Quoteசோனாமார்க் பகுதியின் அற்புதமான மக்களோடு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு சுரங்கப்பாதை திறக்கப்படுவதன் மூலம், போக்குவரத்து இணைப்பு குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்: பிரதமர்
Quoteசோனாமார்க் சுரங்கப்பாதையானது போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர்
Quoteமேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, ஜம்மு காஷ்மீரில் அதிகம் அறியப்படாத பகுதிகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும்: பிரதமர்
Quote21-ம் நூற்றாண்டில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது: பிரதமர்
Quoteகாஷ்மீர் நாட்டின் மகுடமாகத் திகழ்கிறது. இதனை அழகாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும்: பிரதமர்

ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  "சவால்கள் இருந்த போதிலும், உறுதியான  அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து பணிகளை நிறைவேற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அழகிய பனி மூடிய மலைகள், ரம்மியமான வானிலை ஆகியவற்றைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் குறித்த புகைப்படங்களைப் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்  பகிர்ந்து கொண்டதையடுத்து அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் தனக்குள் அதிகரித்ததாக  பிரதமர் குறிப்பிட்டார். கட்சிப் பணியின் போது அடிக்கடி இப்பகுதிக்கு வருகை தந்த நாட்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். சோனாமார்க், குல்மார்க், கந்தர்பால், பாரமுல்லா போன்ற பகுதிகளில் கணிசமான நேரத்தை செலவிட்டதாகவும், பெரும்பாலும் மணிக்கணக்கில் பல கிலோமீட்டர் தூரம் நடந்தும் சென்றதாகவும் அவர் கூறினார். கடும் பனிப்பொழிவு இருந்தபோதிலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் அன்பான வரவேற்பால் கடுங்குளிர் ஒரு பொருட்டாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

|

இன்று சிறப்பான தினம் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், நாடு முழுவதும் பண்டிகைச் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவதற்காக குவிந்து வரும் மகா கும்பமேளா விழா  தொடங்கியுள்ளதை அவர் குறிப்பிட்டார். பஞ்சாப், வட இந்தியாவின் பிற பகுதிகளில் லோஹ்ரி கொண்டாட்டங்கள் குறித்தும், உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல் போன்ற பண்டிகைகள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் அவர் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். பள்ளத்தாக்கில் சில்லைக்காலனின் 40 நாள் என்பது சவாலான காலம் என்பதை குறிப்பிட்ட பிரதமர், அங்கு வசிக்கும்  மக்களின் மன உறுதியையும் பாராட்டினார். இந்த பருவகாலம்  சோனாமார்க் போன்ற சுற்றுலா தலங்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதாகவும், காஷ்மீர் மக்களின் விருந்தோம்பல் குறித்த அனுபவம்  நாடு முழுவதிலும் உள்ள  சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஜம்மு ரயில் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களுக்கு இது பரிசு என்றும் அறிவித்தார். இது மக்களின் நீண்டகால கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர்,  ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சோனமார்க் சுரங்கப்பாதை பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த சுரங்கப்பாதை சோனாமார்க், கார்கில், ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் கூறினார். பனிச்சரிவுகள், கடுமையான பனிப்பொழிவு, நிலச்சரிவுகளின் போது சாலைகள் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் சிரமங்களை இந்த சுரங்கப்பாதை குறைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த சுரங்கப்பாதை முக்கிய மருத்துவமனைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும், இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்  எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

|

சோனாமார்க் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணி 2015-ம் ஆண்டு பிஜேபி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடங்கியதாக பிரதமர் குறிப்பிட்டார்.   மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ், சுரங்கப் பாதையின் கட்டுமானப் பகுதிகள் நிறைவடைந்ததில் அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலத்தில் சோனாமார்க் பகுதிக்கான போக்குவரத்து  இணைப்பைப் பராமரிக்கும் என்றும் அப்பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் நாட்களில் ஜம்மு காஷ்மீரில் எண்ணற்ற சாலை, ரயில் இணைப்புத் திட்டங்கள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். சோனாமார்க் அருகே மற்றொரு பெரிய இணைப்புத் திட்டம் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு இயக்கப்படும் ரயில் சேவைக்கான இணைப்பிற்கும் இது வழிவகுக்கும் என்று அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக புதிய சாலைகள், ரயில்வே திட்டங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள்  அமைக்கப்பட்டு வருவதை அவர் எடுத்துரைத்தார். இந்த சுரங்கப்பாதை அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கான புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த  நாடாக இந்தியா உருவெடுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.  நாட்டின் எந்தவொரு பகுதியும் அல்லது குடும்பமும் பின்தங்கிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார். "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" என்ற உணர்வுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளன என்றும் திரு மோடி குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் ஏழைகளுக்கு கூடுதலாக 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அவர் அறிவித்தார். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், இத்திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களும் பயனடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இளைஞர்களின் கல்விக்கு உதவிடும் வகையில், நாடு முழுவதும் புதிய ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் நிறுவப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஜம்மு-காஷ்மீரில், கடந்த பத்தாண்டுகளில் பல உயர்நிலை கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அப்பகுதி இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

