குஜராத் அரசு வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் பெற்றவர்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டம் இரட்டிப்பாகும் என்று கூறினார். குஜராத்தில் 2-ம் முறையாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை அளித்து நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களுடைய திறனை பயன்படுத்திக்கொள்ள அரசு உறுதிப்பூண்டுள்ளதாகத் தெரிவித்தார். பெருமளவில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காக மத்திய அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அமிர்தகால உறுதிமொழிகளின் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றும் வகையில், இளைஞர்கள் பங்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பரிமாற்றம் மூலம் கடந்த ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 18 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றதற்கு இடையே, கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநில அரசின் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார். பணியாளர் சேர்ப்பு அட்டவணை மூலம் உரிய காலத்திற்குள் பணியாளர் சேர்ப்பு நடைமுறையை குஜராத் அரசு நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு மேலும் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான நடவடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். மின்னணு தளங்கள், மொபைல் செயலிகள், இணையதளங்கள் ஆகிய தொழில்நுட்ப உதவியுடன் பணியாளர் சேர்ப்பு நடவடிக்கைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் தற்போதைய அரசின் முயற்சிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், உற்பத்தியை ஊக்குவித்தல், சுய வேலைவாய்ப்புக்கான சரியான சூழலை உருவாக்குதல் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டினார். உத்தரவாதம் மிக்க நிதியுதவி மற்றும் மாறிவரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்களின் திறன் வளர்ச்சி ஆகியவற்றை அரசு கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
வளர்ச்சியின் சக்கரங்கள் இயக்கமாக மாறும்போது ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாகுவதாக பிரதமர் கூறினார். நாட்டின் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதரத் துறைகளின் வளர்ச்சிக்காக மில்லியன் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். குஜராத்தில் மட்டும் ரூபாய் 1.25 லட்சம் கோடி மதிப்பிலானத் திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூபாய் 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி கேந்திரமாகத் திகழும் என்றும் உலக நாடுகளின் நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் கூறினார். இந்தியாவில் இந்த புரட்சிக்கு இளைஞர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவித்தார். குஜராத் மாநிலம் தகோதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ரயில் எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலைக் கட்டப்பட்டு வருவதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் செமி-கண்டக்டர்களின் மிகப்பெரிய கேந்திரமாகவும் அமையும் என்றும் தெரிவித்தார்.
அரசால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சியின் முழுமையான அணுகுமுறை பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகப் பிரதமர் கூறினார். கொள்கை நிலையிலான முக்கிய மாற்றங்கள், புத்தொழில்கள் ஊக்கம் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது 90 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தொழில்கள் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும், லட்சக்கணக்கான இளைஞர்களை இவை சுயவேலைவாய்ப்புக்கு ஊக்கப்படுத்துகின்றன என்றும் கூறினார். முத்ரா திட்டம் பற்றி பேசிய பிரதமர், வங்கி உத்தரவாதம் இல்லாமல் அரசு நிதியுதவி வழங்குகிறது என்றார். சுயஉதவிக் குழுக்களில் இணைவதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தங்களின் சொந்தக்கால்களில் உறுதியுடன் நிற்கிறார்கள் என்றும், இவர்களுக்கு பலநூறு கோடி ரூபாய் நிதியுதவியை அரசு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் புதிய சாத்தியங்களைச் செயல்படுத்த பெருமளவில் திறன்மிக்க மனித வளத்தை தயார்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், உலகில் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான ஆற்றலை இந்தியா பெற்றுள்ளது என்றார். திறன் மேம்பாட்டில் இருந்து சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை என்பதை கோடிட்டுக்காட்டிய பிரதமர், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஏழை, எளிய, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு சமமான வாய்ப்பை இது வழங்கும் என்றார்.
பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 திறன் இந்தியா சர்வதேச மையங்கள் உருவாக்கப்படும் என்றும், இவற்றில் புதுயுக தொழில்நுட்பத்தின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் விஸ்வகர்மா திட்டம் பற்றி பேசிய அவர், இதன் மூலம் கைவினைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து சிறிய அளவிலான வணிகத்திற்கு உலக சந்தை கிடைப்பதற்கு உதவி செய்யப்படும் என்றார்.
குஜராத்தில் ஐடிஐ-களின் எண்ணிக்கையும், அவற்றின் இடங்களும் சீராக அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். குஜராத்தில் உள்ள 600க்கும் அதிகமான ஐடிஐ-களில் சுமார் 2 லட்சம் இடங்களில் பல்வேறு திறன் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவித்த திரு மோடி, குஜராத் ஐடிஐ-கள் மூலமான வேலைவாய்ப்பு வெகுசிறப்பாக உள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
நாட்டின் தனித்துவமான பொருட்களை மேம்படுத்துகின்ற கெவாடியா- ஆட்டா நகர் ஒற்றுமை சந்தை அடிப்படையில் 50 புதிய சுற்றுலா மையங்களை மேம்படுத்துவது, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஒற்றுமை சந்தையை உருவாக்குவது ஆகிய அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட்டில் செய்யப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். ஏக்லாவியா பள்ளிகளில் 40,000 ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பும் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசுப்பணி மட்டுமே இளைஞர்களின் இலக்காக இருந்தால் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி தடைபட்டுவிடும் என்றும் பிரதமர் எச்சரித்தார். அவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவர்களை இங்கே அழைத்து வந்துள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், தங்களின் வாழ்க்கை முழுவதும் முன்னேறி செல்வதற்கு உதவுகின்ற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். உங்களுடைய பணி எதுவாக இருப்பினும் உங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ள சிறப்புக் கவனம் செலுத்துங்கள். அரசு ஊழியர் ஒவ்வொருவரும் சிறந்த பயிற்சியை பெற வேண்டும் என்பதே எங்களின் முயற்சி என்பதுடன், பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.