பிரதமர் அல்பனீஸ் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.
இது நமது நாடுகளின் விரிவான உறவுகளின் ஆழத்தையும், நமது பார்வையில் உள்ள ஒருங்கிணைப்பையும், நமது உறவுகளின் முதிர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. கிரிக்கெட் மொழியில் சொல்வதானால், நமது உறவுகள் டி-20 முறையில் விரைவாக நுழைந்துவிட்டன.
மதிப்பிற்குரியவர்களே,
நீங்கள் நேற்று கூறியது போல், நமது ஜனநாயக விழுமியங்களே நமது உறவுகளின் அடித்தளமாகும். நமது உறவுகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையிலானது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் நமது இரு நாடுகளுக்கும் இடையே பாலமாக உள்ளனர். நேற்று மாலை இந்திய சமூகத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், பிரதமர் அல்பனீஸ் மற்றும் நான் இணைந்து பங்கேற்றோம். அப்போது ஹாரிஸ் பூங்காவில் 'லிட்டில் இந்தியா, பகுதியை அறிமுகம் செய்தோம். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசின் புகழை என்னால் உணர முடிந்தது.
நண்பர்களே,
இன்று, பிரதமர் அல்பனீஸ் உடனான எனது சந்திப்பில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விரிவான யுக்திசார் கூட்டுறவை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்தோம். புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக உரையாடினோம். கடந்த ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இன்று நாங்கள், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இது நமது வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலும் பலத்தையும் புதிய பரிமாணங்களையும் வழங்கும்.
சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் துறைகளில் நமது யுக்திசார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொண்டோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான உறுதியான வாய்ப்புகளை நாங்கள் கண்டறிந்தோம். பசுமை ஹைட்ரஜன் குறித்த பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலிய தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பல்வேறு துறைகளில் முதலீடுகள் குறித்து பயனுள்ள விவாதம் நடத்தினேன். இன்று நான் வர்த்தக வட்டமேசை மாநாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றி பேச இருக்கிறேன்.
இன்று, இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்தில் கூட்டுச் செயல்பாடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது நமது உறவு பாலத்தை மேலும் வலுப்படுத்தும். தொடர்ந்து வளர்ந்து வரும் நமது உறவை வலுப்படுத்த, பெங்களூரில் புதிய தூதரகத்தை ஆஸ்திரேலியா திறப்பதாக நேற்று அறிவித்தது. அதே போல் பிரிஸ்பேனில் விரைவில் புதிய இந்திய தூதரகத்தை திறக்கவுள்ளோம்.
நண்பர்களே,
ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் தொடர்பாக, நானும் பிரதமர் அல்பனீஸும் கடந்த காலங்களில் கலந்துரையாடி இருக்கிறோம். இன்றும் இந்த விஷயம் தொடர்பாக கலந்துரையாடினோம். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு யாரும் எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதை நாம் ஏற்க முடியாது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காக பிரதமர் அல்பனீசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதே நேரத்தில், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அவர் என்னிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
நண்பர்களே,
இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளின் நோக்கம் நமது இரு நாடுகளுடன் தொடர்புடையதாக மட்டும் நின்றுவிடுவதில்லை. இது பிராந்திய ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் உலக நலனுடன் தொடர்புடையதாகும். சில நாட்களுக்கு முன்பு, ஹிரோஷிமாவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில், பிரதமர் அல்பனீசுடன், இந்தோ-பசிஃபிக் பற்றி விவாதித்தோம். இந்தியா - ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு உலகில் வளர்ச்சியடையாத தென் பகுதி நாடுகளின் முன்னேற்றத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கும் இந்திய பாரம்பரியமான வசுதைவ குடும்பகம் என்பது, இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்துக்கான மையக் கருப்பொருளாகும். ஜி-20 கூட்டமைப்பில் இந்தியாவின் முன்முயற்சிகளுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் ஆதரவுக்காக நான் பிரதமர் அல்பனீசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா வருமாறு பிரதமர் அல்பனீஸ் மற்றும் அனைத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களையும் அழைக்கிறேன். அந்த நேரத்தில், கிரிக்கெட்டுடன், தீபாவளி பண்டிகையின் பிரமாண்டமான கொண்டாட்டத்தையும் நீங்கள் காணலாம்.
மதிப்பிற்குரியவர்களே,
இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்காக உங்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி!
பொறுப்பு துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிப்பெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.