உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி உலகின் அனைத்து நாடுகளுக்கும் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளான, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது என்று பிரதமர் தெரிவித்தார். “ஒருபக்கம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடைசெய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.
21-ம் நூற்றாண்டின் இந்தியா, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் தெளிவான திட்டத்தோடு முன்னோக்கிச் செல்கிறது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தொலைநோக்கில் சமச்சீர் நிலையை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை குறி்ப்பிட்ட பிரதமர், ஏழையிலும் ஏழையாக உள்ளவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுவதாக கூறினார். எதிர்காலத்தின் எரிசக்தி தேவையையும் மனதில் கொண்டு மாபெரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். “கடந்த ஒன்பது ஆண்டுகளில் பசுமை மற்றும் தூய எரிசக்தி மீது முன்னெப்போதும் இல்லாத கவனத்தை இந்தியா செலுத்தியுள்ளது” என்று கூறிய பிரதமர், மக்களின் பணத்தை சேமிப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், சூரியமின்சக்தி, எல்இடி விளக்குகள் போன்றவற்றை உதாரணங்களாக எடுத்துக்காட்டி இவை எவ்வாறு உதவி செய்துள்ளன என்பதை எடுத்துரைத்தார். உலகளாவிய நோய்த் தொற்று காலத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை இந்தியா தொடங்கியது என்றும், ரசாயன உரங்களில் இருந்து நிலத்தையும், நீரையும் பாதுகாக்க இயற்கை வேளாண்மையை நோக்கி பெரும் நடவடிக்கைகளை எடுத்தது என்றும் கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் சதுப்பு நிலங்கள் மற்றும் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவில் முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கூறினார். பசுமை எதிர்காலம், பசுமைப் பொருளாதாரம் என்ற மேலும் இரண்டு இயக்கங்கள் இன்று தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்ட அமிர்த பாரம்பரியத்திற்கான பொதுமக்களின் பங்களிப்புடன் ராம்சர் பகுதிகளை பாதுகாப்பது உறுதிசெய்யப்படும் என்று கூறினார். எதிர்காலத்தில் ராம்சர் பகுதிகள் சுற்றுச்சூழல் மிக்க சுற்றுலாவின் மையமாக திகழும் என்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசுமை வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஆதாரமாக திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டாம் திட்டமான மிஸ்தி திட்டம் நாட்டின் மாங்குரோவ் சுற்றுச்சூழல் பகுதிகளை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மாங்குரோவ் பகுதிகள் நாட்டின் ஒன்பது மாநிலங்களில் மீட்கப்படும் என்றும், இது கடல்மட்ட உயர்வு மற்றும் புயல் போன்ற பேரிடர் அபாயங்களிலிருந்து கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறினார்.
உலகின் பருவநிலையைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும், சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். வளரும் நாடுகள் வளர்ச்சியை மேற்கொண்ட பின்னர், சுற்றுச்சூழல் குறித்து கவலைத் தெரிவிக்கும் போக்கு உலகின் பெரிய மற்றும் நவீன நாடுகளுக்கிடையே இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்தகையை நாடுகள், வளர்ச்சியின் இலக்குகளை அடைந்தாலும், சுற்றுச்சூழலுக்கான உலக நாடுகள் விலைக்கொடுக்க நேர்ந்ததாக அவர் தெரிவித்தார். வளர்ந்த நாடுகளின் தவறான கொள்கைகளால், வளரும் மற்றும் வளர்ச்சிப்பெறாத நாடுகள், பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். பல ஆண்டுகளாக சில வளர்ந்த நாடுகள், இந்த அணுகுமறையை நிறுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார். அத்தகைய நாடுகளின் முன்பாக பருவநிலை நீதி குறித்து இந்தியா விவகாரம் எழுப்பியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தில் இயற்கையும், வளர்ச்சியும் இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அவை சூழலியல் மற்றும் பொருளாதாரத்திற்கு இந்தியா கவனம் செலுத்த ஊக்கமளித்ததாக கூறினார். இதுவரை இல்லாத வகையில் இந்தியா, உள்கட்டமைப்பில் முதலீடு செய்யவதாகவும், சுற்றுச்சூழலில் சமமான கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் சூழலியலில் ஊக்கமளிப்பதன் வேறுபாடு