மகாராஷ்டிரா அரசின் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். தந்தேராவையொட்டி மத்திய அரசு மட்டத்தில் 10 லட்சம் வேலைகளை வழங்கும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து குஜராத் மற்றும் ஜம்முகாஷ்மீர் அரசுகளின் வேலைவாய்ப்பு மேளாவில் பிரதமர் உரையாற்றி வருகிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை நோக்கி மகாராஷ்டிரா அரசு குறுகிய காலத்திற்குள் முன்னேறியிருப்பது இதிலிருந்து தெளிவாகிறது. வரும் காலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் மகாராஷ்டிராவில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா அரசின் உள்துறை மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையின் சார்பில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
நாட்டின் அமிர்தகாலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதில் இந்திய இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். மாறி வரும் காலத்திற்கேற்ப வேலைகளில் வகையும் வேகமாக மாறி வருகிறது. பல்வேறு விதமான வேலைகளுக்கு அரசு உறுதியான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். முத்ரா திட்டம் உத்தரவாதம் இல்லாத கடன்களை அளித்து வருகிறது. 20 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதே போல ஸ்டார்ட் அப்கள், எம்எஸ்எம்இக்கள் ஆகியவற்றுக்கு பெருமளவு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
“தலித்-பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பொது வகுப்பினர் மற்றும் பெண்கள் அனைவருக்கும் இந்த வேலை வாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் சமமாக கிடைப்பதே அரசின் முயற்சிகளில் மிக முக்கியமான விஷயம்" என்று பிரதமர் வலியுறுத்தினார். சுயஉதவி குழுக்களில் இணைந்த 8 கோடி பெண்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
“இன்று, நாடு முழுவதும் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் அரசு செய்து வரும் சாதனை முதலீடுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன" என்று பிரதமர் தெரிவித்தார். மகாராஷ்டிராவைப் பற்றிக் குறிப்பிடுகையில், மாநிலத்திற்கு 2 லட்சம் கோடிக்கும் அதிகமான 225 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும், ரூ.50 கோடி மதிப்பிலான நவீன சாலைகளுக்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அல்லது விரைவில் பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளன என்று அவர் கூறினார். “அரசு உள்கட்டமைப்புக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடும் போது, கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று பொருளாகும்” எனக் கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.