மாண்புமிகு பிரதமர் லக்னோவில் நவம்பர் 20-21-ல் நடைபெற்ற 56-வது டிஜிபி-க்கள்/ஐஜி-க்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குநர்கள்/ காவல்துறை தலைவர்கள் என 62 பேர் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பல்வேறு அதிகாரிகளும் காணொலி மூலம் பங்கேற்றனர்.
மாநாட்டின் விவாதங்களில் கலந்து கொண்ட பிரதமர் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். மாநாட்டின் தொடர்ச்சியாக, சிறை சீர்திருத்தங்கள், பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், இணையவெளி குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் வருதல், ட்ரோன் சார்ந்த விஷயங்கள், எல்லைப்புற கிராமங்கள் மேம்பாடு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்த டிஜிபிக்களைக் கொண்ட முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன.
இன்று பிற்பகலில் மாநாட்டில் நிறைவுரையாற்றிய பிரதமர் காவல்துறை தொடர்புடைய அனைத்து சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்து, வழக்கு ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நிறுவனமயமாக்கப்பட்ட மாற்றல் முறையாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். நவீன முறையில் நடத்தப்பட்ட மாநாட்டைப் பாராட்டிய அவர், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடமிருந்து தகவல்களை அனுமதித்ததற்கு பாராட்டு தெரிவித்தார். நாடு முழுவதும் காவல் படையினருக்கு பயனளிக்கும் விதத்தில், இடைச் செயல்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்தார். அடிமட்டத் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் வருங்கால தொழில்நுட்பங்களைப் பின்பற்ற, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், உயர் அதிகார காவல் தொழில்நுட்ப இயக்கத்தை அமைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். பொது மக்களின் வாழ்க்கையில், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கோவின், ஜிஇஎம், யுபிஐ போன்ற உதாரணங்களைக் குறிப்பிட்டார். குறிப்பாக, கோவிட் தொற்றுக்குப் பின்னர், பொது மக்கள் மீது காவல்துறையின் அணுகுமுறை மாறியிருப்பதை அவர் பாராட்டினார். மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, ட்ரோன் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போலிசிங் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்திய அவர், காவல் படையில் அதனை தொடர் நிறுவனமயமாக்கல் மாற்றத்துக்கான வரையறையை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். காவல் துறை எதிர்கொள்ளும் வழக்கமான சவால்களை சமாளிக்க, ஹெக்கத்தான் மூலம் தொழில்நுட்ப தீர்வுகளைக்காணும் உயரிய தகுதியுள்ள இளைஞர்களை இதில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நுண்ணறிவுப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு குடியரசு தலைவரின் காவல் பதக்கங்களை பிரதமர் வழங்கினார். பிரதமரின் உத்தரவுக்கிணங்க, முதல் முறையாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள், சமகால பாதுகாப்பு விஷயங்கள் பற்றிய கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இவை மாநாட்டுக்கு மேலும் மதிப்பைக் கூட்டின.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர், நவம்பர் 19-ந்தேதி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நாட்டின் மிகச்சிறந்த மூன்று காவல் நிலையங்களுக்கு விருதுகளை அவர் வழங்கினார். அனைத்து விவாதங்களிலும் பங்கேற்ற உள்துறை அமைச்சர், தமது மதிப்புமிக்க யோசனைகளைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.