இந்தியாவின் நகரமயமாக்கலில் பெருமளவு முதலீடு செய்ய முன்வருமாறு, முதலீட்டாளர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். புளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பின் 3-வது வருடாந்திரக் கூட்டத்தில் இன்று, காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர், “நகரமயமாக்கலில் முதலீடு செய்ய நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்களுக்கு இந்தியாவில் மிகச்சிறந்த வாய்ப்புகள் காத்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கும் இந்தியாவில் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்ய விரும்பினால், அந்தத் துறையிலும் உங்களுக்கு இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நீடித்த தீர்வை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் முதலீடு செய்ய விரும்பினாலும், இந்தியாவில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது. இந்த வாய்ப்புகள் அனைத்தும், வலிமையான ஜனநாயகத்துடன் கிடைக்கிறது. வர்த்தகத்திற்கு உகந்த சூழல். பெரும் சந்தை வாய்ப்பு. மற்றும் உலகளவில் முதலீட்டிற்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளக்கூடிய அரசும் இந்தியாவில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பாதிப்புக்குப் பிந்தைய உலகில், புதிய தொடக்கம் தேவை என்றபோதிலும், இந்த புதிய தொடக்கம், மனநிலை மாற்றமின்றி சாத்தியமற்றது ஆகும். நடவடிக்கைகள் மட்டுமின்றி நடைமுறைகளிலும் மாற்றம் தேவை. ஒவ்வொரு துறையிலும், புதிய வழிமுறைகளை வகுப்பதற்கான வாய்ப்புகளை, பெருந்தொற்று பாதிப்பு நமக்கு வழங்கியுள்ளது. “எதிர்காலத்திற்குத் தேவையான புத்தெழுச்சி முறைகளை உருவாக்காவிட்டால், இத்தகைய வாய்ப்புகளை உலகம் நம்மிடமிருந்து பறித்துவிடும். கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய உலகின் தேவைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமது நகர்ப்புறங்களை புனரமைப்பதே, இதற்கான சிறந்த தொடக்கமாக அமையும்“ என்றும் பிரதமர் கூறினார். நகர்ப்புறங்களின் புனரமைப்பு என்ற மையக்கருத்து பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மீட்டுருவாக்கும் பணிகளில் மக்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மக்கள் தான் மிகப்பெரிய வளம் என்று கூறிய பிரதமர், சமுதாயம் தான் மிகப்பெரிய கட்டுமான வட்டம் என்பதோடு, “ நமது மிகப்பெரிய வளமே, சமுதாயம் மற்றும் வர்த்தகம், மக்கள் தான் என்பதை, தற்போதைய பெருந்தொற்று பாதிப்பு உணர்த்தியிருப்பதாகவும் தெரிவித்தார். கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய உலகம், இந்த முக்கிய அம்சம் மற்றும் அடிப்படை வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்“ என்றும் அவர் கூறினார். பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஊரடங்கு காலத்தில் சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், நீண்டகாலம் பயன்படக்கூடிய நகரங்களை உருவாக்கும்போது, தூய்மையான சுற்றுச்சூழலும் அவசியம் என்ற விதிமுறை கொண்டுவரப்பட வேண்டும், இதில் விதிவிலக்கு கூடாது என்று அவர் கூறினார். “இந்தியாவில், நகர்ப்புற வசதிகளை உள்ளடக்கிய கிராமப்புற உணர்வு கொண்ட, புதிய நகர்ப்புறங்களை உருவாக்க பெருமுயற்சி மேற்கொள்வது நமது கடமை “ என்றும் திரு.நரேந்திரமோடி தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் புதிய தொழில் தொடங்குவோம், குறைந்த விலையிலான வீட்டுவசதி, ரியல் எஸ்டேட்(ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை போன்ற புத்துயிரூட்டும் திட்டங்கள் அன்மையில் தொடங்கப்பட்டிருபபதையும் அவர் எடுத்துரைத்தார். “2022-ம் ஆண்டுக்குள் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
“,இரண்டு கட்ட நடவடிக்கை மூலமாக, 100 நவீன நகரங்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். கூட்டுறவு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தும் விதமாக, நாடுதழுவிய போட்டியாக இது கருதப்படுகிறது. இந்த நகரங்கள், சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அல்லது 30 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை தயாரித்துள்ளன. அத்துடன், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் அல்லது 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளன“ என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.