புதுதில்லி, பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதலாவது இவ்வகையான வாகன போக்குவரத்து கண்காட்சியான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024, நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். கண்காட்சியின் அரங்குகளையும் அவர் பார்வையிட்டார். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 வாகனம் மற்றும் வாகன மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் திறன்களைக் காட்டுகிறது மற்றும் கண்காட்சிகள், மாநாடுகள், வாங்குபவர்-விற்பவர் சந்திப்புகள், மாநில அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்கு மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட அரங்குகளையும் கொண்டிருக்கும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்காக இந்தியாவின் வாகனத் தொழில்துறைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்திய கண்காட்சியாளர்களின் முயற்சிகளையும் பாராட்டினார். நாட்டில் இத்தகைய பிரம்மாண்டமான மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தனக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது என்று பிரதமர் கூறினார். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 ஐ காண டெல்லி மக்களை கேட்டுக்கொண்ட பிரதமர், இது ஒட்டுமொத்த வாகனப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி இரண்டையும் ஒரே தளத்தில் கொண்டு வருகிறது என்று கூறினார்.
தனது முதல் பதவிக்காலத்தில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான மாநாட்டை நினைவுகூர்ந்த பிரதமர், பேட்டரி மற்றும் மின்சார வாகனங்கள் மீது தாம் கவனம் செலுத்தியதை நினைவுகூர்ந்தார். தனது இரண்டாவது பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண முடிந்ததற்கு திருப்தி தெரிவித்ததுடன், மூன்றாவது பதவிக்காலத்தில் வாகனப் போக்குவரத்து புதிய உயரங்களைக் காணும் என்றார்.
2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், வாகனப் போக்குவரத்து துறையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ’இதுவே சரியான தருணம், ஆகச் சிறந்த தருணம்' - என்று அவர் விடுத்த அழைப்பை மீண்டும் நினைவுகூர்ந்தார். "இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது" என்று கூறிய பிரதமர், தற்போதைய சகாப்தம் வாகனப் போக்குவரத்து துறையின் பொற்காலத்தின் தொடக்கம் என்று குறிப்பிட்டார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் அரசின் முயற்சிகளை எடுத்துக் காட்டிய பிரதமர், சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு குடிமகன் வறுமையிலிருந்து மீளும் போது, போக்குவரத்து சாதனங்கள் அது சைக்கிள், இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும், அவர்களின் முதல் தேவையாக மாறுகிறது என்று அவர் வலியுறுத்தினார். ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தைத் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அத்தகைய பொருளாதார அடுக்கில் காணப்படும் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். விரிவடைந்து வரும் துறைகளும், நடுத்தர வகுப்பினரின் அதிகரித்து வரும் வருமானமும் இந்தியாவின் வாகன துறைக்கு வலு சேர்க்கும் என்று பிரதமர் கூறினார். "வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உயர்ந்து வரும் வருமானம் ஆகியவை வாகன துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்" என்று கூறிய பிரதமர், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 2014 க்கு முந்தைய 10 ஆண்டுகளில் 12 கோடியிலிருந்து 2014 க்குப் பிறகு 21 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், அதே நேரத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மின்சார கார்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 ஆயிரத்திலிருந்து இன்று 12 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை 60 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 70 சதவீதமும் அதிகரித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி மாதத்தில் கார் விற்பனை முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "வாகனப் போக்குவரத்து துறை நாட்டில் இதுவரையில்லாத சாதகமான சூழ்நிலையைக் காண்கிறது, அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில்துறை தலைவர்களை வலியுறுத்தினார்.
எதிர்காலத்தின் தேவைகளை மனதில் கொண்டு புதிய கொள்கைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என்று பிரதமர் கூறினார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூலதனச் செலவு 2 லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்தது என்றும், இன்று 11 லட்சம் கோடியாக அது உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். இது இந்தியாவின் வாகன துறைக்கு பல வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறினார். இந்த முன்னெப்போதும் இல்லாத செலவினம் ரயில், சாலை, விமான நிலையம், நீர்வழி போக்குவரத்து மற்றும் அனைத்து வகையான போக்குவரத்தையும் மாற்றியமைத்துள்ளது. அடல் சுரங்கப்பாதை முதல் அடல் சேது வரையிலான பொறியியல் அற்புதங்களை சாதனை காலக்கெடுவுக்குள் முடித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 75 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 90,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3500 கிலோ மீட்டர் அதிவேக வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 15 புதிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் கிடைத்துள்ளது, 25,000 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 40,000 ரயில் பெட்டிகளை நவீன வந்தே பாரத் வகை பெட்டிகளாக மாற்றும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பெட்டிகள் சாதாரண ரயில்களில் பொருத்தப்பட்டால், அது இந்திய ரயில்வேயில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். .
