ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் இன்று நடைபெற்ற பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது ‘அவதார மஹோத்ஸவ’ விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மந்திர் தரிசனம் மற்றும் பரிக்கிரமா வழிபாடுகளைச் செய்த பிரதமர், வேப்ப மரக்கன்றுகளையும் நட்டார். யாகசாலையில் நடைபெறும் விஷ்ணு மகாயக்ஞத்தில் பூர்ணாஹுதி வழிபாட்டையும் பிரதமர் செய்தார். பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி ராஜஸ்தான் மக்களால் பக்தியுடன் வணங்கப்படுகிறார். அவரைப் பின்பற்றுபவர்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளனர். அவர் மேற்கொண்ட சமூக சேவைப் பணிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். தாம் இங்கு பிரதமராக வரவில்லை என்றும், பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் யாத்ரீகராக வந்துள்ளதாகவும் அவர் கூறினார். யாகசாலையில் நடைபெற்ற விஷ்ணு மகாயக்ஞத்தில் ‘பூர்ணாஹுதி’ மேற்கொள்ள முடிந்ததற்கு அவர் நன்றி தெரிவித்தார். “தேவ்நாராயண் ஜி மற்றும் ‘ஜனதா ஜனார்தன்’ இருவரையும் தரிசனம் செய்ததன் மூலம் தான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக பிரதமர் கூறினார். இங்கு வந்துள்ள மற்ற யாத்ரீகர்களைப் போலவே, தேசத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்காகவும் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தைத் தாம் கோருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
பகவான் ஸ்ரீ தேவ்நாராயணனின் 1111-வது அவதார தினத்தின் பிரமாண்டமான நிகழ்வு குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஒரு வாரமாக இங்கு நடைபெற்று வரும் கலாச்சார நிகழ்ச்சிகளையும், அவற்றில் குர்ஜார் சமூகத்தின் தீவிர பங்கேற்பையும் குறிப்பிட்டார். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் முயற்சிகளையும் அவர் பாராட்டியதுடன், அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்திய உணர்வின் தொடர்ச்சியான மன ஓட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல என்றும் நமது நாகரிகம், கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஆற்றலின் வெளிப்பாடுதான் இந்தியா என்றும் கூறினார். வேறு பல நாகரிகங்கள் மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மாற முடியாமல் அழிந்துவிட்ட நிலையில், இந்திய நாகரிகத்தின் மீள்தன்மை குறித்துப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த சக்தியாலும் இந்தியாவை எதுவும் செய்ய இயலாது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
இன்றைய இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது என்று அவர் கூறினார். தேசத்தின் அழியாத தன்மையைப் பாதுகாக்கும் இந்திய சமுதாயத்தின் வலிமை மற்றும் உத்வேகத்தை அவர் பாராட்டினார். இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பயணத்தில் சமூக வலிமையின் பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தில் இருந்து உருவாகி அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாகச் செயல்படும் ஆற்றல் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
பகவான் ஸ்ரீ தேவ்நாராயணன் எப்போதும் சேவைக்கும் மக்கள் நலனுக்கும் முன்னுரிமை அளித்தார் என்று பிரதமர் கூறினார். மக்கள் நலனுக்கான ஸ்ரீ தேவ்நாராயணனின் அர்ப்பணிப்பையும், மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சேவையையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். பகவான் தேவ்நாராயணன் காட்டிய பாதை அனைவரின் ஆதரவு மூலம் அனைவரின் வளர்ச்சி என்று அவர் தெரிவித்தார். இன்று நாடு அதே பாதையில் செல்கிறது என்று பிரதமர் கூறினார். ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்க கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளில் நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். பின்தங்கியவர்களுக்கு முன்னுரிம என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் சிக்கல் மற்றும் அதன் தரம் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவிய காலங்களைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். இன்று, ஒவ்வொரு பயனாளியும் முழு அளவில் உணவு தானியங்களை இலவசமாகப் பெறுகிறார்கள் என்று அவர் குறிபபிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மருத்துவ சிகிச்சை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்துள்ளதாக அவர் கூறினார். வீடு, கழிப்பறை, எரிவாயு இணைப்பு மற்றும் மின்சாரம் போன்றவை தொடர்பான ஏழை மக்களின் கவலையையும் தற்போது அரசு நிவர்த்தி செய்வதாக அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற அனைவருக்குமான நிதி உள்ளடக்க நடவடிக்கைகளை எடுத்துரைத்துப் பேசிய பிரதமர், தற்போது வங்கிகளின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருப்பதாகக் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தவர் அளவுக்கு வேறு யாருக்கும் தண்ணீரின் மதிப்பு தெரியாது என்று பிரதமர் கருத்துத் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், 3 கோடி குடும்பங்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் பாதுகாப்பான குடிநீர்க் குழாய் இணைப்பு பெற்றிருந்ததாகவும், 16 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீருக்காக தினமும் போராட வேண்டி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் முயற்சியால், இதுவரை பதினோரு கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழுமையான பணிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். பாரம்பரிய முறைகளை விரிவுபடுத்தினாலும் அல்லது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், ஒவ்வொரு முயற்சியிலும் விவசாயிகள் ஆதரிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் கூறினார். பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின் மூலம் ராஜஸ்தான் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15,000 கோடி ரூபாய் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘கௌ சேவா’எனப்படும் கால்நடைகளுக்கான சேவையே சமூக சேவை மற்றும் சமூக அதிகாரமளிக்கும் தளமாக மாற்றும் பகவான் தேவ்நாராயணின் இயக்கத்தைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் கௌசேவா உணர்வு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். கால் மற்றும் வாய் நோய்களுக்கான தேசிய அளவிலான தடுப்பூசி இயக்கம், ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் மற்றும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் ஆகியவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார். கால்நடைச் செல்வங்கள் நமது கிராமப்புறப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி எனக் குறிப்பிட்ட அவர் அவை நமது நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார். அதனால்தான், முதன்முறையாக, கிசான் கடன் அட்டைகள், கால்நடை வளர்ப்பு பிரிவு மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அதேபோல், கோபர்தன் திட்டம் வீணாகும் கழிவுகளை செல்வமாக மாற்றுகிறது என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, பாஞ்ச் பிரான் எனப்படும் 5 உறுதி முக்கிய மொழிகளைத் தாம் குறிப்பிட்டதைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். நமது சொந்தப் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வது, அடிமை மனநிலையை உடைத்தல், தேசத்திற்கான நமது பொறுப்புகளை மனதில் வைத்து செயல்படுதல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்தல், நம் முன்னோர்கள் காட்டிய பாதையில் நடப்பது ஆகியவை குறித்து பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். படைப்பாற்றல் மற்றும் கொண்டாட்ட உற்சாகத்தைக் காணக்கூடிய ஒரு பாரம்பரிய நிலம் ராஜஸ்தான் எனவும் இங்கு உழைப்பில் சேவையைக் காணலாம் எனவும் அவர் தெரிவித்தார். வீரம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதாகவும் இந்த நிலம் பல தரப்புக்கும் ஏற்புடையதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தேஜாஜி முதல் பாபுஜி வரை, கோகாஜி முதல் ராம்தேவ்ஜி வரை, பாப்பா ராவல் முதல் மகாராணா பிரதாப் வரை என பல ஆளுமைகளின் மகத்தான பங்களிப்பைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்த மண்ணில் இருந்து சிறந்த ஆளுமைகள், தலைவர்கள் மற்றும் உள்ளூர் இறை சக்திகள் எப்போதும் நாட்டை வழிநடத்துவதாகக் கூறினார். குறிப்பாக, குர்ஜார் சமூகத்தின் பங்களிப்பைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த சமூகம் எப்போதும் வீரம் மற்றும் தேசபக்திக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றார், "தேசிய பாதுகாப்பு அல்லது கலாச்சாரப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், குர்ஜார் சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்கு