கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார். ”அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்பு” என்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, புலிகளுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் முக்கிய நிகழ்விற்கு அனைவரும் சாட்சியாக இருப்பதாகவும், இத்திட்டத்தின் வெற்றி இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் பெருமை சேர்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புலிகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுத்ததோடு, புலிகள் நன்கு வாழக்கூடிய சுற்றுச்சூழலை இந்தியா வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில், உலகிலுள்ள 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவிலுள்ள புலிகள் காப்பகங்கள் 75 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருப்பதோடு, கடந்த பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 75 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் தற்செயலான நிகழ்வு என்றும் பிரதமர் கூறினார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து எப்படியென உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளதாகக் கூறியப் பிரதமர், அதற்கான பதில் இந்தியாவின் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் மறைந்துள்ளதாகக் கூறினார். "சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான மோதலை இந்தியா நம்பவில்லை, இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய வரலாற்றில் புலிகளின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களில் புலிகளின் ஓவியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய இந்தியாவைச் சேர்ந்த பரியா சமூகத்தினர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒர்லி சமூகத்தினர் உள்ளிட்டோர் புலியைத் தெய்வமாக வணங்குவதாகவும், இந்தியாவிலுள்ள பல சமூகங்கள் புலியை நண்பனாகவும், சகோதரனாகவும் கருதுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், துர்க்கை, ஐயப்பன் போன்ற தெய்வங்கள் புலி மீது சவாரி செய்வதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியாவின் தனித்துவமான சாதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர், "இயற்கையைப் பாதுகாப்பதைக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் நாடு இந்தியா" என்றார். உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியா, சர்வதேச பல்லுயிர் பெருக்கத்தில் 8 சதவீதம் பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகில்
அதிக புலிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் குறிப்பிட்ட பிரதமர், ஏறக்குறைய முப்பதாயிரம் யானைகளைக் கொண்டு, உலகிலேயே அதிக ஆசிய யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும், கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளதெனக் கூறினார். உலகிலேயே ஆசிய சிங்கங்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியா என்றும், 2015-ல் சுமார் 525 ஆக இருந்த அதன் எண்ணிக்கை 2020-ல் 675-ஆக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். கங்கை போன்ற நதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஒரு காலத்தில் அழியும் நிலையில் இருப்பதாகக் கருதப்பட்ட சில நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இந்த சாதனைகளுக்கு மக்களின் பங்கேற்பு மற்றும் கலாச்சாரமே காரணமெனவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட பிரதமர், "வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சுற்றுச்சூழல் செழிப்பாக இருப்பது முக்கியம்" என்றார். ராம்சார் அங்கீகாரம் கொண்ட தலங்களின் பட்டியலில் மேலும் 11 சதுப்பு நிலங்களைச் சேர்த்ததால், ராம்சார் தலங்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதெனவும் பிரதமர் கூறினார். 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2021-ம் ஆண்டில் இந்தியாவில் மேலும் 2,200 சதுர கிலோமீட்டர் காடுகள் மற்றும் மரங்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், சமூக காடுகளின் எண்ணிக்கை 43-ல் இருந்து 100-க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 9-லிருந்து 468-ஆக அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது வனவிலங்கு பாதுகாப்பிற்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த பிரதமர், சிங்கங்களின் பாதுகாப்புக்காக தான் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கூறினார். உள்ளூர் மக்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே உணர்ச்சிகரமான மற்றும் பொருளாதார உறவுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். குஜராத்தில் வேட்டையாடுதலைக் கண்காணிப்போருக்கு ரொக்கப்பரிசு வழங்கும் மித்ரா திட்டத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். மேலும், கிர் காடுகளில், சிங்கங்களின் மறுவாழ்வு மையத்தை திறந்ததையும், வனத்துறையில் பெண் காவலர்களை நியமித்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். கிர் காடுகளின் தற்போதுள்ள சுற்றுலா சூழலையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் வெற்றி பல பரிமாணங்களைக் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், இது சுற்றுலாப் பயணிகள் வருகையையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அதிகரித்ததோடு, புலிகள் காப்பகங்களில் மனிதன் - விலங்கு மோதல்களைக் குறைப்பதற்கும் வழிவகுத்தது என பிரதமர் கூறினார். "புலிகளின் இருப்பு பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் சூழலியலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறுத்தையினம் ஏறக்குறைய அழியும் நிலையில் இருந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டு, உலகில் முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் சிறுத்தை வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
