"இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பெருமிதத்திற்குரிய நாள், இது பெருமைக்குரிய நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நமது புதிய நாடாளுமன்றத்தில் இந்த உறுதிமொழி எடுக்கப்படுகிறது"
"நாளை ஜூன் 25. 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அரசியலமைப்பின் மீது ஒரு கரும்புள்ளி வைக்கப்பட்டது. அப்படி ஒரு கறை நாட்டுக்கு வராமல் பார்த்துக் கொள்ள முயற்சிப்போம்"
"சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக, ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டிற்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு வந்துள்ளது"
"அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை தேவை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் நாட்டை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது"
"எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைத்து மூன்று மடங்கு முடிவுகளை எட்டுவோம் என்று நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்"
நாட்டுக்கு கோஷங்கள் தேவையில்லை, பொருள் தேவை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை"

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால், இன்றைய நிகழ்வு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெருமைமிக்க மற்றும் புகழ்பெற்ற நாள் என்று கூறி பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். "இந்த முக்கியமான நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் மனதார வரவேற்கிறேன், அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் சாமானிய மனிதனின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு வழியாக இந்த நாடாளுமன்றம் அமைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், புதிய வேகத்தையும், புதிய உத்வேகத்தையும் எட்டுவதற்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பு என்று சுட்டிக்காட்டினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை நனவாக்குவதற்காக 18-வது மக்களவை இன்று தொடங்குகிறது என்று அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய தேர்தல் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது 140 கோடி குடிமக்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். "65 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்றனர்" என்று மகிழ்ச்சியுடன் கூறிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக, ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நாடு வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது என்றார் அவர்.

 

மூன்றாவது முறையாக அரசைத் தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்த பிரதமர் மோடி, இது அரசின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒப்புதலுக்கான முத்திரையைப் பதிப்பதாகக் கூறினார். "கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ஒரு பாரம்பரியத்தை நிறுவ முயற்சித்தோம், ஏனென்றால் ஒரு அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை தேவை என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் ஒரு நாட்டை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது" என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். 140 கோடி மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஒருமித்த கருத்தை எட்டுவதன் மூலமும், அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலமும் பாரதத் தாய்க்கு சேவையாற்ற அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.

ஒவ்வொருவரையும் அரவணைத்து இந்திய அரசியலமைப்புச் சட்ட வரம்புக்குள் முடிவெடுப்பதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், 18-வது மக்களவையில் பதவியேற்றுள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய மரபுகளின்படி 18 என்ற எண்ணின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், கீதையில் கர்மா, கடமை மற்றும் இரக்கம் பற்றிய செய்தியை வழங்கும் 18 அத்தியாயங்கள் உள்ளன, புராணங்கள் மற்றும் உப்புராணங்களின் எண்ணிக்கை 18 ஆகும், 18 இன் மூல எண் 9 என்பது முழுமையைக் குறிக்கிறது, இந்தியாவின் சட்டப்பூர்வ வாக்களிக்கும் வயது 18 ஆகும். "பதினெட்டாவது மக்களவை இந்தியாவின் அமிர்த காலம். இந்த மக்களவை அமைப்பும் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று திரு மோடி மேலும் கூறினார்.

 

நாளைய தினம் ஜூன் 25-ம் தேதி அவசரநிலை ஆட்சியின் 50-வது ஆண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இது இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு கரும்புள்ளியைப் பிரதிபலிப்பதாகக் கூறினார். ஜனநாயகத்தை நசுக்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்ட தினத்தை இந்தியாவின் புதிய தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்கு உறுதி ஏற்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம், இத்தகைய நிகழ்வு மீண்டும் எழாது. "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, துடிப்பான ஜனநாயகம் என்ற உறுதியேற்று, சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்" என்று பிரதமர் கூறினார்.

 

மூன்றாவது முறையாக இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால், அதன் பொறுப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசு முன்பை விட மூன்று மடங்கு கடினமாக உழைக்கும் என்றும், மூன்று மடங்கு பலன்களைக் கொண்டு வரும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.

 

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடு அதிகம் எதிர்பார்ப்பதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த வாய்ப்பை மக்கள் நலனுக்கும், பொதுச் சேவைக்கும் பயன்படுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சிகளின் பங்கை  நினைவுபடுத்திய பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் கண்ணியத்தைப் பராமரிக்கும் அதே வேளையில், அவர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாக ஆற்ற வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். எதிர்க்கட்சிகள் அதை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார். முழக்கங்களுக்குப் பதிலாக ஆக்கப்பூர்வ விளைவுகளையே மக்கள் விரும்புவதாக  குறிப்பிட்ட திரு மோடி, சாமான்ய மக்களின் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற  உறுதிப்பாட்டை கூட்டாக நிறைவேற்றுவதுடன், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்திருப்பது, இந்தியா விரைவில் வறுமையில் இருந்து முழுமையாக விடுபடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். "நம் நாட்டு மக்கள், 140 கோடி மக்கள், கடினமாக உழைப்பதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும்" என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்த அவை தீர்மானங்களின் சபையாக மாறும் என்றும், 18-வது மக்களவை சாமான்ய மக்களின் கனவுகளை நனவாக்கும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி தமது உரையை நிறைவு செய்த பிரதமர், அவர்கள் தங்களது புதிய பொறுப்பை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi