‘திறன் பயிற்சி மற்றும் கல்வி மூலம் இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்றபட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கத் தொடரில் இது மூன்றாவதாகும்.
கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் அமிர்த காலத்தின்போது திறன் மற்றும் கல்வி ஆகிய இரண்டும், வளர்ச்சிக்கு முக்கிய கருவிகள் என்று கூறினார். வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் அமிர்த காலப் பயணத்தை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்டில் இளைஞர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்வி முறையை மிகவும் நடைமுறை சார்ந்ததாகவும் தொழில் சார்ந்ததாகவும் மாற்றும் வகையில் அறிவிப்புகள் உள்ளதாகவும், இதன் மூலம் கல்வியின் அடித்தளம் பலப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். பல ஆண்டுகளாக கல்வி அமைப்பில் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் இல்லாமல் இருந்தது குறித்துக் கவலை தெரிவித்த பிரதமர், மாற்றத்தை ஏற்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டார். இளைஞர்களின் திறமை மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக கல்வி மற்றும் திறன் ஆகிய இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கை ஆசிரியர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த காலக் கட்டுப்பாடுகளில் இருந்து நமது மாணவர்களை விடுவித்து, கல்வி மற்றும் திறன் தொடர்பான துறைகளில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த நடவடிக்கை அரசை ஊக்குவித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
கொவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்ட பிரதமர், புதிய தொழில்நுட்பங்கள் புதிய வகையிலான வகுப்பறைகளை உருவாக்க உதவியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார். அறிவை எங்கும் அணுக முடியும் என்பதை உறுதி செய்யும் அம்சங்களில் அரசு கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், 3 கோடி உறுப்பினர்களைக் கொண்ட மின் கற்றல் தளமான ஸ்வயம் (SWAYAM) தளத்தை உதாரணமாகக் குறப்பிட்டார். மெய்நிகர் ஆய்வகங்கள் மற்றும் தேசிய டிஜிட்டல் நூலகம் ஆகியவை அறிவாற்றலின் மிகப்பெரிய ஊடகமாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். டிடிஹெச் அலைவரிசைகள் மூலம் உள்ளூர் மொழிகளில் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். தேசிய டிஜிட்டல் பல்கலைக் கழகத்தின் மூலம் இது போன்ற மேலும் பல டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்முயற்சிகள் நாட்டில் நடந்து வருவதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற எதிர்கால நடவடிக்கைகள் நமது கல்வி, திறன்கள், அறிவாற்றல் ஆகியவற்றின் முழு தன்மையையும் மாற்றி அமைக்கப் போகின்றன என அவர் தெரிவித்தார். இனி ஆசிரியர்களின் பங்கு வகுப்பறையில் மட்டும் நின்றுவிடாது என்று பிரதமர் கூறினார். கிராமம் மற்றும் நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையிலான இடைவெளி நிவர்த்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் ஆசிரியர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து நமது கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு வகையான கற்பித்தல் பொருட்களும் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.
பணியில் இருந்தவாறே கற்றல் பற்றிக் கூறிய பிரதமர், இதில் பல நாடுகள் சிறப்பு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், இந்தியா தமது இளைஞர்களுக்கு வகுப்பறைக்கு வெளியே உள்ள அனுபவங்களை வழங்குவதற்குச் சிறப்புக் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். இதற்காக நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி மற்றும் தொழில் பழகுநர் பயிற்சிகளை வழங்குவதில் மத்திய அரசின் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். தேசிய இன்டர்ன்ஷிப் தளத்தில் சுமார் 75 ஆயிரம் வேலை வழங்குவோர் உள்ளனர் என்றும் அதில் இதுவரை 25 லட்சம் நேரடி நிறுவன அனுபவப் பயிற்சிகளுக்கான (இன்டர்ன்ஷிப்) தேவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்தத் தளத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், நாட்டில் இன்டர்ன்ஷிப் கலாச்சாரத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
தொழில் பழகுநர் பயிற்சிகள் (அப்ரண்டிஸ் ஷிப்) நமது இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், இந்தியாவில் தொழில் பழகுநர் பயிற்சியை ஊக்குவிப்பதில் அரசு எடுத்து வரும் முயற்சிகளை எடுத்துரைத்தார். சரியான திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை அடையாளம் காண இந்தப் பயிற்சி, தொழில் நிறுவனங்களுக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில், தேசிய தொழில் பழகுநர் பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கன அறிவிப்பு இடம்பெற்றிருப்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இது தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான சூழலை உருவாக்குவதுடன், பயிற்சியாளர்களுக்கு உதவித் தொகை வழங்குவதிலும் தொழில்துறையினருக்கு உதவும் என்றார்.