குறித்து குறிப்பிட்டப் பிரதமர், ஒரு புறம் 4ஜி, 5ஜி விரிவாக்கம் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் நாட்டின் வனப்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகளை இந்தியா கட்டியபோதிலும், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கை சாதனை அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். நீர்வள இயக்கத்தின் மூலம் நீர் பாதுகாப்புக்காக 50ஆயிரம் அமிர்த நீர் நிலைகள் கட்டப்படுவதாகவும், உலகில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதல் 5 நாடுகளாக திகழ்வதாகவும், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாகவும், பெட்ரோலில் 20 சதவீதம் அளவிற்கு எத்தனால் கலப்புக்குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பேரிடர் மீட்பு உட்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு, சர்வதேச புலிகள் பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளின் அடித்தளமாக இந்தியா உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறையான ‘லைப்’ இயக்கம் தற்போது பொதுமக்கள் பங்கெடுக்கும் இயக்கமாக உருவெடுத்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், பருவநிலை மாறுபாட்டை எதிர்கொண்டு முறியடிக்க ஏதுவான வாழ்வியல் மாற்றத்திற்கான புதிய அணுகுமுறைகளை பரப்பி வருவதையும் சுட்டிக்காட்டினார். இந்த இயக்கம் கடந்த ஆண்டு குஜராத்தின் கெவாடியா – ஏக்தா நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே இந்த இயக்கம் சார்ந்த பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் ‘லைப்’ இயக்கம் 2 கோடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். வெறும் 30 நாட்களில் இந்த இயக்கத்தில் 2 கோடி மக்கள் தங்களது பங்களிப்பை இணைத்திருப்பதாக கூறிய பிரதமர், இந்த இயக்கத்தின் சார்பில், “எனது நகரத்திற்கு வாழ்க்கை அளிப்பது” என்ற தலைப்பில் பேரணிகளையும், விநாடி வினா போட்டிகளையும் நடத்தியிருப்பதை சுட்டிக்காட்டினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கையாக தங்களது அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்ற மந்திரத்தை லட்சக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய அவர், இயற்கைக்கு மாற்றமளித்து அதன் மூலம் உலகில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே ‘லைப்’ இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம் என்றும் எடுத்துரைத்தார். அதே நேரத்தில் எதிர் வரும் புதிய தலைமுறையின் ஒட்டு மொத்த மனித குலத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதையே ‘லைப்’ இயக்கம் குறிக்கோளாக கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
“பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ளும் நிலைப்பாடு என்பது இந்தியாவோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் ஆதரவையும் திரட்டுவதற்கான முன்முயற்சியாக இருக்கும்” என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தன்று உலக சமூகத்திற்கு தான் முன்வைத்த வேண்டுகோளை நினைவுகூர்ந்த அவர், தனிநபர்கள் மற்றும் சமூகத்தினர் இணைந்து காலநிலைக்கு உகந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான புத்தாக்க தீர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தாம் அழைப்பு விடுத்ததையும் சுட்டிக்காட்டினார். 70 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது சிறந்த கருத்துக்களையும், தலை சிறந்த தீர்வுகளையும் அளித்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், தலைசிறந்த கருத்துக்களுக்காக விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
லைப் இயக்கம் வாயிலாக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சுற்றுச்சூழலை பல மடங்கு பாதுகாக்கக் கூடிய கேடயமாக திகழ்வதாக கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார். மேலும் லைப் இயக்கத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட தலை சிறந்த கருத்துக்கள் கொண்ட தொகுப்பு இன்று வெளியிடப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய நடவடிக்கைகள் பசுமை வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு பக்கபலமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.