மத்தியப் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணிகளில் இளையோர் சேரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் விளைவாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு சுமார் 22,400 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உன்னத பணியான ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளைப் பெற்றதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருவதை பிரதமர் வலியுறுத்தினார். “குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அறிவு, திறன், கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் மதிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் திரு மோடி கூறினார். இந்த புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மத்தியப் பிரதேசத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் ஆசிரியர் பணியிடங்களுக்கான பிரச்சாரம் மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்கள் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவதால் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பலனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி என்று பிரதமர் கூறினார். இதில் 60,000 ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக தேசிய சாதனை ஆய்வின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் கல்வியின் தரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.
விளம்பரங்களுக்கு செலவு மேற்கொள்ளப்படாமலேயே இந்த மாநிலம் 17-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மத்தியப்
பிரதேச மாநில அரசுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்றவற்றிற்கு தேவையான திறன் மேம்பாட்டிற்கு மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டிருப்பதன் விளைவாக இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது என்றார். இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், 30 திறன் மேம்பாட்டு சர்வதேச மையங்கள் திறக்கப்படும் என்றும் அதில் இளைஞர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம் மூலம் பயிற்சியளிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், சிறு கைவினைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
இன்று பணிநியமன ஆணைகளைப் பெற்றிருக்கும் ஆசிரியர்களின் மத்தியில் பேசியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஒருவருடைய வாழ்வில் தாய், ஆசிரியரின் தாக்கம் எவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதைப்போல நீங்கள் மாணவர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றார். உங்களுடைய கல்வி நாட்டின் நிகழ்காலத்தை உருவகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தையும் வளமாக்கும் நோக்கில் அமைய வேண்டும் என்று பிரதமர் திரு மோடி கூறினார். இறுதியாக பிரதமர், ஆசிரியர்கள் கற்பிக்கும் கல்வி அறிவானது மாணவர்களுக்கு நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் முன்னேற்றம் அமையும் வகையில், மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார். நீங்கள் கற்பிக்கும் சிறந்த மதிப்புகள் இன்றைய தலைமுறையினர்க்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் அதன் தாக்கம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.