விரைவு சக்தியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மத்திய பட்ஜெட் 2022- உடன் அதன் ஒருங்கிணைப்பு குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கு தொடரில் இது பிரதமரின் ஆறாவது கருத்தரங்காகும்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘விரைவு சக்தி’யை இந்த ஆண்டின் பட்ஜெட் இலக்காக வைத்துள்ளது என்று பிரதமர் கூறினார். ‘அடிப்படை கட்டமைப்பு அடிப்படையிலான வளர்ச்சி’ என்ற வழிகாட்டல் நமது பொருளாதாரத்தின் பலத்தை அசாதாரணமாக அதிகரிக்கவும், பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார். திட்டங்களை முடிப்பதில் பாரம்பரியமான வழிகளில் சம்பந்தப்பட்டவர்களிடையே ஒருங்கிணைப்பு குறைபாட்டை பிரதமர் கோடிட்டு காட்டினார். சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளிடையே தெளிவான தகவல் குறைபாடே இதற்குக் காரணமாக இருந்தது. “பிரதமரின் விரைவுசக்தி காரணமாக தற்போது அனைவரும் முழுமையான தகவலுடன் தங்களின் திட்டத்தை உருவாக்க முடியும். இது நாட்டின் ஆதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
அரசு மேற்கொள்ளும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியின் அளவை அதிகரிக்க பிரதமரின் விரைவு சக்தியின் தேவையைப் பிரதமர் வலியுறுத்தினார். “2013-14-ம் ஆண்டில் இந்திய அரசின் நேரடி மூலதனச்செலவு ரூ 1.75 லட்சம் கோடியாக இருந்தது, இது 2022-23-ம் ஆண்டில் ஏழரை லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார். “பிரதமரின் விரைவு-சக்தியிலிருந்து கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய திசையைப் பெறும். திட்டத்திற்கு ஆகும் காலத்தையும், செலவையும் இது குறைக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“கூட்டமைப்புக் கோட்பாட்டை வலுப்படுத்த எமது அரசு இந்த ஆண்டின் பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு உதவுவதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பலவகையான அடிப்படை கட்டமைப்பு மற்றும் இதர ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு இந்தத் தொகையை மாநில அரசுகள் பயன்படுத்த முடியும்” என்று திரு மோடி கூறினார். எளிதில் சென்றடைய இயலாத மலைப்பகுதிகளில் தொடர்பை மேம்படுத்தும் தேசிய கயிறு வழி மேம்பாட்டு திட்டம் பற்றி குறிப்பிட்ட அவர், வடகிழக்கிற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி பற்றியும் கூறினார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் பற்றி தெரிவித்த பிரதமர், நாட்டின் அடிப்படை கட்டமைப்பில் முதலீடு செய்ய தனியார் துறையினருக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தில் தற்போது 400க்கும் அதிகமான தரவுப் படிநிலைகள் உள்ளன என்று தெரிவித்த பிரதமர், இது தற்போதுள்ள மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு குறித்த தகவல் மட்டுமின்றி வனநிலம், தொழிற்பேட்டைகள் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது என்று கூறினார். ஒற்றை இணையப்பக்கத்தில் தேசிய பெருந்திட்டம் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்கள் இப்போது கிடைக்கின்றன என்றும், தனியார் துறையினர் தங்களின் திட்டமிடலுக்கு இவற்றை மேலும், மேலும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். “இதன் காரணமாக விரிவான திட்ட அறிக்கை நிலையிலேயே பல்வேறு வகையான அனுமதிகளும், திட்ட ஒருங்கிணைப்பை பெறுவதும் சாத்தியமாகும். இது உங்களின் உடன்பாட்டு சுமையை குறைக்கவும் உதவி செய்யும்” என்று அவர் கூறினார். தங்களின் திட்டங்கள் மற்றும் பொருளாதார மண்டலங்களுக்கு பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்ட அடிப்படையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“இன்றும் கூட இந்தியாவில் பொருள் போக்குவரத்து செலவு ஜிடிபியில் 13 முதல் 14 சதவீதம் வரை இருப்பதாகக் கருதப்படுகிறது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும். பிரதமரின் விரைவு சக்தி அடிப்படை கட்டமைப்பு திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது” என்று பிரதமர் கருத்து தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் யூஎல்ஐபி இடம் பெற்றிருப்பது பற்றி பேசிய பிரதமர் தங்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு அரசுகளால் இதற்கு ஏற்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொருள் போக்குவரத்து செலவு குறைய வழி ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். “யூஎல்ஐபி மூலம் 6 அமைச்சகங்களின் 24 டிஜிட்டல் முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது பொருள் போக்குவரத்து இணையப்பக்கத்தில் தேசிய ஒற்றைச்சாளரத்தை உருவாக்கும். இது பொருள் போக்குவரத்திற்கான செலவைக் குறைக்க உதவும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிறந்த ஒருங்கிணைப்பு மூலம் பயனுள்ள வகையில் பொருள் போக்குவரத்திற்காக ஒவ்வொரு துறையிலும் பொருள் போக்குவரத்து பிரிவு, அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு போன்ற நடவடிக்கைகள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். “பிரதமரின் விரைவு-சக்தியால் நமது ஏற்றுமதிகளுக்கும் பேருதவி கிடைக்கும், இதனால் நமது எம்எஸ்எம்இ-க்கள் உலகளவில் போட்டியிட முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு நிலை வரையிலான கட்டமைப்பு திட்டமிடலில் அரசு- தனியார் துறையின் சரியான பங்களிப்பை விரைவு-சக்தி உறுதி செய்யும்” என்று பிரதமர் கூறினார். “அரசு நடைமுறையுடன் ஒன்றிணைந்து தனியார் துறையினர் எவ்வாறு சிறந்த பயன்களை அடைய முடியும் என்பது பற்றிய சிந்தனையை இந்த இணையவழி கருத்தரங்கு உருவாக்க வேண்டும்” என்றும் திரு மோடி கூறினார்.