ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை – புற்றுநோய் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார்.
புனித பூமியான கோடல் தாம் மற்றும் கோடல் மா பக்தர்களுடன் தொடர்பில் இருக்கும் பெரும் பாக்கியம் பெற்றிருப்பதாகத் தமது உரையில் பிரதமர் தெரிவித்தார். அம்ரேலியில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளை பொது நலன் மற்றும் சேவைத் துறையில் மற்றொரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது என்பதை திரு மோடி சுட்டிக் காட்டினார். ஸ்ரீ. கோடல்தாம் அறக்கட்டளை – காக்வாட் நிறுவப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
லேவா பட்டிதார் சமூகத்தினர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சேவை, மதிப்புகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தீர்மானத்துடன் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையை நிறுவியதாகப் பிரதமர் தெரிவித்தார். அப்போதிலிருந்து, இந்த அறக்கட்டளை தனது சேவையின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்குப் பணியாற்றி வருவதாகப் பிரதமர் கூறினார். "கல்வி, விவசாயம், சுகாதாரம் என எதுவாக இருந்தாலும், இந்த அறக்கட்டளை ஒவ்வொரு திசையிலும் சிறந்த பணிகளைச் செய்துள்ளது" என்று கூறிய பிரதமர், அம்ரேலியில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை சேவை உணர்வுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக மாறும் என்றும், அம்ரேலி உள்ளிட்ட செளராஷ்டிராவின் பெரும் பகுதிக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
புற்றுநோய் போன்ற தீவிர நோய்க்கு சிகிச்சை அளிப்பது எந்தவொரு நபருக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், புற்றுநோய் சிகிச்சையில் எந்த நோயாளியும் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார். இந்தச் சிந்தனையுடன், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 30 புதிய புற்றுநோய் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், 10 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சரியான கட்டத்தில் கண்டறிய வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், கிராம மக்களிடம் புற்றுநோய் கண்டறியப்படும் நேரத்தில் அது ஏற்கனவே பரவத் தொடங்கிவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, கிராம அளவில் மத்திய அரசு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களை அமைத்துள்ளதாகவும், புற்றுநோய் உள்ளிட்ட பல கடுமையான நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையில் மருத்துவர்களுக்கும் அது அதிக உதவியாக இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், மத்திய அரசின் முயற்சிகளால் பெண்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்றார்.
கடந்த 20 ஆண்டுகளில், சுகாதாரத் துறையில், குஜராத் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும், அது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ மையமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். 2002-ம் ஆண்டு வரை குஜராத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன என்றும், இன்று அந்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் இங்கு எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இப்போது ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கூட உள்ளது என்றார் அவர். 2002 வரை குஜராத்தில் 13 பார்மசி கல்லூரிகள் மட்டுமே இருந்தன, ஆனால் அவற்றின் எண்ணிக்கை இன்று சுமார் 100 ஆக அதிகரித்துள்ளது என்றும், கடந்த 20 ஆண்டுகளில் டிப்ளமோ பார்மசி கல்லூரிகளின் எண்ணிக்கையும் 6 முதல் 30 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் சமூக சுகாதார மையங்களைத் திறப்பதன் மூலம் சுகாதாரத் துறையில் பெரிய சீர்திருத்தத்திற்கான ஒரு மாதிரியை குஜராத் முன்வைத்துள்ளது என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார், இதன் மூலம் பழங்குடியினர் மற்றும் ஏழை பகுதிகளுக்கு சுகாதார வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், குஜராத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் புற்றுநோயாளிகள் உட்பட 6 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஒரு லட்சம் கோடி ரூபாயை சேமிக்கவும் உதவியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கும் 10,000 மக்கள் மருந்தக மையங்களைத் திறந்திருப்பது குறித்தும் அவர் பேசினார். பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்துவது குறித்தும் பிரதமர் தெரிவித்தார். ரூ.30,000 கோடி செலவு செய்து நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். "புற்றுநோய் மருந்துகளின் விலையையும் அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது, இது பல புற்றுநோயாளிகளுக்கு பயனளித்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
அறக்கட்டளையுடனான தனது நீண்டகாலத் தொடர்பை எடுத்துரைத்த பிரதமர் மோடி, 9 கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக, ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பது, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இரண்டாவது - கிராம அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மூன்றாவது- உங்கள் கிராமம், வட்டாரம் மற்றும் நகரத்தை தூய்மையில் முதலிடமாக மாற்ற வேலை செய்யுங்கள். நான்காவது, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதுடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை முடிந்தவரை பயன்படுத்துதல். ஐந்தாவதாக- உள்நாட்டிற்குள் பயணம் செய்து உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துதல். ஆறாவதாக- இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஏழாவது - தினசரி உணவில் ஸ்ரீ அன்னாவை சேர்க்கவும். எட்டாவது - உடற்பயிற்சி, யோகா அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுங்கள், அதை வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குங்கள். இறுதியாக - எந்த வகையான போதைப்பொருட்கள் மற்றும் அடிமையாதலில் இருந்து விலகி இருங்கள்.
இந்த அறக்கட்டளை தனது பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடனும், திறமையுடனும் தொடர்ந்து நிறைவேற்றும் என்றும், அம்ரேலியில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் மருத்துவமனை ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக மாறும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். லேவா பட்டிதார் சமாஜ் மற்றும் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளைக்கு அவர் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அன்னை கோடாவின் அருளால் நீங்கள் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வசதி படைத்தவர்கள் திருமண வைபவங்களை நாட்டிலேயே நடத்த வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்கு செல்லும் திருமணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "மேட் இன் இந்தியா, வெட் இன் இந்தியா" என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.