"நமது அரசின் வேகமும், அளவீடும் இந்தியாவில் போக்குவரத்து என்பதற்கான வரையறையையே மாற்றியுள்ளன" என்று பிரதமர் கூறினார். பணிகளை முறையாகவும், குறித்த நேரத்திலும் முடிப்பது குறித்து பேசிய அவர், சரக்குப் போக்குவரத்து தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார். பிரதமரின் தேசிய விரைவு சக்தி பெருந்திட்டம் நாட்டின் ஒருங்கிணைந்த போக்குவரத்தை ஊக்குவித்து வருகிறது. விமானம் மற்றும் கப்பல் குத்தகைக்கு விடுவதற்கு கிப்ட் சிட்டி ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய தளவாடக் கொள்கை தளவாடங்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது, என்றார். பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் செலவுகளைக் குறைக்கின்றன. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூன்று ரயில்வே பொருளாதார வழித்தடங்கள் நாட்டில் போக்குவரத்தை எளிதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வர்த்தகத்தை விரைவுபடுத்துவதிலும், மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை ஒழிப்பதிலும் சரக்குகள் மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மாற்றத்தக்க தாக்கத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், தொழில்துறையில் எரிபொருள் மற்றும் நேரம் இரண்டையும் மிச்சப்படுத்துவதில் ஃபாஸ்ட்-டேக் தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். "ஃபாஸ்ட்-டேக் தொழில்நுட்பம் தொழில்துறையில் எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது," என்று அவர் உறுதிப்படுத்தினார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை மேற்கோள் காட்டிய பிரதமர், ஃபாஸ்ட் டேக் தொழில்நுட்பம் மூலம் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு ரூ. 40,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
"இந்தியா இப்போது உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறுவதற்கான நுழைவாயிலில் உள்ளது, வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் தொழில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார். உலகளாவிய வாகன சந்தையில் இந்தியாவின் அந்தஸ்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, "இன்று, பயணிகள் வாகனங்களுக்கான உலகின் மூன்றாவது பெரிய சந்தையாகவும், வணிக வாகனங்களை உற்பத்தி செய்யும் உலகளவில் முதல் மூன்று நாடுகளிலும் இந்தியாவும் உள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் பல்வேறு துறைகளை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். "தொழில்துறையைப் பொறுத்தவரை, அரசு ரூ.25,000 கோடிக்கும் அதிகமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.
தேசிய மின்சார போக்குவரத்து இயக்கம் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவித்து வருவதாக பிரதமர் கூறினார். மின்சார வாகனங்களுக்கான தேவையை உருவாக்க அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஃபேம் திட்டம் தலைநகரிலும் பல நகரங்களிலும் மின்சார பேருந்துகளுக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்டார்ட்-அப்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான முடிவையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். "இந்த முடிவுகள் போக்குவரத்து துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்று பிரதமர் மோடி கூறினார். மின்சார வாகன தொழில்துறையில் விலை மற்றும் பேட்டரி போன்ற மிக முக்கியமான சவால்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த நிதியை தனது ஆராய்ச்சியில் பயன்படுத்த பரிந்துரைத்தார்.
பேட்டரி உற்பத்திக்கு இந்தியாவின் ஏராளமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வாய்ப்புகளை ஆராயவும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் போன்ற துறைகளை ஆராயவும் பிரதமர் மோடி தொழில்துறையினரை ஊக்குவித்தார். இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு பேட்டரிகள் தயாரிக்க ஏன் ஆராய்ச்சி நடத்தக்கூடாது? என்று வினவிய பிரதமர், வாகனத் துறையும் பசுமை ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் ஆராய்ச்சியை ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.
கப்பல் தொழிலில் நவீனக் கப்பல்களை உருவாக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். "இந்தியாவின் கப்பல் அமைச்சகம் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனக் கப்பல்களை தயாரிப்பதை நோக்கி முன்னேறி வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் காரணமாக இந்தியாவில் ட்ரோன் துறை புதிய வளர்ச்சி பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட திரு மோடி, ட்ரோன்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியைப் பயன்படுத்த பரிந்துரைத்தார். நீர்வழிகள் வழியாக செலவு குறைந்த போக்குவரத்து வழிமுறைகள் உருவாகி வருவதையும் குறிப்பிட்ட அவர், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனக் கப்பல்களை உருவாக்க கப்பல் அமைச்சகம் மேற்கொண்டு வருவது குறித்தும் தெரிவித்தார்.