|

ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை விரிவான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதைகள், உயர்மட்டப்  பாலங்கள், ரோப்வே போன்ற வசதிகளின் மையமாக மாறி வருகிறது என்றும், உலகின் மிக உயரமான சுரங்கப்பாதைகள், மிக உயர்ந்த ரயில்-சாலைப் பாலங்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார். அண்மையில் நிறைவடைந்த செனாப் பாலத்தின் பொறியியல் அதிசயம் குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். காஷ்மீரின் ரயில் இணைப்பை மேம்படுத்தும் கேபிள் பாலம், ஜோஜிலா, செனானி நஷ்ரி, சோனாமார்க் சுரங்கப்பாதை திட்டங்கள், உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அவர் குறிப்பிட்டார். சங்கராச்சாரியார் கோயில், ஷிவ்கோரி, பால்டால்-அமர்நாத் ரோப்வேஸ் மற்றும் கத்ரா-தில்லி விரைவுச் சாலைத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீரில் நான்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், இரண்டு வட்டச் சாலைகள் உட்பட ரூ.42,000 கோடிக்கும் அதிகமான இணைப்புச் சாலை  திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். சோனாமார்க் போன்ற 14-க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருவதாகவும், இது ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு புதிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்து அவர் எடுத்துரைத்தார். "2024-ம் ஆண்டில், 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் சோனாமார்க்கில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும்"  திரு மோடி குறிப்பிட்டார். இந்த வளர்ச்சி உணவகங்கள், விடுதிகள், தாபாக்கள், துணிக்கடைகள், டாக்ஸி சேவைகள் உள்ளிட்ட உள்ளூர் வர்த்தகங்களுக்கு பயனளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

|

"21-ம் நூற்றாண்டில் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது" என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தின் கடினமான நாட்களை கடந்து, "பூலோக சொர்க்கம்" என்ற அடையாளத்தை ஜம்மு காஷ்மீர் மீண்டும் பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். லால் சௌக்கில் மக்கள் தற்போது இரவு நேரங்களிலும் ஐஸ்கிரீம் அருந்தி மகிழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். போலோ வியூ சந்தையை ஒரு புதிய வாழ்விட மையமாக மாற்றியதற்காக உள்ளூர் கலைஞர்களை அவர் பாராட்டினார். இசைக்கலைஞர்கள், கலைஞர்கள், பாடகர்கள் அடிக்கடி இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், ஸ்ரீநகரில் உள்ள மக்கள் தற்போது திரையரங்குகளில் தங்கள் குடும்பத்தினருடன் வசதியாக திரைப்படங்களைப் பார்த்து வருவதாகவும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கி வருவதாகவும் பிரதமர் கூறினார். இதுபோன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களை மத்திய அரசால் மட்டுமே சாத்தியமாக்க முடியாது என்று கூறிய அவர், ஜனநாயகத்தை வலுப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்ததற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் அவர்  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், விளையாட்டில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.  சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச மாரத்தான் ஓட்டம் பற்றி கூறிய பிரதமர், அதை நேரில் பார்வையிட்டவர்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக கூறினார். தில்லியில் நடந்த கூட்டத்தின் போது மாரத்தான் போட்டியில் முதலமைச்சர் பங்கேற்ற வீடியோ பதிவையும், அது குறித்து உற்சாகமாக அவர்கள் விவாதித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இது உண்மையிலேயே ஜம்மு காஷ்மீரின் புதிய சகாப்தம் என்பதை ஒப்புக் கொண்ட திரு மோடி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் லீக் போட்டி, அழகிய தால் ஏரியைச் சுற்றி நடந்த கார் பந்தயக் காட்சிகள் ஆகியவற்றையும் குறிப்பிட்டார். நான்கு கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்திய குல்மார்க் இந்தியாவின் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் தலைநகராக உருவெடுத்து வருவதாகவும், இதன் 5-வது பதிப்பு அடுத்த மாதம் தொடங்குவதாகவும் அவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தில் 90-க்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்பட்டு, 4,500 உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