இந்தியாவை உற்பத்தி மையமாக உலகம் பார்க்கிறது என்பதையும், நமது நாட்டில் முதலீடு செய்வதில் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டிய பிரதமர், திறமையான பணியாளர்களின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் திறமைக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவர் விளக்கினார். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் 4-வது கட்டம், வரவிருக்கும் ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகளை வழங்கி, அவரகளது திறன்களை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். இத்திட்டத்தில் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் தேவைக்கேற்ப திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ஐஓடி மற்றும் டிரோன்கள் போன்ற நான்காவது தொழில் புரட்சிக்கான துறைகளில் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் புதிய திறன் பயிற்சிகளுக்காக அதிக ஆற்றல் மற்றும் வளங்களை செலவழிக்காமல் திறன் தேடுதல் எளிதாக்கக்படும் என்று அவர் தெரிவித்தார். பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை புதிய சந்தைகளுக்கு ஏற்பத் தயார்படுத்தவும், அவர்களின் தயாரிப்புகளுக்கு சிறந்த விலை கிடைக்கவும் உதவும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா கவுசல் சம்மான் யோஜனா என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில் கல்வித் துறையில் விரைவான மாற்றங்களைக் கொண்டுவருவதில் கல்வித்துறை மற்றும் தொழில்துறை இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். சந்தைத் தேவைக்கேற்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஆராய்ச்சித் துறையில் போதுமான நிதியுதவிக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட் குறித்துக் கூறிய பிரதமர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான 3 உயர் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைக் குறிப்பிட்டார். இது தொழில்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து செயல்படுவதை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் -ஐசிஎம்ஆர்-ரின் ஆய்வகங்கள் இப்போது மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் இதுபோன்ற ஒவ்வொரு நடவடிக்கையையும் அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தனியார் துறையினரைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
'ஒட்டுமொத்த அரசும்' என்ற அணுகுமுறைக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிய பிரதமர், கல்வி மற்றும் திறன் மேம்பாடு என்பது சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறைக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்றார். அவற்றுக்கான தேவைகள் ஒவ்வொரு துறையிலும் உள்ளது என்று அவர் கூறினார். பல்வேறு துறைகளில் வரும் வாய்ப்புகளை ஆய்வு செய்து, தேவையான பணியாளர்களை உருவாக்க உதவுமாறு திறன் மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்களைப் பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை உதாரணமாகக் கூறிய அவர், இது நாட்டில் பயண மற்றும் சுற்றுலாத் துறை வளர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது என்றார். அதே நேரத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்புக்கான கதவுகளையும் இது திறக்கிறது என்று அவர் கூறினார். திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தளத்தை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் வருகைக்குப் பிறகு இந்தியாவின் பயிற்சி பெற்ற பணியாளர்கள் பின்தங்கி விடக்கூடாது என்றும், இதைக் கவனத்தில் கொண்டு பணியாற்றுமாறும் தொழில்துறை வல்லுநர்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தித் தமது உரையை நிறைவு செய்தார்.
विकसित भारत के विज़न को लेकर देश की अमृतयात्रा का नेतृत्व हमारे युवा ही कर रहे हैं। pic.twitter.com/UzdRqpQq9A
— PMO India (@PMOIndia) February 25, 2023
वर्षों से हमारा education sector, rigidity का शिकार रहा।
— PMO India (@PMOIndia) February 25, 2023
हमने इसको बदलने का प्रयास किया है। pic.twitter.com/oColTAyXZt
आज सरकार ऐसे tools पर फोकस कर रही है, जिससे ‘anywhere access of knowledge’ सुनिश्चित हो सके। pic.twitter.com/TlTGfEg7UT
— PMO India (@PMOIndia) February 25, 2023
आज भारत को दुनिया manufacturing hub के रूप में देख रही है।
— PMO India (@PMOIndia) February 25, 2023
इसलिए आज भारत में निवेश को लेकर दुनिया में उत्साह है।
ऐसे में skilled workforce आज बहुत काम आती है। pic.twitter.com/o8OrPU8M4y