நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அப்போது பேசிய பிரதமர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த பெருமிதத்திற்குரியது என்றார். எனவே மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை மதிப்பு வாய்ந்ததாக இந்த நாடு பார்க்கிறது. இந்த பட்ஜெட் அமிர்த காலத்திற்கான ஒரு மைல்கல் பட்ஜெட் என்று குறிப்பிட்ட பிரதமர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். “இந்த பட்ஜெட், தற்போதைய அரசுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழிகாட்டுவதுடன், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்றாண்டுகளாக 8% தொடர் வளர்ச்சியுடன், இந்தியா, பெரிய பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் நாடாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது, ஆக்கப்பூர்வ எதிர்பார்ப்பு, முதலீடு மற்றும் செயல்திறன் காரணமாக ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அனைத்து யுத்தங்களும் தற்போது அரசியல் கட்சிகளிடையே நடந்திருந்தாலும், மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறிய பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டிற்காக போராட முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சி அரசியலைத் தாண்டி, அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் எனும் கண்ணியமான அமைப்பை பயன்படுத்தி, நாட்டிற்காக பாடுபட உறுதியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். “2029 ஜனவரியில் தேர்தல் களத்திற்குச் செல்லுங்கள்”. அதுவரை நாட்டிற்கும், அதன் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார். 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான எந்த வாய்ப்புகளையும் விட்டுவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
சில அரசியல் கட்சிகளின் எதிர்மறை அரசியல் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அவர்களது கருத்துக்கள் மற்றும் தொகுதிப் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கான வாய்ப்புகளை பெற முடியவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அனைத்து உறுப்பினர்களும், குறிப்பாக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்கள், அவர்களது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் உரையை தடுப்பதற்காக, பலத்தை காட்டும் முயற்சிகள் நடைபெறுவதை, நாட்டு மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் திரு மோடி தெரிவித்தார். “ஜனநாயக பாரம்பரியத்தில் இதற்கு இடமில்லை” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாட்டிற்காகப் பணியாற்றுவதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனரே தவிர, அரசியல் கட்சிகளின் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நினைவுபடுத்தினார். இந்த அவை அரசியல் கட்சிகளுக்கானதல்ல, மாறாக நாட்டிற்கானது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சேவையாற்றும் அமைப்பு அல்ல. மாறாக 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்றுவதற்கானது” என்றும் அவர் வலியுறுத்தினார். தமது உரையின் நிறைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வ விவாதங்களில் பங்கேற்பார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான ஆக்கப்பூர்வ கருத்துக்களைத் தான் நாடு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “எதிர் கருத்துக்கள் மோசமானவை அல்ல, மாறாக வளர்ச்சியை தடுக்கக்கூடிய எதிர்மறை கருத்துகள் தான் மோசமானவை” என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தை சாமான்ய மக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.