வகித்து வருகிறது என்று அவர் கூறினார், மேலும் பிஜோலியா கிசான் இயக்கத்தை வழிநடத்திய விஜய் சிங் பதிக் என்று அழைக்கப்படும் கிராந்திவீர் பூப் சிங் போன்ற குர்ஜார் சமூக ஆளுமைகளின் உதாரணங்களை அவர் எடுத்துக் கூறினார். கோட்வால் தன் சிங் ஜி மற்றும் ஜோக்ராஜ் சிங் ஜி ஆகியோரின் பங்களிப்பையும் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். குர்ஜார் சமூகப் பெண்களின் துணிச்சல் மற்றும் பங்களிப்பையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். ராம்பியாரி குர்ஜார் மற்றும் பன்னா தாய் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த பாரம்பரியம் இன்றும் வளர்ந்து வருவதாக அவர் கூறினார். எண்ணற்ற போராளிகள் நமது வரலாற்றில் உரிய இடத்தைப் பெற முடியாமல் போனது நாட்டின் துரதிஷ்டம் என்று பிரதமர் கூறினார், ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தத் தவறுகளை புதிய இந்தியா சரிசெய்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பகவான் தேவ்நாராயண் ஜி-யின் அறிவுரைகளையும் அவரது போதனைகளையும் முன்னோக்கி எடுத்துச் செல்வதில் குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறையினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். இது குர்ஜார் சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் என்றும், நாடு முன்னேற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு 21 ஆம் நூற்றாண்டின் இந்தக் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இன்று முழு உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்று பிரதமர் கூறினார். மேலும், உலகம் முழுவதும் இந்தியாவின் வலிமை காட்டப்பட்டுள்ளதன் மூலம் இந்த மண்ணின் போர்வீரர்களின் பெருமையும் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். இன்று, இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு, உலகின் ஒவ்வொரு முக்கிய தளத்திலும் நம்பிக்கையுடன் பேசுவதாக அவர் கூறினார். நமது தீர்மானங்களை செயலில் நிரூபிப்பதன் மூலம் உலகின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதில் சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) மற்றும் பகவான் தேவ்நாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்துடன் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
தாமரையில் தோன்றிய பகவான் தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது பிறந்த ஆண்டில், இந்தியா ஜி-20 தலைமைப் பதவியை ஏற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவச் சின்னமும் பூமியைச் சுமந்து செல்லும் தாமரையைக் குறிப்பதாக தற்செயலாக அமைந்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். சமூக ஆற்றலுக்கும் பக்திச் சூழலுக்கும் மரியாதை செலுத்துவதாகக் கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மலசேரி துக்ரியின் தலைமை குரு திரு ஹேம்ராஜ் ஜி குர்ஜார், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுபாஷ் சந்திர பஹேரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
भगवान देवनारायण और जनता जनार्दन, दोनों के दर्शन करके मैं धन्य हो गया हूं: PM @narendramodi in Bhilwara, Rajasthan pic.twitter.com/UQRYUMc1DW
— PMO India (@PMOIndia) January 28, 2023
भारत सिर्फ एक भूभाग नहीं है, बल्कि हमारी सभ्यता की, संस्कृति की, सद्भावना की, संभावना की एक अभिव्यक्ति है। pic.twitter.com/6t9gDge8tv
— PMO India (@PMOIndia) January 28, 2023
भारत की हजारों वर्षों की यात्रा में समाजशक्ति की बहुत बड़ी भूमिका रही है। pic.twitter.com/FGUhCV9RpZ
— PMO India (@PMOIndia) January 28, 2023
बीते 8-9 वर्षों से देश समाज के हर उस वर्ग को सशक्त करने का प्रयास कर रहा है, जो उपेक्षित रहा है, वंचित रहा है। pic.twitter.com/fNAjuP7ZJZ
— PMO India (@PMOIndia) January 28, 2023
हम सभी अपनी विरासत पर गर्व करें, गुलामी की मानसिकता से बाहर निकलें और देश के लिए अपने कर्तव्यों को याद रखें। pic.twitter.com/FPWwXlRlts
— PMO India (@PMOIndia) January 28, 2023
आज पूरी दुनिया भारत की ओर बहुत उम्मीदों से देख रही है।
— PMO India (@PMOIndia) January 28, 2023
हमें अपने संकल्पों को सिद्ध कर दुनिया की उम्मीदों पर खरा उतरना है। pic.twitter.com/P8cez7pL0B