போக்குவரத்து துறையில் ஓட்டுநர்களின் மனிதாபிமான அம்சம் குறித்தும் பிரதமர் மோடி கவனத்தை ஈர்த்தார். மேலும் லாரி ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைத்த அவர், "லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கவலையை அரசு புரிந்து கொண்டுள்ளது" என்று கூறினார். அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உணவு, சுத்தமான குடிநீர், கழிப்பறைகள், வாகன நிறுத்தம் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஓய்வு போன்ற வசதிகளுடன் கூடிய நவீனக் கட்டடங்களை உருவாக்குவதற்கான புதிய திட்டம் குறித்து தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக நாடு முழுவதும் இதுபோன்ற 1,000 கட்டடங்களை கட்ட அரசு தயாராகி வருகிறது என்று அவர் மேலும் கூறினார். சரக்கு ஊர்தி மற்றும் டாக்சி ஓட்டுநர்களின் எளிதான வாழ்க்கை மற்றும் எளிதான பயணத்திற்கு இது ஊக்கமளிக்கும் என்றும், அதன் மூலம் அவர்களின் உடல்நலம் மேம்படுவதுடன், விபத்துகளைத் தடுக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் உள்ள மகத்தான வாய்ப்புகளை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த தொழில்துறை விரைவாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். போக்குவரத்து துறையில் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களின் தேவை குறித்து பேசிய பிரதமர், நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள் இந்தத் தொழிலுக்கு மனித சக்தியை வழங்கியுள்ளன என்றார். தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப படிப்புகளை மிகவும் பொருத்தமானதாக மாற்ற தொழில்துறை தலைவர்கள் ஐ.டி.ஐ.க்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கு ஈடாக புதிய வாகனங்களுக்கு சாலை வரியில் விலக்கு அளிக்கும் அரசின் ஸ்கிராப்பேஜ் கொள்கையையும் அவர் குறிப்பிட்டார்.
எல்லைகளுக்கு அப்பால் என்ற கண்காட்சியின் மையக்கருத்தை குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகிறது என்றார். "இன்று நாம் பழைய தடைகளை உடைத்து முழு உலகையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்த விரும்புகிறோம். இந்திய வாகனத் தொழில்துறையின் முன்னால் வாய்ப்புகளின் வானம் உள்ளது" என்று வலியுறுத்திய பிரதமர் , அமிர்தகாலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கி செல்லவும், இந்தியாவை உலகத் தலைவராக மாற்றவும் வலியுறுத்தினார். விவசாயிகளின் ஒத்துழைப்புடன் டயர் தொழிலானது ரப்பருக்கான இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்திய விவசாயிகள் மீது தனக்கு உள்ள நம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர், ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை ஆதரித்தார். கூட்டத்தில் இருந்து வெளியே சிந்திக்கவும், கூட்டாக சிந்திக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து முக்கிய வடிவமைப்பு நிறுவனங்களும் இந்தியாவில் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உள்நாட்டு வடிவமைப்பு திறன்களை தொழில்துறை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யோகாவை உலகம் ஏற்றுக்கொண்டதற்கு உதாரணம் குறிப்பிட்ட பிரதமர், "நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்தால், உலகம் உங்களை நம்பும். உங்கள் பார்வை எங்கு விழுகிறதோ, அங்கிருந்து வாகனங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர் நிறைவு செய்தார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி மற்றும் மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
800-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் 50க்கும் அதிகமான நாடுகளில் இருந்து எக்ஸ்போ அதிநவீன தொழில்நுட்பங்கள், நிலையான தீர்வுகள் மற்றும் போக்குவரத்தில் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கண்காட்சியில் 28-க்கும் மேற்பட்ட வாகன உற்பத்தியாளர்களின் பங்கேற்பும், 600-க்கும் மேற்பட்ட வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். 13-க்கும் மேற்பட்ட உலகளாவிய சந்தைகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இந்த நிகழ்வில் தங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும்.
கண்காட்சி மற்றும் மாநாடுகளுடன், தேசிய மற்றும் பிராந்திய அளவில் ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கான பிராந்திய பங்களிப்புகள் மற்றும் முன்முயற்சிகளை வெளிப்படுத்த மாநிலங்களுக்கான மாநில அமர்வுகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன.
आज का भारत, 2047 तक विकसित बनने के लक्ष्य को लेकर आगे बढ़ रहा है: PM @narendramodi pic.twitter.com/ewrGSTQGfF
— PMO India (@PMOIndia) February 2, 2024
India is on the move, and is moving fast: PM @narendramodi pic.twitter.com/Gf3lRDx2mi
— PMO India (@PMOIndia) February 2, 2024
हम समुद्र और पहाड़ों को चुनौती देते हुए एक के बाद एक engineering marvel तैयार कर रहे हैं, वो भी record समय में: PM @narendramodi pic.twitter.com/g6xlcWZhxz
— PMO India (@PMOIndia) February 2, 2024
हमारी सरकार की Fame Scheme भी बहुत सफल रही है।
— PMO India (@PMOIndia) February 2, 2024
इसी स्कीम के तहत आज राजधानी दिल्ली समेत कई शहरों में हजारों इलेक्ट्रिक बसें चलनी शुरू हुई हैं: PM @narendramodi pic.twitter.com/RCsh4VF0CI
जो ट्रक चलाते हैं, जो टैक्सी चलाते हैं, वो ड्राइवर हमारी सामाजिक और आर्थिक व्यवस्था का एक अभिन्न हिस्सा हैं: PM @narendramodi pic.twitter.com/lwltLDzp1C
— PMO India (@PMOIndia) February 2, 2024