பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கருத்தரங்கில் உரையாற்றினார். 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்குகளில் இதுவே கடைசியாகும்.
இந்த கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், கடந்த மூன்று ஆண்டுகளாக, பட்ஜெட்டுக்குப் பிந்தைய உரையாடல்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார். இந்த கலந்துரையாடல்களில் அனைவரும் ஆக்கப்பூர்வமாக பங்கு பெற்றதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பட்ஜெட்டை உருவாக்குவது பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதனை செயல்படுத்துவதற்கான சிறந்த வழிகளைப் பற்றி விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கலந்துரையாடல்கள், ஒரு புதிய அத்தியாயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்படும் விவாதங்கள் இங்கும் நடத்தப்படுவதாகவும், இங்கு பெறப்படும் ஆலோசனைகள் மிகவும் பயனளிக்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இன்றைய இணைய வழி கலந்துரையாடல் கோடிக்கணக்கான இந்தியர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். ‘திறன் இந்தியா இயக்கம் மற்றும் திறன் வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள்’ மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இலக்கு வைத்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த சிந்தனையின் விளைவுதான் பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்று பிரதமர் கூறினார். இத்திட்டத்தின் அவசியத்தையும், ‘விஸ்வகர்மா’ என்ற பெயரின் முக்கியத்துவத்தையும் விளக்கிய பிரதமர், இந்திய நெறிமுறைகளில் விஸ்வகர்மாவின் மதிப்பு மற்றும் கருவிகளுடன் கைகளால் வேலை செய்பவர்களை மதிக்கும் செழுமையான பாரம்பரியம் குறித்து பேசினார்.
ஒரு சில துறைகளின் கைவினை கலைஞர்கள் கவனத்தை ஈர்த்தாலும், தச்சர்கள், கொல்லர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் மற்றும் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் பல வகை கைவினை கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப மாறிவருகின்றனர் என பிரதமர் கூறினார்.
“உள்ளூர் கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் சிறு கைவினை கலைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டம் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் கூறினார். பழங்கால இந்தியாவில், பல திறமையான கைவினை கலைஞர்கள், ஏற்றுமதிக்கு பங்களித்ததாக அவர் தெரிவித்தார். இந்த திறமையான பணியாளர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதாகவும், அடிமைப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் அவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதன் விளைவாக, திறமை மற்றும் கைவினைத்திறனுள்ள பலர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டதாகவும், இதனால் அவர்கள் வேறு இடங்களில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த உழைக்கும் வர்க்கத்தினர் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி தங்கள் திறனைப் பாதுகாத்து வந்துள்ளதுடன், அவர்கள் தங்களது அசாதாரண திறன்கள் மற்றும் தனித்துவமான படைப்புகளால் முத்திரை பதித்து வருகின்றனர் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். "திறமையான கைவினை கலைஞர்கள் தன்னம்பிக்கையான இந்தியாவின் உண்மையான அடையாளங்கள், அவர்களை புதிய இந்தியாவின் விஸ்வகர்மா என்று அரசு கருதுகிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்களுக்காகவே பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும், கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த திறமையான கைவினை கலைஞர்களுக்கே இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பிரதமர் விளக்கினார்.
கைவினைக் கலைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப திறன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். முத்ரா யோஜனா திட்டத்தில் உத்தரவாதம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கிக் கடன்களை அரசு வழங்கி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தத் திட்டம் அதிகபட்ச பலனை அளிக்க வேண்டும் என்றும், கைவினைக் கலைஞர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவைக் கொண்டு வருவதன் அவசியத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.
கைவினைப் பொருட்கள் மக்களால் ஈர்க்கப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் ஒவ்வொரு விஸ்வகர்மாவிற்கும் அரசு முழு ஆதரவு வழங்கும் எனவும் கூறினார். இதன் மூலம், எளிதான கடன்கள், தொழில்நுட்ப ஆதரவு, டிஜிட்டல் அதிகாரமளித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் மூலப்பொருட்கள் உறுதி செய்யப்படும். "பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அவர்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்" என்றும் அவர் கூறினார்.
