்படும் என்று இந்தியர்களாகிய எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

இந்தியாவின் இந்த நம்பிக்கைக்குப் பின்னால் சில உறுதியான காரணங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உற்பத்தித் துறையாக இருந்தாலும் சரி, சேவைத் துறையாக இருந்தாலும் சரி,  இன்று உலகம் இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த இடமாக கருதுகிறது என்றார். இது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெரிய சீர்திருத்தங்களின் விளைவாக ஏற்பட்டது என்றும் அவை இந்தியாவின் பேரியல் பொருளாதார அடிப்படைகளை மாற்றியமைத்துள்ளன என்றும் அவர் கூறினார். சீர்திருத்தங்களின் ஒரு நிகழ்வைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வங்கி சீர்திருத்தங்கள் வங்கிகளின் நிதி நிலைமைகளை வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவற்றின் கடன் வழங்கும் திறனையும் அதிகரித்துள்ளது என்றார். இதேபோல், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பல்வேறு மத்திய மற்றும் மாநில மறைமுக வரிகளை ஒருங்கிணைத்துள்ளது என்றும், திவால் சட்டம் (ஐபிசி) பொறுப்பு, மீட்பு மற்றும் தீர்வு ஆகியவற்றின் புதிய கடன் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். சீர்திருத்தங்கள் குறித்து மேலும் விவரித்த திரு நரேந்திர மோடி, சுரங்கம், பாதுகாப்பு, விண்வெளி போன்ற பல துறைக்களில் முதலீட்டு வாய்ப்புகளை தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியாவின் இளம் தொழில்முனைவோருக்கும், இந்தியா அனுமதித்துள்ளது என்றார். உலக முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதை உறுதி செய்வதற்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அரசு தாராளமயமாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். சரக்கு போக்குவரத்து செலவையும் நேரத்தையும் குறைக்க  நவீன கட்டமைப்பு வசதிகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்புத்  துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

 

அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 'செயல்முறை சீர்திருத்தங்களை' இந்தியா செய்துள்ளது என்று கூறிய பிரதமர், அரசு 40,000-க்கும் மேற்பட்ட இணக்கங்களை நீக்கியுள்ளதுடன் நிறுவனங்கள் சட்டத்தை குற்றமற்றதாக்கியுள்ளது என்று தெரிவித்தார். வணிகத்தை கடினமாக்கும் பல விதிகளை சீர்திருத்தியது என்றும் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கும் மூடுவதற்கும் அனுமதி செயல்முறையை எளிதாக்க ஒரு தேசிய ஒற்றைச் சாளர முறையை உருவாக்கியது என்றும் அவர் கூறினார்.  மாநில அளவில் 'செயல்முறை சீர்திருத்தங்களை' விரைவுபடுத்த மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவில் இன்று பல துறைகளில் உற்பத்தியை விரைவுபடுத்த உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் தாக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த 3 ஆண்டுகளில் அதன் தாக்கத்தை விளக்கிய பிரதமர், சுமார் ரூ.1.25 டிரில்லியன் அல்லது ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது சுமார் ரூ.11 டிரில்லியன் அல்லது ரூ.11 லட்சம் கோடி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வழிவகுக்கிறது என அவர் கூறினார். இந்தியாவின் விண்வெளி, பாதுகாப்பு உற்பத்தி துறைகள் அண்மையில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன  என்று குறிப்பிட்ட பிரதமர், அவற்றின் வியக்கத்தக்க வளர்ச்சியை  எடுத்துரைத்தார். விண்வெளித் துறையில் 200-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன என்றும், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு உற்பத்தி பங்களிப்பில் 20 சதவீதம் இப்போது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மின்னணுத் துறையின் வளர்ச்சியை விவரித்த பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா பெரும்பாலான கைப்பேசி போன்களை இறக்குமதி செய்யும் பெரிய நாடாக இருந்தது என்றும், இன்று நாட்டில் 33 கோடிக்கும் அதிகமான கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு அதிக லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

தற்போது செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருவது குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இரண்டு துறைகளிலும் அரசு பெரும் அளவில் முதலீடு செய்துள்ளது என்றார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆராய்ச்சி மற்றும் திறன்களை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் குறைக்கடத்திகள் திட்டம் பற்றிப் பேசிய திரு நரேந்திர மோடி, ரூ.1.5 டிரில்லியன் அல்லது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும், மிக விரைவில், இந்தியாவின் 5 குறைக்கடத்தி ஆலைகள் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட சிப்களை வழங்கத் தொடங்கும் என்றும் கூறினார்.

