யூடியூப் ஃபேன்ஃபெஸ்ட் இந்தியா 2023 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று யூடியூப் பதிவர்களிடையே உரையாற்றினார். யூடியூபில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர், இந்த ஊடகத்தின் மூலம் உலகளாவிய தாக்கத்தை உருவாக்கும் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
யூடியூப் பதிவர் சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், தமது 15 ஆண்டு யூடியூப் பயணத்தை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, சக யூடியூபராக இன்று இங்கு வந்துள்ளேன் என்றார். தமது யூடியூப் சேனல் மூலம் தாம் நாடு மற்றும் உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், தமக்கும் நல்ல எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் உள்ளனர் என்றார்.
5,000 படைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ள படைப்பாளிகளைக் கொண்ட ஒரு பெரிய சமூகம் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கேமிங், தொழில்நுட்பம், உணவு பிளாக்கிங், பயண பதிவர்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பதிவுகளை இடுபவர்களை படைப்பாளிகளாக குறிப்பிட்டார்.
இந்திய மக்கள் மீது உள்ளடக்க படைப்பாளிகளின் தாக்கத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த தாக்கத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வாய்ப்பை எடுத்துரைத்தார். நாம் ஒன்றாக இணைந்து, நம் நாட்டில் ஒரு பரந்த மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று அவர் கூறினார். கோடிக்கணக்கான மக்களுக்கு எளிதாக கற்பிப்பதன் மூலமும், முக்கியமான விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்வதன் மூலமும் மேலும் பல நபர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வலுப்படுத்துதல் பணிகளைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். நாம் அவர்களை நம்முடன் இணைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
தமது யூடியூப் சேனலில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், தேர்வு, மன அழுத்தம், திறன் மேம்பாடு போன்ற தலைப்புகளில் யூடியூப் மூலம் நம் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுடன் தாம் பேசிய வீடியோக்கள் தமக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தன என்று கூறினார்.
மக்கள் சக்தியே வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என்று கூறி மக்கள் இயக்கங்களுடன் தொடர்புடைய தலைப்புகள் குறித்துப் பேசிய பிரதமர், தூய்மை இந்தியா குறித்து முதலில் குறிப்பிட்டார். இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பெரிய இயக்கமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். குழந்தைகள் அதற்கு ஒரு உணர்ச்சி சக்தியைக் கொண்டு வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். பிரபலங்கள் அதற்கு உயரங்களைக் கொடுத்தனர் எனவும் நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்கள் அதை ஒரு பணியாக மாற்றினர் என்றும் அவர் தெரிவித்தார். தூய்மை என்பது, இந்தியாவின் அடையாளமாக மாறும் வரை இந்த இயக்கத்தை நிறுத்த வேண்டாம் என்று பிரதமர் வலியுறுத்தினார். தூய்மை என்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டாவதாக, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து பிரதமர் குறிப்பிட்டார். யு.பி.ஐ.யின் வெற்றியின் காரணமாக உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்கு 46 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த நாட்டில் மேலும் மேலும் மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில் யூடியூபர்கள், தங்களின் வீடியோக்கள் மூலம் எளிய மொழியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்ய மக்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மூன்றாவதாக, உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளித்தல் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். நமது நாட்டில் பல தயாரிப்புகள் உள்ளூர் மட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன என்றும் உள்ளூர் கைவினைஞர்களின் திறன் வியக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். யூடியூப் வீடியோக்கள் மூலம் இந்த கைவினைஞர்களை ஊக்குவிக்கவும், இந்தியாவின் உள்ளூர் அளவிலான மாற்றத்தை உலகளாவியதாக மாற்ற உதவுமாறும் யூடியூபர் சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
நமது மண்ணின் நறுமணத்தையும், இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வியர்வையையும் கொண்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை விடுத்த பிரதமர், அது கதர், கைவினைப் பொருட்கள், கைத்தறி அல்லது வேறு என எதுவாக இருந்தாலும், தேசத்தை விழித்தெழச் செய்யுமாறும் ஒரு இயக்கத்தைத் தொடங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு யூடியூபரும் தங்கள் வீடியோக்களின் முடிவில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூறி அதையே அவரும் கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். "எனது சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும், எனது அனைத்து வீடியோக்கள் தொடர்பான தகவல்களையும் பெற பெல் ஐகானைத் தட்டவும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.