“இன்றைய விஸ்வகர்மாக்கள் நாளைய தொழில்முனைவோராக வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், இதற்கு, அவர்களின் வணிகத்தில் நிலைத்தன்மை அவசியம்” என்று பிரதமர் கூறினார். அரசு உள்ளூர் சந்தையை மாத்திரமன்றி உலகளாவிய சந்தையையும் இலக்காகக் கொண்டு கவனம் செலுத்தி வருவதால் வாடிக்கையாளர்களின் தேவைகளும் கவனிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். அனைத்து தரப்பினரும் கைவினைக் கலைஞர்களுடன் கைகோர்த்து, அவர்கள் முன்னேற உதவ வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு களத்தில் இறங்கி விஸ்வகர்மா தோழர்களிடையே நீங்கள் செல்ல வேண்டுமெனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
கைவினைஞர்கள் மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறும் போது அவர்களை வலுப்படுத்த முடியும் என்பதை எடுத்துரைத்த பிரதமர், அவர்களில் பலர் நமது எம்எஸ்எம்இ துறைக்கு விநியோகஸ்தர்களாகவும் உற்பத்தியாளர்களாகவும் மாற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அவர்களை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களை தொழில்துறையினருடன் இணைப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றார். மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலியுறுத்திய பிரதமர், இது வங்கிகள் மூலம் பல திட்டங்களுக்கு நிதியளிக்க உதவும் எனவும் குறிப்பிட்டார்.
"இது இரு தரப்பினருக்கும் வெற்றி-வெற்றி சூழ்நிலையாக இருக்குமென பிரதமர் குறிப்பிட்டார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டி விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும். வங்கிகளின் பணம் நம்பக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்படும். மேலும் இது அரசுத் திட்டங்கள் வெகுவாக பயனளிப்பதை எடுத்துரைக்குமெனவும் பிரதமர் கூறினார். சிறந்த தொழில்நுட்பம், வடிவமைப்பு, பேக்கேஜிங் மற்றும் நிதியுதவி ஆகியவற்றிற்கு உதவுவதோடு, இணைய வர்த்தகம் மூலம் கைவினைப் பொருட்களுக்கான பெரிய சந்தையை ஸ்டார்ட்அப்கள் உருவாக்க முடியும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். பிரதமரின் கைவினைக் கலைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தனியார் துறையுடனான ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் எனவும், இதனால் தனியார் துறையின் கண்டுபிடிப்புகளையும் மற்றும் வணிக அறிவையும் அதிகரிக்க முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கான சரியான திட்டத்தை வடிவமைக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் பிரதமர் கேட்டுக்கொண்டார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களைச் சென்றடைய அரசு முயற்சித்து வருவதாகவும், அவர்களில் பலர் முதன்முறையாக அரசுத் திட்டங்களின் பலனைப் பெறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பெரும்பாலான கைவினைஞர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும், பெண்களாகவும் இருப்பதாகவும், திட்டங்களின் பலன்கள் அவர்களைச் சென்றடைய சரியான திட்டமிடல் வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார். "இதற்கு, நாம் இலக்கு வைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறி பிரதமர் தனது உரையை முடித்தார்.
The announcement of PM Vishwakarma Yojana in this year's budget has attracted everyone's attention. pic.twitter.com/mcXf2EetGY
— PMO India (@PMOIndia) March 11, 2023
Small artisans play an important role in the production of local crafts. PM Vishwakarma Yojana focuses on empowering them. pic.twitter.com/0EFc1XtRuT
— PMO India (@PMOIndia) March 11, 2023
PM Vishwakarma Yojana is aimed at development of traditional artisans and craftsmen while preserving their rich traditions. pic.twitter.com/7Clp8VwbQI
— PMO India (@PMOIndia) March 11, 2023
The Vishwakarmas of today can become entrepreneurs of tomorrow. pic.twitter.com/GD9AziCpPo
— PMO India (@PMOIndia) March 11, 2023