குஜராத்தில் உமியா மாதா கோயில் வளாகத்தை உள்ளடக்கிய மா உமியா ‘தாம்’ வளர்ச்சித் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
‘சப்காபிரயாஸ்’ என்னும் கருத்துக்கு சரியான உதாரணமாகத் திகழும் இந்த புனிதமான திட்டம் அனைவரது முயற்சியாலும் முடிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். பக்தர்கள் இந்தத் திட்டத்தில் ஆன்மீக உணர்வுடன் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், மக்களுக்கான சமூக சேவை என்பது மிகப் பெரிய வழிபாடாகும் என்று கூறினார்.
அமைப்பின் அனைத்து அம்சங்களிலும் திறன் மேம்பாடு என்பதை உள்ளடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், “நமது பண்டைக் காலத்தில் குடும்ப அமைப்பு திறமைக்கு ஒரு வழியாக இருந்தது. இது அடுத்த தலைமுறையின் பாரம்பரியமாக வந்தது. இப்போது சமூக அமைப்பு பெரிதும் மாறியுள்ளது. எனவே இதற்கேற்ப அமைப்பை நாம் மாற்ற வேண்டியுள்ளது” என்று கூறினார்.
பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் என்ற இயக்கத்திற்காக தாம் ‘உஞ்ஜா’ என்ற இடத்திற்கு தாம் வந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், அந்தப் பயணத்தின்போது பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் பெரும் சரிவு இருந்ததை சுட்டிக்காட்டினார். அந்த சவாலை ஏற்றுக் கொண்ட மக்கள், தற்போது ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இருக்கும் நிலையை ஏற்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். இதே போல மா உமியாவின் அருளாசியை நினைவுக் கூர்ந்த அவர், இந்தப் பிராந்தியத்தில் தண்ணீர் சூழலை சமாளிக்க பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை சுட்டிக்காட்டினார். சொட்டு நீர் பாசனத்தை பெருமளவில் பின்பற்றியதற்காக அவர் நன்றி தெரிவித்தார்.
மா உமியா நமது ஆன்மீக வழிகாட்டியாக இருந்தால் நமது பூமி நமது வாழ்க்கையாக மாறும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் மண்வள அட்டை திட்டத்தை பின்பற்றியிருப்பது திருப்தியளிப்பதாக அவர் கூறினார். வடக்கு குஜராத் பிராந்தியத்தில் இயற்கை வேளாண்மைக்கு மக்கள் திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இயற்கை விவசாயம், ஜீரோ விவசாயம் என்று கூறப்படுகிறது. “எனது வேண்டுகோளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நான் மாற்று வழியை கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருந்தால் குறைந்தது ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயத்தை செய்து பாருங்கள். எஞ்சிய ஒரு ஏக்கரில் வழக்கமான விவசாயத்தை செய்யுங்கள். இதையே இன்னொரு வருடம் முயற்சி செய்து பாருங்கள். அது பயனளித்தால் இரண்டு ஏக்கரிலும் இயற்கை விவசாயத்தை செய்யுங்கள். இது உங்களது செலவை குறைப்பதுடன் நிலத்திற்கு புத்துயிரூட்டும்” என்று அவர் யோசனை தெரிவித்தார். டிசம்பர் 16-ந் தேதி இயற்கை விவசாய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். புதிய பயிர் வடிவத்தை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.