சில நாட்களுக்கு முன்பு குனோ தேசிய பூங்காவில் 4 அழகான சிறுத்தை குட்டிகள் பிறந்ததை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், 75 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிறுத்தை இந்திய நிலத்தில் பிறந்துள்ளது என்றார். பல்லுயிர் பாதுகாப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
"வனவிலங்கு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பிரச்சினை அல்ல, சர்வதேச அளவிலான ஒன்று" எனக் கூறிய பிரதமர், இதில் சர்வதேச கூட்டணியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். 2019-ம் ஆண்டில், சர்வதேச புலிகள் தினத்தில், ஆசியாவில் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு எதிராக ஒரு கூட்டமைப்புக்கு தாம் அழைப்பு விடுத்த நிலையில், அதன் விரிவாக்கமே இந்த சர்வதேச புலிகள் கூட்டமைப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் பயன்களைப் பட்டியலிட்ட பிரதமர், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் அனுபவங்களில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், புலி இனங்களுடன் தொடர்புடைய முழு சுற்றுச்சூழல் அமைப்புக்கும், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியைத் திரட்டுவது எளிதாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார். "புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சிவிங்கிப்புலி ஆகிய உலகின் 7 பெரும் புலி இனங்களை பாதுகாப்பதில் சர்வதேச புலிகள் கூட்டமைப்பு கவனம் செலுத்தும்" என்று பிரதமர் விளக்கினார். இதன் மூலம், உறுப்பு நாடுகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சக நாட்டுக்கு விரைவாக உதவவும், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார். "நாம் ஒன்றிணைந்து இந்த உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு, அவற்றுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஜி-20 தலைமையில் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளை எடுத்துரைத்த பிரதமர், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கும்போது தான் மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலம் சாத்தியமாகும் எனவும் விளக்கினார். "இந்த பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது, முழு உலகத்திற்கும் உள்ளது" என்றும் பிரதமர் கூறினார். COP - 26 கூட்டத்தில் இந்தியா பெரிய இலக்குகளை நிர்ணயித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அந்த இலக்குகளை அடைய முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டு விருந்தினர்களிடம், இந்தியாவின் பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை முறை மற்றும் மரபுகளில் இருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டு செல்லும்படியும் பிரதமர் கேட்டுக் கொண்டார். பழங்குடியினர் வசிக்கும் சஹ்யாத்ரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளைக் குறிப்பிட்ட அவர், பல நூற்றாண்டுகளாக புலி உட்பட ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். இயற்கையிடமிருந்து வாங்கியும், அதற்கு திருப்பிக் கொடுத்தும் சமநிலையில் வைத்துள்ள பழங்குடி சமூகத்தின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பர்ஸ்’ என்ற ஆவணப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு, இயற்கைக்கும் உயிரினத்துக்கும் இடையிலான அற்புதமான உறவைப் பற்றிய இப்படம் நமது பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
"பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை முறை மிஷன் லைஃப்பின் (LiFE )பார்வையை அதாவது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை புரிந்துகொள்வதற்கு பெரிதும் உதவுகிறது” என்று கூறி பிரதமர் தனது உரையை முடித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
பிரதமர் சர்வதேச புலிகள் கூட்டமைப்பை (ஐபிசிஏ) தொடங்கி வைத்தார். 2019-ம் ஆண்டு ஜூலையில், ஆசியாவில் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச தலைவர்களின் கூட்டணிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் ஏழு பெரும் பூனைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்த சர்வதேச புலிகள் கூட்டமைப்பு தொடங்கப்படுகிறது. புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சிவிங்கிப்புலிகளைக் கொண்ட, நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
The success of Project Tiger is a matter of pride not only for India but for the whole world. pic.twitter.com/ucde8TPMZq
— PMO India (@PMOIndia) April 9, 2023
We do not believe in conflict between ecology and economy, but give importance to co-existence between the two. pic.twitter.com/hRv0xzsdK3
— PMO India (@PMOIndia) April 9, 2023
India is a country where protecting nature is part of culture. pic.twitter.com/0y3lLJMHeb
— PMO India (@PMOIndia) April 9, 2023
For wildlife to thrive, it is important for ecosystems to thrive.
— PMO India (@PMOIndia) April 9, 2023
This has been happening in India. pic.twitter.com/hSFkvGYlbj
Big Cats की मौजूदगी ने हर जगह स्थानीय लोगों के जीवन और वहां की ecology पर सकारात्मक असर डाला है। pic.twitter.com/L5E61uyQA3
— PMO India (@PMOIndia) April 9, 2023
Cheetahs had become extinct in India decades ago.
— PMO India (@PMOIndia) April 9, 2023
We brought this magnificent big cat to India from Namibia and South Africa.
This is the first successful trans-continental translocation of the big cat. pic.twitter.com/WLwHZXU8Gl
Protection of wildlife is a universal issue.
— PMO India (@PMOIndia) April 9, 2023
International Big Cat Alliance is our endeavour for protection and conservation of the big cats. pic.twitter.com/dLS3TRQGd4