அவையில் உரையாற்றிய பிரதமர், இன்றைய நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது, மறக்க முடியாதது என்று குறிப்பிட்டார். மக்களவையில் தனது உரையை நினைவுகூர்ந்த அவர், இந்தச் சிறப்பான தருணத்தில் மாநிலங்களவையில் உரையாற்ற வாய்ப்பளித்ததற்காக அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
மாநிலங்களவை நாடாளுமன்றத்தின் மேலவையாகக் கருதப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டுக்கு வழிகாட்டும் அதே வேளையில், அரசியல் உரையாடல்களின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பால் எழும் தீவிர அறிவுசார் விவாதங்களின் மையமாக அவை மாற வேண்டும் என்ற அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். "இது நாட்டின் இயல்பான எதிர்பார்ப்பு" என்று கூறிய பிரதமர், தேசத்திற்கான இத்தகைய பங்களிப்புகள் நடவடிக்கைகளின் மதிப்பை அதிகரிக்கின்றன என்று குறிப்பிட்டார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மேற்கோள் காட்டிய பிரதமர், நாடாளுமன்றம் என்பது வெறுமனே சட்டம் இயற்றும் அமைப்பு அல்ல, அது விவாத அமைப்பு. மாநிலங்களவையில் தரமான விவாதங்களைக் கேட்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு. மோடி கூறினார். புதிய நாடாளுமன்றம் என்பது புதிய கட்டிடம் மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கத்தின் சின்னமும் கூட என்று அவர் கூறினார். அமிர்த காலத்தின் தொடக்கத்தில், இந்தப் புதிய கட்டிடம் 140 கோடி இந்தியர்களுக்குப் புதிய ஆற்றலைத் தரும் என்று அவர் கூறினார்.
நாடு இனியும் காத்திருக்கத் தயாராக இல்லை என்பதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்குகளை அடைய வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற புதிய சிந்தனை மற்றும் நடைமுறையுடன் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அதற்குப் பணி மற்றும் சிந்தனையின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற கண்ணியம் தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள சட்ட மன்றங்களுக்கு இந்த அவை உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை எடுத்துரைத்த பிரதமர், பல பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ள மற்றும் நினைவுச்சின்னம் போல் நிலைத்துவிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார். "இதுபோன்ற பிரச்சினைகளைத் தொடுவது அரசியல் கண்ணோட்டத்தில் ஒரு பெரிய தவறாகக் கருதப்பட்டது" என்று கூறிய பிரதமர், மாநிலங்களவையில் தேவையான எண்ணிக்கை இல்லாவிட்டாலும் இந்தத் திசையில் பெரும் முன்னேற்றங்களை அரசு மேற்கொண்டது என்று குறிப்பிட்டார். நாட்டின் நலனுக்காகப் பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதற்கு திருப்தி தெரிவித்த அவர், உறுப்பினர்களின் முதிர்ச்சியையும் மதிநுட்பத்தையும் பாராட்டினார். "மாநிலங்களவையின் கண்ணியம் நிலைநிறுத்தப்பட்டது அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் அல்ல, திறமை மற்றும் புரிதலால்" என்று அவர் மேலும் கூறினார். இந்த சாதனைக்காக அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
ஜனநாயக அமைப்பில் ஆட்சிகளில் மாற்றம் ஏற்பட்ட போதும், தேசநலனை முதன்மையாக வைத்திருக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார்.
மாநிலங்களின் அவையாக மாநிலங்களவையின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், கூட்டுறவு கூட்டாட்சியை வலியுறுத்தும் நேரத்தில், நாடு பல முக்கியமான விஷயங்களில் பெரும் ஒத்துழைப்புடன் முன்னேறியுள்ளது என்றார். கொரோனா பெருந்தொற்று மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.
பேரிடர் காலங்களில் மட்டுமல்ல, பண்டிகைக் காலத்திலும் இந்தியா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று பிரதமர் கூறினார். 60 க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெற்ற ஜி 20 நிகழ்வுகள் மற்றும் தில்லியில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது இந்த மகத்தான நாட்டின் பன்முகத்தன்மை வெளிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார். இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியின் பலம் என்றார். புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தில் மாநிலங்களின் கலைப்பொருட்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் புதிய கட்டிடம் கூட்டாட்சி உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்றாட வாழ்க்கையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை எடுத்துரைத்த பிரதமர், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்ற முன்னேற்றங்களை இப்போது சில வாரங்களுக்குள் காண முடியும் என்று குறிப்பிட்டார். வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஒருவர் தன்னைத் துடிப்பான வழியில் வடிவமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
அரசியல் நிர்ணய சபையில், நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம். 2047 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் நூற்றாண்டு புதிய கட்டிடத்தில் கொண்டாடப்படும்போது, அது வளர்ச்சியடைந்த இந்தியாவில் ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். பழைய கட்டிடத்தில், உலகப் பொருளாதாரத்தின் அடிப்படையில் 5 வது இடத்தை அடைந்துள்ளோம் என்று கூறிய அவர் "புதிய நாடாளுமன்றத்தில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒரு பகுதியாக நாம் இருப்போம் என்று நான் நம்புகிறேன்", என்றார். "ஏழைகளின் நலனுக்காக நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், புதிய நாடாளுமன்றத்தில் அந்தத் திட்டங்களின் பாதுகாப்பை நாங்கள் அடைவோம்" என்று அவர் மேலும் கூறினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். அவையில் கிடைக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பழகிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்குமாறு அவர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பத்தை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார். மேக் இன் இந்தியா திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த முன்முயற்சியை நாடு புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் அதிகம் பயன்படுத்தி வருகிறது என்றார்.
மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நாரிசக்தி வந்தன் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், எளிமையான வாழ்க்கை பற்றி நாம் பேசும்போது, அந்த வசதியின் முதல் உரிமை பெண்களுக்கு சொந்தமானது என்றார். பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும் பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்; அவர்களின் வாழ்க்கையில் 'இருந்தால்' 'ஆனால்' என்ற அவநம்பிக்கை காலம் முடிந்துவிட்டது", என்றும் பிரதமர் கூறினார்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம் திட்டம் மக்கள் திட்டமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். ஜன்தன் மற்றும் முத்ரா திட்டங்களில் பெண்களின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டார். உஜ்வாலா, முத்தலாக் ஒழிப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான சட்டங்கள் ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார் . பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஜி 20-ன் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்தது என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினை பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ளது என்றும், ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த மசோதா முதன்முதலில் 1996 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது; அடல் அவர்களின் பதவிக்காலத்தில் பல விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் நடைபெற்றன. ஆனால் எண்ணிக்கை இல்லாததால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த மசோதா இறுதியாக சட்டமாக மாறும் என்றும், புதிய கட்டிடத்தின் புதிய ஆற்றலுடன் தேசத்தைக் கட்டமைப்பதில் 'நாரி சக்தியை' உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நாரிசக்தி வந்தன் திட்டத்தை அரசியலமைப்பு திருத்த மசோதாவாக மக்களவையில் இன்று அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது நாளை விவாதத்திற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மசோதாவின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் முழுமையாக விரிவுபடுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.
Rajya Sabha discussions have always been enriched with contributions of several greats. This august House will infuse energy to fulfill aspirations of Indians. pic.twitter.com/MKC0uXuYCU
— PMO India (@PMOIndia) September 19, 2023
नए संसद भवन में जब हम आजादी की शताब्दी मनाएंगे, वो स्वर्ण शताब्दी विकसित भारत की होगी। pic.twitter.com/Be8IGB1N39
— PMO India (@PMOIndia) September 19, 2023