|

ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், ஜம்மு மற்றும் அவந்திபோராவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய தேவையை அது குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜம்முவில் உள்ள ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழக வளாகங்கள் சிறந்த கல்வியை வழங்கி வருவதாக பிரதமர் கூறினார்.  பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ஜம்மு-காஷ்மீர் அரசின் பிற திட்டங்கள் உள்ளூர் கைவினைஞர்கள், கலைஞர்களை ஊக்குவித்து வருவதாக கூறினார். சுமார் 13,000 கோடி ரூபாய் முதலீடுகளுடன், இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் வங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் ரூ.1.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.3 லட்சம் கோடியாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் வங்கிகளின மேம்பட்ட செயல்திறனையும் பிரதமர் பாராட்டினார். வங்கிகள் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், விவசாயிகள், பழத்தோட்டக்காரர்கள், கடைக்காரர்கள், தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் கடந்த காலம் வளர்ச்சியின் நிகழ்காலமாக மாறியிருப்பது குறித்து குறிப்பிட்ட திரு மோடி, அதன் மகுடமாக திகழும் காஷ்மீரின் முன்னேற்றம் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கனவை நனவாக்கும் என்று கூறினார். காஷ்மீர்  அழகாகவும், வளமாகவும் மாற வேண்டும் என்ற தனது விருப்பத்தை  வெளிப்படுத்திய பிரதமர், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் தொடர்ந்து அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களது கனவுகளை நனவாக்க விடாமுயற்சியுடன் பணியாற்றி வருவதாகவும், இப் பிராந்தியம், நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  மக்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதுடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

 

|

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், திரு அஜய் தம்தா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

|

பின்னணி

சுமார் 12 கி.மீ நீளமுள்ள சோனமார்க் சுரங்கப்பாதை திட்டம் ரூ.2,700 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த 6.4 கிமீ நீளமுள்ள சோனாமார்க் பிரதான சுரங்கப்பாதை, ஒரு வெளியேறும் சுரங்கப்பாதை, அணுகு சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஸ்ரீநகர், லே செல்லும் வழியில் உள்ள சோனாமார்க் இடையேயான அனைத்து பருவநிலைக்கும் பொருத்தமான வகையில் கட்டப்பட்டுள்ளது. நிலச்சரிவு, பனிச்சரிவு போன்ற காரணங்களால் போக்குவரத்தில் ஏற்படும் தடைகளைத் தவிர்க்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிக்கு பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தை இந்த சுரங்கபாபாதை உறுதி செய்யும். இது சோனாமார்க் பகுதியில்தடையற்ற போக்குவரத்தை அனைத்து பருவநிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் குளிர்கால சுற்றுலா, சாகச விளையாட்டுகள், உள்ளூர் வாழ்வாதாரங்களை அதிகரிக்கவும் உதவிடும்.

 

|

2028-ம் ஆண்டில் நிறைவடையவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதையுடன், இந்த சுரங்கப் பாதையை இணைப்பதன் மூலம் 49 கிமீ முதல் 43 கிமீ வரை பயண தூரம் குறைக்க முடியும் என்பதுடன் வாகனங்களின்  வேகத்தை மணிக்கு 30 கிமீ முதல் 70 கிமீ  வரை அதிகரிக்கவும் வழிவகுக்கும். ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு, லடாக் இடையே தடையற்ற தேசிய நெடுஞ்சாலை-1-ன் இணைப்பை இந்த சுரங்கப்பாதை உறுதி செய்யும். இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி முழுவதும் பாதுகாப்பு தளவாடங்களை கொண்டு செல்வதற்கும், பொருளாதார வளர்ச்சி, சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் உதவிடும்.

 

மிகவும் கடினமான சூழல்களிலும் கடினமாக உழைத்த கட்டுமானத் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர், இந்த பொறியியல் சாதனைக்கு அவர்களின் பங்களிப்பு குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Reinventing the Rupee: How India’s digital currency revolution is taking shape

Media Coverage

Reinventing the Rupee: How India’s digital currency revolution is taking shape
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 28, 2025
July 28, 2025

Citizens Appreciate PM Modi’s Efforts in Ensuring India's Leap Forward Development, Culture, and Global Leadership