மலிவான அறிவுசார் சக்தியின் உலகின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் தற்போது 1,700-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உயர் திறன் வாய்ந்த இந்திய நிபுணர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்வி, புதுமைப் படைப்புகள், திறன்கள், ஆராய்ச்சி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் மக்கள் தொகையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். புதிய தேசியக் கல்விக் கொள்கையால் கொண்டு வரப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களை எடுத்துரைத்த அவர், ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, தரத்திற்கான அளவுகோலையும் அரசு உயர்த்தி வருகிறது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த காலகட்டத்தில் கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் உள்ள இந்திய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று கூறிய அவர், இது கல்வியில் சிறந்து விளங்க நாடு அளித்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்றார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, உள்ளிருப்பு பயிற்சிக்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது குறித்தும் அவர் பேசினார். பிரதமரின் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், ஒரு கோடி இளம் இந்தியர்களுக்கு பெரிய நிறுவனங்களில் உலக அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு வழங்கப்படும் என்று விளக்கினார். இத்திட்டத்தின் முதல் நாளில் 111 நிறுவனங்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளன என்றும் இதன் மூலம் இதற்கு தொழில்துறையின் உற்சாகமான வரவேற்புக் கிடைப்பது தெரிவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் ஆராய்ச்சி சூழல் அமைப்பு குறித்து பேசிய அவர், கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சி வெளியீடுகள், காப்புரிமைகள் வேகமாக வளர்ந்துள்ளன என்றார். பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்தில், உலகளாவிய புதுமைப் படைப்பு குறியீட்டு தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை 81-வது இடத்திலிருந்து 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இதிலிருந்து இந்தியா மேலும் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, இந்தியாவின் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த ரூ.1 டிரில்லியன் ஆராய்ச்சி நிதி உருவாக்கப்பட்டது என்றார்.

இன்று, பசுமை வேலைவாய்ப்புகள்,  நிலையான எதிர்காலம் என்று வரும்போது உலகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவை பார்க்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அது வழங்கும் பரந்த வாய்ப்புகளை எடுத்துரைத்தார். இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பின் வெற்றியைக் குறிப்பிட்ட பிரதமர், உச்சிமாநாட்டிலிருந்து வெளிப்பட்ட பசுமை மாற்றத்திற்கான புதிய உத்வேகத்தை குறிப்பிட்டார். உறுப்பு நாடுகளின் பரந்த ஆதரவைப் பெற்ற உச்சிமாநாட்டின் போது உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியை பெருமையுடன் அவர் எடுத்துரைத்தார். இந்த பத்து ஆண்டுகளின் இறுதிக்குள் 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் லட்சிய இலக்கையும் அவர் எடுத்துரைத்தார். சூரிய மின்சக்தி உற்பத்தியை கடைசி நிலை வரை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டிய பிரதமர், ஏற்கனவே 13 மில்லியன் அல்லது 1 கோடியே 30 லட்சம் குடும்பங்களை பதிவு செய்து அரசால் நிதியளிக்கப்பட்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டமான பிரதமரின் சூர்யகர் இலவச மின்சாரத் திட்டத்தை குறிப்பிட்டார். இந்தத் திட்டம் பெரிய அளவில் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தையும் சூரிய சக்தி உற்பத்தியாளராக மாற்றும் அணுகுமுறையில் புரட்சிகரமானது என்று அவர் கூறினார். சராசரியாக, குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.25,000 வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மூன்று கிலோவாட் சூரிய சக்தியும் 50-60 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதைத் தடுக்க உதவுவதாகவும் பிரதமர் மேலும் விளக்கினார். இந்தத் திட்டம் திறன் பெற்ற இளைஞர்களின் மிகப்பெரிய படையை உருவாக்கும் என்றும், புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் சுமார் 17 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவதாகவும், வலுவான பொருளாதார அடிப்படைகளின் அடிப்படையில் நீடித்த உயர் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இன்று, இந்தியா முதலிடத்தை அடையத் தயாராகி வருவது மட்டுமல்லாமல், அதில் நிலைத்து இருக்க கடுமையாக உழைத்து வருகிறது என்று பிரதமர் கூறினார். நடந்து வரும் விவாதங்களிலிருந்து பல மதிப்புமிக்க உள்ளீடுகள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுபோன்ற விவாதங்களில் பெறப்பட்ட உள்ளீடுகள், குறிப்பாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, அரசு அமைப்புகளில் பின்பற்றப்படுகின்றன  என்று கூறினார். கொள்கை மற்றும் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இவை ஆக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். தொழில்துறை தலைவர்களின் முக்கியத்துவம், நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை எடுத்துரைத்த பிரதமர், அவர்களின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார். பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு என் கே சிங் மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு என் கே சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னணி

மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாடு அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்தியப் பொருளாதாரம், உலகின் தெற்குப் பகுதியின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகள் ஆகியவை இந்திய, சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்களால் இதில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi